33) குயிலி

குயிலி ( ??? - கி.பி.1780) :

சரித்திரத்தில் மகத்தான தியாகத்தை செய்தவர்களில் பெண்களும் உண்டு. அப்படிப்பட்ட தியாகத்தை செய்து உயிர்நீத்து பிறந்த நாட்டை அன்னியரிடம் இருந்து காத்த பெண்களுள் இந்த குயிலிக்கும் நிரந்தர இடமுண்டு.


இவர் சிவகங்கை மாவட்டத்திலுள்ள கூடுவான்சாவடி என்னும் கிராமத்தில் பிறந்தார். இளமையிலையே வீரத்தின் அடையாளமாக விளங்கினார். இந்த வீரம் இவரின் தாயிடமிருந்து வந்தது. இவரது தாய் தனது நிலத்திலுள்ள பயிர்பொருட்களை அழிக்க வந்த காட்டெருமையுடன் போராடி அதை வீழ்த்தினார். அதில் காயங்களுடன் இவரது தாயார் உயிர் துறந்தார். சிவகங்கை மன்னர் முத்து வடுக நாதரை சமாதானம் என்று பேசி காளையார்கோயிலில் வைத்து பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி அரசாங்கம் சுட்டு கொன்றது. சிவகங்கை சீமையை ஆங்கிலேய அரசு அபகரித்தது. இதனால் முத்து வடுக நாதரின் மனைவியான வேலு நாச்சியார் தலைமறைவாக இருந்தார். அந்த நேரத்தில் அவரது சிலம்பாட்ட ஆசிரியர் வெற்றிவேல் என்பவர் ஆங்கிலேயருக்கு உளவு பார்த்து வேலு நாச்சியாரை காட்டி கொடுக்க முயன்றார். குயிலி அதை கண்டுபிடித்து வெற்றிவேலை குத்தி கொன்றார். குயிலி தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவர் என்பதால் வெற்றிவேலை கொன்றது பெரிய அளவில் சர்ச்சைக்குரியதாகிற்று. வேலு நாச்சியார் குயிலியின் சார்பாக நின்று உண்மையை விளக்கி அவரை தன் மெய்காவல் படையின் தலைவியாக்கினார். அது மட்டுமல்லாது குயிலியே வேலு நாச்சியாரின் பெண்கள் படையின் தளபதியாக இருந்தார். இன்னொரு முறை இரவு நேரத்தில் வேலு நாச்சியார் தூங்கி கொண்டு இருந்தபோது எதிரிகள் தாக்க அவர்களை திருப்பி தாக்கி விரட்டியடித்ததில் பலத்த காயமுற்றார். அது முதலே இவர் வேலு நாச்சியாரின் உற்ற தோழியாக விளங்கினார்.


கி.பி.1780ல் வேலு நாச்சியார் ஆங்கிலேயரிடமிருந்து மானாமதுரை, திருப்பூர், திருபுவனம், காளையார் கோவில் ஆகிய இடங்களை மீட்டார். மருது பாண்டியர் மற்றும் ஹைதர் அலி உதவியுடன் சிவகங்கையை மீட்க படையெடுத்தார். சிவகங்கை கோட்டைக்குள் யாருக்கும் உள்ளே நுழைய அனுமதியில்லை. அந்த தேர்தலில் அரண்மனையில் உள்ள இராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் நவராத்திரி விஜயதசமி விழாவுக்கு கொலு தரிசனம் செய்ய பெண்களுக்கு மட்டும் அனுமதி இருந்தது. இதை பயன்படுத்தி குயிலி மற்றும் பல பெண்கள் பொதுமக்கள் மாதிரி வேடமிட்டு கோட்டைக்குள் புகுந்தனர். வெள்ளையரின் ஆயுத கிடங்கை அழித்தால் மட்டுமே வெள்ளையரை வெற்றி கொள்ள முடியும் என்று உணர்ந்து உடலில் எண்ணை பூசி தனக்கு நெருப்பிட்டு வெள்ளையரின் ஆயுத கிடங்கில் உள்ளே புகுந்து தற்கொலை போராளியாக ஆயுத கிடங்கை வெடிக்க செய்து தானும் வீர மரணம் அடைந்தார். ஆயுத கிடங்கை அழித்தவுடன் உள்ளே இருந்த பெண்கள் படை வெள்ளையரை தாக்கி கோட்டை‌ கதவுகளை திறந்து விட வேலு நாச்சியார் படை உள்ளே புகுந்து வெள்ளையர்களை வெட்டி விரட்டி சிவகங்கையை மீண்டும் கைப்பற்றியது. வெற்றிக்கு பின்னரே வேலு நாச்சியாருக்கு குயிலி  தற்கொலை படை போராளியாக எதிரிகளின் ஆயுத கிடங்கை அழித்து நாட்டின் விடுதலைக்கு போராடிய படைகளுக்கு வெற்றியை பெற்று கொடுத்தார் என்று தெரிய வந்தது.  தமிழக அரசு சிவகங்கையில் இவருக்கு சிலை வடித்து இவரின் போராட்டத்தை அங்கீகரித்து பெருமைப்படுத்தியது. தன்னுயிர் கருதாது நாட்டின் விடுதலைக்காக தன்னையே அழித்து கொண்டு போராடிய நெஞ்சுரம் கொண்ட தியாக பெண்மணிகளுள் ஒருவர் தான் இந்த குயிலி என்னும் வீரமங்கை.

Comments

Popular posts from this blog

145) குந்தள குமாரி சபத்

146) அம்மு சுவாமிநாதன்

137) காளி பாய்