4) சாவித்திரி புலே

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர். யார் இவர்? இவர் சந்தித்த பிரச்சினைகள் என்ன? ஏன் அந்த காலத்தில் பெண் ஆசிரியராக இருப்பது தொந்தரவா என்ன?


சாவித்திரி பாய் இன்றைய மகாராஷ்டிர மாநிலத்தின் சதாரா மாவட்டத்தில் நைகோன் கிராமத்தில் கி.பி.1831ம் ஆண்டு ஜனவரி மாதம் 3ம்தேதி லக்ஷ்மி பாய்-கான்டோஜி நவ்சி படேல் என்ற பெற்றோர்களுக்கு மகளாக பிறந்தார். பிறந்தது படிக்க வைக்க முடியாத பிற்படுத்தப்பட்ட வகுப்பு பிரிவுகள் என்று சாதியில் . இன்றிலிருந்து 200 வருடங்களுக்கு முன்பு சாதிவெறி மிகவும் புரையோடி போய் இருந்த காலகட்டம் அது என்பதை நினைவில் வைத்திருந்தால் அப்போதைய சூழலை அறிந்துக்கொள்ள முடியும். தனது பத்தாவது வயதில் ஜோதிராவ் புலே என்பவருக்கு திருமணம் செய்து கொடுக்கப்பட்டார். என்னது 10 வயதிலா என்று ஆச்சரியப்பட வேண்டாம். அந்த காலகட்டத்தில் இதைவிட குறைந்த வயதிலெல்லாம் திருமணங்கள் முடிந்தது.   இவரை மணந்து கொண்ட ஜோதிராவ் புலேவும் ஒடுக்கப்பட்ட சாதிபிரிவில் பிறந்தவர் தான். இந்த ஜோதி ராவ் புலே தான் பின்னாட்களில் "மஹாத்மா" என்று அழைக்கப்பட்டார். இவரை தான் காந்தியடிகளும் தனது மானசீக குருவாக ஏற்றுக்கொண்டார். இந்தியாவில் காந்திக்கு முன்பு முதலில் மஹாத்மா என்று அழைக்கப்பட்டவர் இவரே.

திருமணம் செய்து கொண்ட பின் கணவரின் விருப்பத்திற்கேற்ப பள்ளிக்கு செல்ல தொடங்கினார். அந்த நேரங்களில் தினமும் ஓரு புடவையை கையுடன் எடுத்துச்சென்றாராம். பள்ளிக்கு செல்வதை தடுக்க வழிநெடுகிலும் ஆதிக்க சாதியினர் சேற்றையும் சாணத்தையும் மண்ணையும் வீசுவார்களாம். பள்ளிக்கு வந்தவுடன்  புடவையே மாற்றிக்கொள்வாராம். இப்படிப்பட்ட நெருக்கடிகளுக்கு மத்தியில் கல்வியும் கற்று முடித்தார். பின்னர் அவரது கணவர் ஜோதிராவ் புலே அவரை ஆசிரியர்கள் பயிற்சி பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார். பின்னர் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து கி.பி.1848ல் பெண்களுக்காக முதல் பள்ளியை பூனாவுக்கு அருகிலுள்ள பிடெ நாடாவில் ஆரம்பித்தனர். இதில் சேர்ந்து இந்தியாவின் முதல் பெண் ஆசிரியராக மாறினார்.


பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் கல்வியின் மூலமே சமூகத்தில் உயர்நிலையை அடையமுடியும். ஏற்றத்தாழ்வுகளை நீக்கமுடியும் என்று நம்பினார். கல்வி என்பதின் மூலமே பல மாற்றங்களை ஏற்படுத்தமுடியும் என்று நம்பினார். "கல்வி என்பது இது சரி இது தவறு என்று பகுத்தாராயும் திறனை தரவேண்டும். எது உண்மை எது பொய் என்பதையும் நம்மை உணரவைக்கவேண்டும். அது தான் கல்வி அப்படிப்பட்ட கொள்கையை அடிப்படையாக வைத்து புதிய பாடத்திட்டத்தை மகாராஷ்டிர அரசுக்கு பரிந்துரை செய்தவர் இவர்.

