30) இராணி சம்யூக்தா
இராணி சம்யூக்தா :
மூன்றாம் பிரித்விராஜ் அவரின் தந்தை சோமேஸ்வராவுக்கு பின்னர் டெல்லியில் ஆட்சி ஏறினார்.இவர் தான் சரித்திரத்தில் மஹாவீரனாக அறியப்படுபவர். பிரித்விராஜ் செளகான் என்ற பெயரில் அறியப்படுபவர். இவர் தனது 13 வயதிலையே அரசராக பதவியேற்றார். இவர் ஆறு மொழிகளில் சிறந்த புலமை வாய்ந்தவராக இருந்தார். இவர் சந்தலர்களை வென்றார். கி.பி.1187ல் குஜராத் சோலங்கி அரசனான இரண்டாம் பீமராஜனுடன் நடந்த போரில் அவரின் தளபதியான ஜகதேவாவுடன் உடன்படிக்கை கொண்டார். டெல்லி சிம்மாசனத்தில் ஏறிய பின் அங்கே கிலா ராய் பித்தோராவைக் கட்டினார். இவரது ஆட்சி வடக்கே தானேஷ்வர் முதல் தெற்கே ஜகாஷ்பூர் (மேவார்) வரையும் பரவியிருந்தது. வெல்ல முடியாத மாவீரராக திகழ்ந்து வந்தார். சாஹம்பரி செளகான்கள் வம்சத்து அரசனான இருவருக்கும் பக்கத்து நாட்டு கன்னோசியின் அரசன் ஜெயச்சந்திரனுக்கும் ஏற்கனவே பரம்பரை பகை இருந்தது. கன்னோசி அரசர் ஜெயச்சந்திரனின் மகள் தான் சம்யூக்தா. சம்யூக்தா நல்ல அறிவான புத்திசாலி பெண். அவர் பிரித்விராஜ்ஜின் வீரத்தை பற்றி கேள்விப்பட்டு அவரை மனதளவில் காதலித்து வந்தார். இந்த விஷயம் ரகசியமாக பிரித்விராஜ்க்கும் தெரிய வந்தது. கன்னோசி மன்னர் ஜெயச்சந்திரன் தனது மகள் சம்யூக்தாவிற்கு சுயம்வரம் ஏற்பாடு செய்தார். சுயம்வர வாசலில் பிரித்விராஜ்ஜின் களிமண் சிலையை வாசல் காப்பாளராக வைத்து அவரை கேவலப்படுத்தினார். சம்யூக்தா நேராக வந்து அந்த சிலைக்கு மாலையிட்டார். இதை மாறுவேடத்தில் வந்திருந்த மூன்றாம் பிரித்விராஜ் கண்டு அவரை தன் குதிரையில் ஏற்றி கடத்தி கொண்டு தன் நாட்டிற்கு போய் திருமணம் செய்து கொண்டார். இந்த நிகழ்வு கி.பி.1185ல் நடந்ததாக சொல்கிறார்கள். சம்யூக்தாவை கடத்தி சென்று திருமணம் செய்தார் என்று சொன்னாலும் சரித்திரத்தில் அந்த நிகழ்வு குறிப்பிடப்படவில்லை என்றும் பிற்காலத்தில் ஏற்பட்ட இடைசொருகல் என்றும் சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
டெல்லியை நோக்கி படையெடுத்து வந்த கஜினியின் இளவரசனாக இருந்த கோரி முகமதுவை இன்றைய அரியானா மாநிலத்திலுள்ள முதலாம் தரெய்ன் போரில் கி.பி.1191ல் மூன்றாம் பிரித்விராஜ் வென்றார். அவரை பிடித்து பின்னர் மன்னித்து விடுவித்தார். பின்னர் அடுத்த ஆண்டே கி.