39) ஆனந்தி கோபால் ஜோஷி
ஆனந்தி கோபால் ஜோஷி (கி.பி.1865-1887) :
மேற்கத்திய மருத்துவ முறையில் பயிற்சி பெற்ற முதல் இந்திய மற்றும் ஆசிய பெண் மருத்துவர் இவரே. கி.பி.19ம் நூற்றாண்டுகளில் இந்திய பெண்கள் ஆண்களிடம் பிரசவ மருத்துவம் பார்க்க கூச்சப்பட்ட காரணத்தால் மருத்துவ உதவியை நாடாமல் வீட்டிலையே பிரசவம் பார்த்து வந்தனர். இத்தகைய நேரத்தில் உயிரிழப்புகள் அதிகம் இருந்தது. அதனால் இவர் பெண்களுக்காக பிரசவ மருத்துவம் பார்க்க ஆசைப்படுவதாக தனது மருத்துவ விண்ணப்ப படிவத்தில் குறிப்பிட்டார்.
மகாராஷ்டிராவில் பூனேவில் உள்ள வைதீக பிராமண குடும்பத்தில் பிறந்தவர் இவர். பெற்றோர்கள் இவருக்கு வைத்த பெயர் யமுனா. கி.பி.1865 மார்ச் 31ல் பிறந்த இவருக்கு இவரது 9 வயதிலையே இவரை விட 20 வயது மூத்தவரான கோபால் ராவ் ஜோஷியுடன் திருமணம் நடந்தது. கோபால் ராவ் ஜோஷி ஏற்கனவே முதல் மனைவியை இழந்தவர். அவர் கல்யாணில் அஞ்சல் குமாஸ்தாவாக வேலை பார்த்து வந்தார். பின்னர் கொல்கத்தாவிற்கு பணி மாறுதல் பெற்றார். இவர் ஒரு முற்போக்கு சிந்தனையாளர் என்பதால் தனது மனைவிக்கு ஆனந்தி என்று பெயர் மாற்றி சமஸ்கிருதம் படிப்பதை விட ஆங்கிலம் கற்பதே அவசியம் என்று அவருக்கு ஆங்கிலம் கற்க உதவினார். இவர்களுக்கு கி.பி.1879ல் ஆனந்தி பாயின் 14வது வயதில் ஆண் குழந்தை பிறந்து 10 நாட்களில் இறந்ததால் மருத்துவராக வேண்டுமென்ற ஆவல் உண்டானது. ராபர்ட் வைல்டர் என்ற கிறிஸ்தவ சமய பணியாளருக்கு அமெரிக்காவில் மருத்துவம் படிக்க உதவுமாறு கேட்க அவர் மதம் மாறினால் உதவுவதாக கூற இவர்கள் மறுத்து விட்டனர். அவர் இவர்களது கடிதத்தை தனது பத்திரிக்கையில் வெளியிட நியூ ஜெர்ஸியை சேர்ந்த தியோடிசியா கார்பெண்டர் என்பவர் கண்டு அமெரிக்காவில் இவருக்கு தங்க உதவி புரிந்தார். பின்னர் கொல்கத்தாவிலிருந்தபோது இவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. பலவீனம், விடாத தலைவலி, காய்ச்சல் மற்றும் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்ட போதும் இவரது கணவர் இவரது உத்வேகம் அளித்து மருத்துவம் படிக்க அமெரிக்காவுக்கு அனுப்பினார். உடல்நலமில்லாத போதும் கொண்ட கொள்கைக்காக அமெரிக்கா சென்று பென்சில்வேனியா பெண்கள் மருத்துவ கல்லூரிக்கு விண்ணப்பித்தார். இந்திய வைஸ்ராய் கூட இவரின் ஆர்வத்தை பாராட்டி 200 ரூபாய் உதவி தொகை அனுப்பினார். மருத்துவ கல்லூரியில் இணைந்த போது அவருக்கு வயது 19. அமெரிக்காவின் கடுங்குளிரும் பழக்கமில்லாத உணவும் இவரின் உடல்நிலையை மோசமாக்கியது. அதையெல்லாம் கடந்து கி.பி.1886 மார்ச்சில் "ஆரிய இந்துக்களின் தாய்மை மருத்துவம்" என்ற தலைப்பில் ஆராய்ச்சி கட்டுரையுடன் மருத்துவ பட்டம் (எம்.டி) பெற்றார். இவருக்கு விக்டோரியா மகாரணியும் வாழ்த்து செய்தி அனுப்பினார். இதே சமயத்தில் தான் கொல்கத்தாவில் கடம்பினி கங்குலி என்ற பெண்மணியும் மருத்துவ துறையில் டாக்டர் பட்டம் பெற்று மருத்துவராக ஆனார்கள். ஒரே ஆண்டில் ஒரே நேரத்தில் இரண்டு இந்திய பெண்கள் மருத்துவர்களாக ஆனார்கள். கி.பி.1886 இறுதியில் இந்தியா திரும்பிய ஆனந்தி பாய்க்கு அமோக வரவேற்புடன் கோலாப்பூர் சமஸ்தானத்தில் ஆல்பர்ட் எட்வர்ட் மருத்துவமனையில் பெண்கள் பிரிவின் மருத்துவராக நியமிக்கப்பட்டார். கி.பி.1887 பிப்ரவரி 26ல் காச நோயினால் அவதிப்பட்டு இவர் தனது 22 வயதிலையே இளம் பருவத்திலையே மறைந்தார். இவரது எண்ணங்களுக்காகவும் நோக்கங்களுக்காவும் தனது உடல் நிலையையும் பொருட்படுத்தாது கொண்ட இலட்சியத்திற்காக பாடுபட்டு அதை அடைந்தும் செயல்படுத்த ஆரம்பித்த சில மாதங்களிலையே மறைந்தவர் இவர். இந்தியாவில் பெண்கள் மருத்துவ துறையில் கால் பதிக்க தூண்டுகோலாக இவரும் கடம்பினி கங்குலியுமே காரணமாக இருந்தனர் என்பது அப்பட்டமான உண்மை.

Comments
Post a Comment