அது மட்டுமா இவர் செய்தார்? தனக்கு கிடைத்த இந்த அரிய வாய்ப்பு தனது கணவரின் மூலமே கிடைத்தது என்பதை உணர்ந்த அவர் பெண்கள் திருமணங்களின் போது தங்களை படிக்க வைக்கும் மாப்பிள்ளைகளை தான் மணப்பேன் என்று உறுதிமொழி எடுக்கணும் என்று அவ்வாறே நடக்க வைத்தவர். சிறு வயதிலையே கணவனை இழந்த பெண்களுக்கும் பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்களுக்கும் தனி இல்லம் அமைத்தார்.விதவை திருமணம் மற்றும் கலப்பு திருமணங்களுக்கும் குரல் கொடுத்தார்.  பெண்கள் வீட்டை விட்டு  வெளியே வர தயங்கும் வேளைகளில் தைரியமாக தன் கணவரின் இறுதிசடங்கையும் இவரே செய்தவர். இவருக்கு குழந்தையில்லை என்பதால் பிராமண விதவையின் மகனான யஷ்வந்த் ராவ் என்ற குழந்தையை தத்தெடுத்து வளர்த்தனர். விதவை பெண்களுக்கு மொட்டையடிப்பதை கண்டித்து கி.பி.1863 ல் மிகப்பெரிய போராட்டத்தினை நடத்தினார். கி.பி.1870ம் ஆண்டு பஞ்சத்தினால் தாய் தந்தையரை இழந்து  அநாதைகளான 52 குழந்தைகளுக்காக உறைவிடப்பள்ளியை தொடங்கினார். கி.பி.1892ல் கல்வியின் தேவைகளை வலியுறுத்தும் கொள்கைகளை கவிதைகளாக வடித்து "கவிதை மலர்கள்" என்ற பெயரில் நூலாக வெளியிட்டார்.

கி.பி.1897ல் இந்தியாவில் ப்ளேக் நோய் பரவிய காலத்தில் அதில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்று சிகிச்சை செய்ய மருத்துவர்கள் தயங்கியதால் வெளிநாட்டில் மருத்துவராக இருந்த தன் மகனான யஷ்வந்த் புலேவை  இந்தியாவிற்கு வரவழைத்து தற்காலிக மருத்துவமனையை புனேவில் அமைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தொடங்கினார். காலம் எத்தகைய மாற்றத்தை ஏற்படுததவல்லது. இவரின் மேல் தினமும் சாணத்தை கரைத்து ஊற்றிய கங்காராம் என்பவர் ப்ளேக்னால் மிகவும் பாதிக்கப்பட்டு ஊரைவிட்டு உறவுகளால் ஓதுக்கப்பட்டார். அவரை அழைத்து வந்து சிகிச்சை அளித்து அவரை காப்பாற்றினார். பின்னே மஹாத்மாவின் மனைவியல்லவா இவர். அந்த எண்ணம் இவருக்கும் இருக்குமல்லவா? இதனால் இவருக்கும் ப்ளேக் நோயின் பாதிப்புகள் ஏற்பட்டது. அதனால் கி.பி.1897ல் மார்ச் 10 ம் தேதி இவர் மரணமடைந்தார். காலம் நல்ல போராளி மற்றும் சமூக சீர்த்திருத்தவாதியை தன்னுடன் அழைத்துக்கொண்டது. 

பெண் சீர்திருத்தவாதிகளை சிறப்பிக்கும் நோக்கில் "சாவித்திரி பாய் புலே"வின் பெயரில் விருதினை மஹாராஷ்டிரா அரசு ஏற்படுத்தியுள்ளது. கி.பி.2015ல் புனே பல்கலைக்கழகத்துக்கு இவர் பெயரை சூட்டியுள்ளது. மேலும் இவர் பெயரில் சிறப்பு தபால் தலையையும் கி.பி.1998ல் இவரின் நினைவுநாளன்று வெளியிட்டுள்ளது.

அரசுகள் செப்டம்பர் 5ம்தேதியை ஆசிரியர் தினமாக அறிவித்தது போல ஜனவரி 3ஐ பெண் ஆசிரியர்கள் தினமாக அறிவித்திருக்க வேண்டும். நாம் நமது மனங்களில் ஜனவரி 3ம் தேதியான இவரின் பிறந்த நாளை பெண் ஆசிரியர்களின் தினமாக மனதால் கொண்டாடுவோம்.

Comments

Popular posts from this blog

135) கங்கா தேவி

137) காளி பாய்

முன்னுரை