36) உதா தேவி
உதா தேவி ( ??? - கி.பி.1857) :
சரித்திரத்தில் நாட்டுக்காக துப்பாக்கி ஏந்திய போராடி உயிர் விட்ட பெண் வீராங்கனைகளில் இவரும் ஒருவர். இவர் ஆவாத் (அயோத்தி) நவாப்பின் ராணியாக இருந்த பேகம் ஹஸ்ரத் மஹால் ஏற்படுத்திய சுதந்திர படையில் இணைந்து போரிட்டவர். அந்த படையில் பெண்கள் பிரிவில் இவர் தளபதியாக இருந்தார். இவரது கணவரான மக்கா பாஸி பேகம் ஹஸ்ரத் மஹாலில் படையில் இருந்தவர் தான்.
கி.பி.1857ல் நாடெங்கும் விடுதலை போராட்டம் பரவிக்கொண்டு இருந்தது. அந்த நேரத்தில் ஆவாத்தின் நவாப் பதவியை ஆங்கிலேயர்கள் பறித்தனர். அதனால் கோபமடைந்த ராணி ஹஸ்ரத் மஹால் படைகளை தயார்படுத்த ஆரம்பித்தார். அந்த நேரத்தில் பெண்கள் பிரிவில் ருதா தேவி இணைந்து அந்த படைபிரிவுக்கு தளபதியாக உயர்ந்தார். ஆங்கிலேயர்கள் ஆவாத்தை தாக்கிய போது உதா தேவியும் அவரது கணவரும் அவர்களை எதிர்த்த படையில் இருந்தனர். உதா தேவி கி.பி.1857 நவம்பர் 16ல் நடந்த சிக்கந்தர் பாக் போரில் ஆங்கிலேய படைகளுடன் மோதினார். போரின் தீவிரத்தில் இவரது கணவர் இறந்து விட்ட செய்தி கிடைத்தவுடன் தனது படைகளுக்கு உரிய கட்டளைகளை பிறப்பித்து விட்டு உயரமான மரத்தில் ஏறினார். அங்கிருந்து கனமான ஸ்னிப்பர் வகை துப்பாக்கியின் மூலம் ஆங்கிலேயர்களை குறி பார்த்து சுட ஆரம்பித்தார். அரை டஜன் ஆங்கிலேயருக்கு மேல் வீழ்ந்தவுடன் ஆங்கிலேய மேஜர் துப்பாக்கி தாக்குதல் மரங்களின் வழியே இருந்து வருகிறது என்று உணர்ந்தார். தனது படைகளுக்கு மரத்தை நோக்கி கடும் துப்பாக்கி சூடு நடத்த உத்தரவு பிறப்பித்தார். முடிவில் மரத்திலிருந்து துப்பாக்கி சூட்டினால் காயம்பட்டு விழுந்து உதா தேவி இறந்து போனார். போரின் தோல்விக்கு பின்னர் பேகம் ஹஸ்ரத் மஹால் தனது மகனுடன் நேபாளம் தப்பி சென்று அங்கேயே அடைக்கலம் புகுந்து அங்கேயே அடுத்த 20 ஆண்டுகளுக்கு பின்னர் காலமானார். ஆங்கிலேய படைகள் லக்னோவை பிடித்தது.
அரசு இவரது தியாகத்தை போற்றி லக்னோவில் உள்ள சிக்கந்தர் பாக்கில் இவரது சிலையை திறந்து வைத்தது. உத்திரப்பிரதேசத்தில் உள்ள பிலிபித் மாவட்டத்திலுள்ள உதா தேவி சார்ந்த பாஸி சமூகத்தினர் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16ம் தேதி ஒன்று கூடி இவரது தியாகத்தை நினைவு கூறுகின்றனர். நாட்டின் விடுதலைக்காக தனது கணவரை இழந்து தன்னுயிரையும் இழந்து ஆயுதமேந்தி போராடி உயிர் விட்ட தியாக பெண்மணிகளில் இவரும் ஒருவர்.

Comments
Post a Comment