32) இராணி ரூப்மதி

இராணி ரூப்மதி :



இந்திய சரித்திரம் கண்ட ராணிகளுள் ஒருவர். மானத்திற்கு பயந்து தன்னை தானே மாய்த்துக் கொண்ட ராணிகளின் பட்டியலில் ஒருவர். இவர் மால்வாவை (மத்திய பிரதேசம்) ஆண்ட பாஸ்பகதூர் என்ற அரசரின் மனைவி. ராணி மிகவும் அழகானவர் மட்டுமல்ல வசீகரிக்கும் குரலில் பாடும் வல்லவர். ஒருமுறை காட்டுக்குள் வேட்டையாட சென்ற பஸ்பகதூர் இவரின் அழகையும் இனிமையான குரலில் பாடுவதையும் கண்டு மயங்கி இவரை திருமணம் செய்ய ஆசைப்பட்டார். தன்னோடு வருமாறு அழைத்தவரிடம் தனது வணக்கத்திற்குரிய நர்மதை நதியின் கரையில் தான் வசிக்க வேண்டும் என்று கூற அவ்வாறே அவருக்கு மாண்டூ நகரில் நதிக்கரை அருகில் அரண்மனையை அமைத்தார். அரண்மனை தண்ணீர் தேவைகளுக்காக ரேவா குந்த் நீர்த்தேக்கம் கட்டினார். எந்நேரமும் ரூப்மதியின் இசையில் மிதந்து கொண்டே இருந்தார். நாட்டின் பாதுகாப்பை பற்றியும் சிறிதும் கவலைப்படவில்லை. இதுவே இவர்களது காதலுக்கு எமனாயிற்று.

அக்பர் மால்வாவை கைப்பற்ற ஆசைப்பட்டார். தன்னுடைய அரசுக்கு அருகிலுள்ள அரசுகளை இணைக்கும் முயற்சியில் இறங்கினார். இந்த நேரத்தில் ஆதம் கான் (இவர் தான் அக்பரின் செவிலி தாய் மகம் அகங்காவின் மகன். அக்பரின் தளபதியை கொன்றதால் மாடியிலிருந்து தலைகுப்புற வீசி சாகடிக்க அக்பரால் தண்டனை கொடுக்கப்பட்டவர்) ரூப்மதியின் அழகையும் அவரது இசையையும் பற்றி கேள்விப்பட்டு அவரை அடைய ஆசைப்பட்டார். கி.பி.1561ல் அதனால் அக்பரின் படைகளுக்கு தானே தலைமை தாங்கி வந்தார். மாண்டூ நகருக்கு வந்தவரை எதிர்கொண்டு பாஸ் பகதூரின் படைகள் மோதியது. அரண்மணை மாடியில் இருந்து ரூப்மதி போரை பார்த்து கொண்டு இருந்தார். ஆதம் கானின் பெரும்படை பாஸ் பகதூர் ஷாவின் படைகளை எளிதில் முறியடித்து அரண்மணையை அடைந்தது. பாஸ் பகதூர் உயிர் பிழைக்க கந்தேஷ்க்கு  ஒடிபோனார். அரண்மனையை அடைந்த ஆதம் கான் ரூப்மதியின் அழகை கண்டு வியந்தார். அவரிடம் பிடிபடக்கூடாது என்று ரூப்மதி தன் மானத்தை காத்துக்கொள்ள விஷம் அருந்தி உயிர் விட்டார். ஆதம் கான் மாண்டூ நகரை சூறையாடி பெரும் செல்வத்தை கொள்ளையடித்து அதில் ஒரு பகுதியை அக்பருக்கு தெரியாமல் சுருட்டி கொண்டார். மாண்டூவில் இருந்து இரண்டு அழகான பெண்களை பிடித்து கொண்டு போய் தன் மாளிகையில் சேர்க்க அந்த விவரம் அக்பருக்கு தெரியவந்து இவரது தாயிடம் விசாரிக்க அவர் அந்த இரண்டு பெண்களையும் கொன்று புதைத்து விட்டார். இது தான் மால்வா படையெடுப்பில் நிகழ்ந்த விளைவுகள். கந்தேஷ் மேல் பீர் முகமது என்ற தளபதியை அனுப்ப அவர் போரில் மரணமடைய பின்னர் சித்தூருக்கு ஒடி போன பாஸ் பகதூர் பின்னர் அக்பரிடம் சரணடைந்து அவரின் மேலாண்மையை ஏற்றுக்கொள்ள அவரை 5000 குதிரை வீரர்கள் அடங்கிய படைகளுக்கு மன்சப்தாராக்கினார்.


ராணி ரூப்மதியின் 26 கவிதைகள் அப்போது சேகரிக்கப்பட்டது. ராணியின் வாழ்க்கை வரலாறு கி.பி.1931, 1952, 1959ம் ஆண்டுகளில் பல திரைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ளது. அழகே ஆபத்தை கொண்டு வரும் என்பதற்கேற்ப ராணியின் அழகே அவரின் உயிருக்கு உலை வைத்தது. மானத்தை விட எதுவும் பெரிதல்ல என்ற ராணி ரூப்மதி விஷமருந்தி தன் உயிரை மாய்த்து கொண்ட நிகழ்வுகள் இன்றும் நாட்டுப்புற பாடல்களாக கதை கதையாக பாடல்களாக தொடர்ந்து வருகிறது.

Comments

Popular posts from this blog

145) குந்தள குமாரி சபத்

146) அம்மு சுவாமிநாதன்

137) காளி பாய்