38) அருணா ஆஸப் அலி
அருணா ஆஸப் அலி (கி.பி.1909-1996) :
சரித்திரம் கண்ட வீராங்கனைகளில் ஒருவர். காந்திய வழிகளையும் கடைபிடித்தாலும் அதில் தீவிரமாக இருந்தவர். வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடந்த போது அனைத்து காங்கிரஸ் தலைவர்களும் கைது செய்யப்பட்டு 2 வருடங்களுக்கு மேல் சிறையில் வைக்கப்பட்ட போது பம்பாயில் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து போராட்ட நெருப்பை பற்ற வைத்தவர். தலைவர்கள் இல்லாமல் இருந்தாலும் தைரியமாக தடையை மீறி ஆங்கிலேய கொடியை இறக்கி விட்டு காங்கிரஸ் கொடியை ஏற்றி போராட்ட களத்திலிருந்து போராட்ட கனலை தூண்டி விட்டு கொண்டே இருந்த வீரப்பெண்மணி. எத்தகைய அடக்குமுறையையும் தனது துணிச்சலான நடவடிக்கையாலும் காந்திய கொள்கையாலும் தைரியமாக எதிர்கொண்டு போராடிய வீரப்பெண்மணி தான் அருணா கங்குலி (என்ற) அருணா ஆஸப் அலி.
இவர் கி.பி.1909 ஜூலை 16ம் தேதி இன்றைய அரியானா மாநிலத்தில் கல்கா என்னும் ஊரில் ஒரு வங்காள குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தையான உபேந்திரா கங்குலி உணவகம் நடத்தி வந்தார். இவரது இயற்பெயர் அருணா கங்குலி. இளமையில் லாகூர் மற்றும் நைனிடாலில் படித்து பின்னர் கொல்கத்தாவில் உள்ள கோபாலகிருஷ்ண கோகலே நினைவு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். நாட்டின் விடுதலையின் மீது ஈடுபாடு கொண்டு காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்தார். காங்கிரஸ் கட்சியின் மாநாடுகளிலும் கலந்து கொண்டார். அத்தகைய சந்திப்புகளில் அன்றைக்கு காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக விளங்கிய ஆஸப் அலியை அலகாபாத்தில் சந்தித்தவுடன் காதல் வயப்பட்டார். பெற்றோர்கள் மற்றும் சமயவாதிகள் கடுமையாக எதிர்த்தனர். ஆஸப் அலிக்கு இவரை விட 21 வயது அதிகம் மட்டுமல்லாது அவர் முஸ்ஸீம் மதத்தை சேர்ந்தவர் என்பதாலும் அந்த நேரத்தில் இவருக்கு வயது வெறும் 19 என்பதினாலும் பெற்றோர்கள் எதிர்த்தனர். அனைவரின் எதிர்ப்பையும் மீறி கி.பி.1928ல் அவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர் உப்பு சத்தியாகிரக போராட்டம் உட்பட பல விடுதலை போராட்டங்களில் சிறைக்கு சென்று வந்துள்ளார். உப்பு சத்யாகிரகத்தின் போது லாகூர் சிறையில் அடைக்கப்பட்டு ஒரு வருடம் தண்டனை அனுபவித்தார். அதன் பின்னர் நடந்த போராட்டத்தில் டெல்லி சிறையில் அடைக்கப்பட்ட போது சிறை அதிகாரிகளின் ஆணவத்தையும் கைதிகளின் உரிமைகளுக்காகவும் சிறையிலையே போராட்டத்தை தொடங்கினார். இதனால் இவர் அம்பாலாவில் தனிமை சிறைக்கு மாற்றப்பட்டார். சிறை தண்டனை முடிந்து மற்றவர்கள் விடுவிக்கபட்ட போதும் இவர் விடுவிக்க படவில்லை. இதனால் மற்ற பெண் கைதிகள் சிறையிலிருந்து வெளியேறாமல் போராட்டம் நடத்தினர். பின்னர் மகாத்மா காந்தி தலையிட்டதாலும் பொதுமக்கள் தொடர் போராட்டத்தாலும் இவர் விடுவிக்கப்பட்டார். கி.பி.1942ல் காந்தி உட்பட மூத்த தலைவர்கள் அனைவரும் "வெள்ளையனே வெளியேறு" இயக்கத்தின் போது இரண்டு வருடங்களுக்கு கைது செய்யப்பட்ட போது போராட்டத்தை இளம் தலைவியாக முன்னின்று நடத்தினார். பம்பாயின் கோவாலியா மைதானத்தில் காங்கிரஸ் கொடியை பறக்க விட்டு தடையை மீறி கைதானார். தொடர்ந்து பல போராட்டங்களில் ஈடுபட்டதால் இவரை பிடிக்க ஆங்கில அரசு பரிசு தொகை அறிவித்த நிகழ்வும் நடந்தது. நாடு விடுதலை பெற்ற பின்னர் இவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி சோஷலிச இயக்கங்களில் இணைந்தார். சமூக சேவைகளில் ஈடுபட்டார். நலிவுற்ற பெண்கள் மற்றும் மாணவர்களின் நலனுக்காக பாடுபட்டார். டெல்லி மாநகரின் முதல் மேயராக கி.பி.1958ல் நியமிக்கப்பட்டார். அப்போது நகரின் சுகாதாரம் வளர்ச்சிக்காக பல திட்டங்களை செயல்படுத்தினார். கி.பி.1964ல் மீண்டும் காங்கிரஸில் இணைந்தாலும் தீவிர அரசியலில் இருந்து விலகியே இருந்தார். அமைதிக்கான லெனின் விருதும் 1991ல் ஜவஹர்லால் நேரு விருதும் 1992ல் பத்ம விபூஷண் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. தனது 87வது வயதில் கி.பி.1996 ஜூலை 29ல் புதுடெல்லியில் இவர் மறைந்தார்.
இவர் மறைந்த பின்னர் இந்திய அரசு இவருக்கு கி.பி.1997ல் பாரத் ரத்னா விருது கொடுத்து இவரின் சேவைகளை கெளரவப்படுத்தியது. கி.பி.1998ல் இவருக்கு நினைவு தபால்தலை வெளியிட்டு இவரை பெருமைப்படுத்தியது.


Comments
Post a Comment