37) மேடம் காமா

பிகாஜி ருஸ்தம் காமா (கி.பி.1861-1936) :

முதன்முதலில் விடுதலை போராட்டத்தில் இந்தியாவிற்கு என்று தேசிய கொடியை உருவாக்கியவர் தான் இந்த மேடம் பிகாஜி ருஸ்தம் காமா. இந்திய சரித்திரத்தில் மேடம் காமா என்ற பெயரில் அறியப்பட்டவர். அப்பழுக்கற்ற சுதந்திர போராட்ட வீரர். இந்திய விடுதலைக்காக வெளிநாடுகளிலும் ஆதரவை திரட்டியவர். 

கி.பி.1861 செப்டம்பர் 24ல் பம்பாய் மாகாணத்தில் இன்றைய குஜராத்திலுள்ள நவ்சாரியில் பார்ஸி குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தையான சொராப்ஜி ஃப்ரேம்ஜி படேல் பார்ஸிகளில் நல்ல செல்வாக்கு படைத்த மனிதராக விளங்கினார். இவர் கி.பி.1885ல் வழக்கறிஞர் ருஸ்தம் கே.ஆர்.காமா என்பவரை மணந்தார். இவர் அடிப்படையில் பெண்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டவர். ஆணும் பெண்ணும் சமமானவர்கள் என்ற கொள்கையை உடையவர். ஆனால் இவரது முற்போக்கான சிந்தனைகள் செயல்பாடுகளினால் இவருக்கும் இவரது கணவருக்கும் விரிசல் விழுந்து கணவரை விட்டு பிரிந்தார். தனது சொத்துகளை ஆதரவற்றோர் மற்றும் வயதானவர்களுக்கு எழுதி வைத்தார். தனது உடல்நிலைக்காக மருத்துவம் பார்க்க கி.பி.1902ல் இலண்டன் சென்றவர் அங்கு இந்திய விடுதலைக்காக போராடிய புரட்சிகர விடுதலை வீரர்களை சந்தித்து பேசினார். இந்தியாவிற்காக வெளிநாட்டில் இருந்தபடி புரட்சி வீரர்களுக்கு ஆயுதம் வழங்கி உதவி செய்து பயிற்சி கொடுத்தார். இலண்டனில் கி.பி.1905ல் இந்தியா ஹவுஸில் தங்கியிருந்த புரட்சியாளர்களை அடிக்கடி சந்தித்து போராட்ட நெருப்பை தூண்டி விட்டார். அவர்களுக்கு வேண்டிய உதவிகள் ஆயுதங்கள் வாங்க உதவிகளும் செய்தார். அந்த கூட்டங்களில் தான் இந்திய தேசிய கொடியை அறிமுகம் செய்தார். பின்னர் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகளில் இந்திய விடுதலைக்காக ஆதரவு திரட்டினார். கி.பி.1907ல் இந்தியா விரைவில் சுதந்திரம் அடைந்துவிடும் என்று அதற்காக ஒரு கொடியை உருவாக்கி ஜெர்மனியில் அறிமுகப்படுத்தினார். மேலே பச்சை வண்ணத்தில் இந்தியாவின் எட்டு மாநிலங்களை குறிக்கும் வகையில் எட்டு மலர்ந்த தாமரைகளும் நடுவில் மஞ்சள் வண்ணத்தில் தேவநாகிரி வரி வடிவத்தில் வந்தே மாதரம் பொறிக்கப்பட்டும் கீழே சிவப்பு வண்ணத்தில் இந்து-முஸ்ஸீம் ஒற்றுமையை வலியுறுத்தும் நோக்கில் சூரியனும் சந்திரனும் இடம் பெற்றிருந்தது. இந்த கொடி தற்போது பூனேவில் உள்ள மராத்தா மியூசியத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. கி.பி.1908ல் லண்டன் நகரிலுள்ள கேக்டன் ஹாலில் வங்காள பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் சிப்பாய் புரட்சியின் 50 ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்திற்கும் கூட்டத்தை ஏற்பாடு செய்தார். அந்த கூட்டத்தில் தான் லாலா லஜபதிராய், பிபின் சந்திர பால், வீர் சாவர்க்கர், ஹர்ஷ தயாள் மற்றும் வ.வே.சு.ஐயர் முதலிய வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் மேடம் காமா இந்திய தேசிய கொடியின் பெருமையை பற்றி குறிப்பிட்டார். முதல் உலக போரின் சமயத்தில் இந்திய விடுதலை கமிட்டி (பெர்லின் பிரிவு)  சில மாறுதல்களுடன் இவரது கொடியை இந்திய தேசிய கொடியாக ஏற்றுக்கொண்டது. கி.பி.1911 ஜூன் 17ல் மணியாச்சி ரயில் நிலையத்தில் ஆஷ் துரையை சுட்டு கொன்ற வீர வாஞ்சிநாதன் உபயோகப்படுத்திய துப்பாக்கியை பாரீஸில் இருந்து அவருக்கு அனுப்பியவரே மேடம் காமா தான். இவரது கடைசி காலம் மிகவும் துன்பகரமாக இருந்தது. உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டு தனது 74 வயதில் இந்தியா திரும்பினார். மும்பையில் உள்ள பார்ஸிகளின் அறக்கட்டளைக்கு சொந்தமான இலவச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் கி.பி.1936 ஆகஸ்ட் 13ல் மும்பையில் காலமானார். இந்திய அரசு இவரது சேவையை பாராட்டி கி.பி.1962 ஜனவரி 26ல் இவரது நினைவு தபால்தலை வெளியிட்டு கெளரவித்தது. தனது உடல்நிலை மற்றும் குடும்ப வாழ்க்கையையும் பெரிதாக கருதாமல் தனது சொத்துக்களையும் ஆதரவற்றோருக்கு எழுதி வைத்தும் இந்திய விடுதலைக்காக போராடிய புரட்சி வீரர்களுக்கு ஆயுதங்கள் மற்றும் பல உதவிகளையும் செய்து இந்திய விடுதலைக்காக அயல்நாடுகளிலிருந்தே போராடிய மேடம் காமா இந்திய விடுதலை போராட்ட வீராங்கனைகளில் ஒரு நல்முத்து என்று சொன்னால் மிகையாகாது.

Comments

Popular posts from this blog

145) குந்தள குமாரி சபத்

146) அம்மு சுவாமிநாதன்

137) காளி பாய்