பி.1192ல் கோரி முகமது மீண்டும் படையெடுத்து வந்து இரண்டாம் தரெய்ன் போரில் இவரை வென்று சிறைபிடித்து சித்திரவதை செய்து கொன்றார். இந்த போரில் கன்னோசி மன்னரும் மூன்றாம் பிரித்விராஜ்ஜின் மாமனாருமான ஜெயச்சந்திரன் முகமது கோரியின் படைகளுடன் இணைந்து கொண்டதே பிரித்விராஜ் செளகானின் தோல்விக்கு காரணம். பிரித்விராஜ் போரில் தோற்றது கொல்லப்பட்டது அறிந்த ராணி சம்யூக்தா ஜோஹர் செய்து கொண்டு மாண்டார். முகமது கோரி டெல்லி அரண்மனைக்கு நுழையும் போது அவரின் சாம்பல் மட்டுமே மிஞ்சியது. பிரித்விராஜ் செளகான் ஒலியை வைத்து அதன் திசையை அம்பு கொண்டு தாக்கும் "சப்தேபி பான்" என்று சமஸ்கிருதத்தில் அழைக்கப்படும் கலையில் தேர்ந்தவர். மேலும் இவரின் கண்களை குருடாக்கி கோரிமுகம்மது ஆணையிட்டபடி அவருக்கு நெஞ்சுக்கு அம்பு விட்டு அவரை கொன்று இவரும் தன்னை தானே மாய்த்து கொண்டார் என்றும் சிலர் சொல்கிறார்கள். இது அப்பட்டமான கடைந்தெடுத்த பொய். பிரித்விராஜ் இறந்தது கி.பி.1192ல் கோரி முகமது இறந்தது கி.பி.1206ல். அதுவும் கோரி இறந்தது இன்றைய பாகிஸ்தானின் இராவல்பிண்டி அருகேயுள்ள தாமியாக் என்ற கிராமத்தில் தொழுகையின் போது வெட்டிக்கொல்லப்பட்டார். பிறகு எப்படி பிரித்விராஜன் கோரி முகமதுவை கொன்றிருக்கமுடியும்?. இதை போல் நிறைய இடைசொருகல்கள் இவர்களை பற்றி உள்ளது. போரில் வென்று கோரி முகமது ராணி சம்யூக்தாவை பலவந்தமாக கைப்பற்றினார் என்றும் அதனால் ராணி சம்யூக்தா தற்கொலை செய்து கொண்டார் என்றும் அதனால் கோபப்பட்ட ஜெயச்சந்திரன் கோரி முகமதுவின் மீது படையெடுத்து வந்தார் என்றும் அந்த போரில் ஜெயச்சந்திரன் தோற்று மாண்டு போனதாகவும் கன்னோசியையும் கோரி முகமதுவின் வசத்திற்கு வந்ததாகவும் கூறுகிறார்கள். இது கடைந்தெடுத்த பொய். ஏனெனில் டெல்லியை கைப்பற்றிய பின்னர் கன்னோசியையும் கைப்பற்றினார் என்ற காரணத்தால் இதோடு இணைத்து கதை கட்டிவிட்டனர்.
தசரத சர்மா என்ற ஆராய்ச்சியாளர் பிரித்விராஜ் ரஸோ நூலில் கூறப்பட்டது (சப்தோபி பான் மூலம் கோரியை கொன்றது) முற்றிலும் பொய் என்றும் கூறுகிறார். பிரித்விராஜ் விஜயா என்ற நூலில் பிரித்விராஜ்க்கு கங்கை நதிக்கரையில் வாழ்ந்த அழகான பெண்ணுடன் காதல் ஏற்பட்டது. அந்த பெண் தேவலோக பெண்களின் அழகை ஒத்தவர் என்பதால் அவரை தான் சம்யூக்தா என்ற சன்யோகிதா என்றும் கூறுகின்றனர். இதுவும் கூட உண்மையாக இருக்க வாய்ப்புள்ளது. எது எப்படியோ சம்யூக்தா என்பவர் பிரித்விராஜின் மனைவியாக ராணியாக இருந்தார் என்பது உண்மை. கி.பி.2022 அக்ஷய் குமார் நடிப்பில் மூன்றாம் பிரித்விராஜ்ஜை பற்றிய திரைப்படம் இந்தியில் வெளியாகி பெரும் வரவேற்ப்பை பெற்று வருகிறது. எண்ணற்ற காவிய சிறப்புகளுடன் இன்றும் சம்யூக்தா - பிரித்விராஜ் காதல் கதை போற்றப்பட்டு வருகிறது.

Comments
Post a Comment