41) சரளா தாக்கரல்

சரளா தாக்கரல் (கி.பி.1914-2009) :


இந்தியாவின் முதல் பெண் விமானி என்ற பெருமைக்குரியவர். உலக வரலாற்றில் கி.பி.1903 டிசம்பர் 17ல் வெற்றிகரமாக விமானம் பறக்க விடப்பட்டது. இதனால் உலக அளவில் பல நிறுவனங்கள் விமான சேவையில் கி.பி.1909 முதல் ஈடுபட ஆரம்பித்தன. கி.பி.1918ல் முதல் உலக போரின் முடிவுக்கு பின்னர் விமான பயணங்கள் அதிகரித்தது. இதன் பிறகே விமான தொழில்நுட்பமும் எண்ணிக்கையும் அதிகரிக்க ஆரம்பித்தது. இந்த நேரத்தில் பல தொழிற்முறை விமானிகள் பைலட் உரிமையை பெற்று விமானத்தில் வலம்வர ஆரம்பித்தனர். அமெரிக்காவில் தான் முதல் பெண் விமானி உரிமம் பெற்றார். அதன் பிறகு 25 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவின் முதல் பெண் விமானியாக சரளா சர்மா (சரளா தாக்கரல்) விமானி உரிமம் பெற்றார்.

கி.பி.1914ல் லாகூரில் பிறந்த இவர் 16 வயதில் கி.பி.1930ல் பி.டி.சர்மா என்பவரை மணந்தார். இவரது கணவர் குடும்பத்திற்கு சொந்தமாக இருந்த ஹிமாலயா ஃப்ளையிங் கம்பெனி என்ற விமான நிறுவனம் பத்ரிநாத்திற்கும் ஹரித்துவாருக்கும் இடையே விமான சேவையை நடத்தி வந்தது. இவர்களது குடும்பத்தில் 9 பேர்கள் விமானிகளாக இருந்தனர். முதன்முதலில் இந்தியாவில் ஏர்மெயில் விமானியாக உரிமம் பெற்றவர் இவரது கணவர் பி.டி.சர்மா. அவர் கராச்சிக்கும் லாகூருக்கும் இடையேயான பயண சேவையில் விமானியாக இருந்தார். சரளாவை விமானியாக்க அவரது கணவரும் அவரது மாமனாரும் இவரை லாகூர் ஃபிளையிங் கிளப்பில் பயிற்சி பெற சேர்த்து விட்டனர். 8 மணி 10 நிமிடங்கள் பயிற்சிக்கு பின்னர் சரளா சர்மா தனியாக விமானத்தை ஒட்ட ஆரம்பித்தார். கி.பி.1936ல் தனது 21வது வயதில் சிறுவகை விமானத்தில் விமானியாக பறந்தார். இவர் விமானம் ஒட்ட ஆரம்பித்த பிறகே கார் மற்றும் சைக்கிள் ஒட்ட ஆரம்பித்தார். லாகூர் ஃபிளையிங் கிளப்பில் 1000 மணி நேரம் பறந்த பிறகு விமானியாக உரிமம் பெற்றார்.


கி.பி.1939ல் இவரது கணவர் ஒரு விமான விபத்தில் மரணமடைந்தார். அதன் பின்னர் தொழில்முறை விமானியாக தகுதி பெற விரும்பினார். ஆனால் அந்த நேரத்தில் இரண்டாம் உலகப்போர் துவங்கியதால் விமான பயிற்சிகள் தடைபட்டதால் லாகூர் சென்று மேயோ கலைக்கல்லூரியில் ஓவிய பாடத்தில் நுண்கலையில் பட்டயப்படிப்பை முடித்தார். நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு லாகூரில் கலவரங்கள் அதிகரிக்க பாதுகாப்பு இல்லாமல் இருந்ததால் தனது இரண்டு மகள்களுடன் டெல்லிக்கு இடம் பெயர்ந்தார். டெல்லியில் ஓவியங்கள் வரைந்தும் ஆடை ஆபரணங்கள் வடிவமைக்கும் தொழிலை துவக்கினார். ஆரிய சமாஜத்தை பின்பற்றிய இவர் பெற்றோர் தந்த ஆதரவினால் பி.பி.தாக்ரல் என்பவரை கி.பி.1948ல் மறுமணம் செய்து கொண்டார். சரளா சர்மா இதன் பின்னரே சரளா தாக்கரல் என்று அழைக்கப்பட்டார். பின்னர் விமான பயிற்சியை தொடர்ந்து ‌தொழிற்முறை விமானி உரிமம் பெற்றார். இந்த நேரத்தில் ராஜஸ்தான் ஆல்வார் அரசியின் விமானத்திற்கு பெண் விமானி தேவை என்று விளம்பரத்தை கண்டு அரசியின் விமானத்தின் தனிப்பட்ட சிறப்பு விமானியாக 6 மாதங்கள் பணியில் இருந்தார். அதன் பின்னர் இவர் ஆடை ஆபரணங்கள் வடிவமைப்பில் முழு மூச்சில் இறங்கினார். இவரது ஆடை ஆபரணங்கள் வடிவமைப்பை கண்ட நேருவின் சகோதரியான விஜயலக்ஷ்மி பண்டிட் இவரது வாடிக்கையாளராக மாறினார். கி.பி.2009 மார்ச் 15ல் தனது 95வது வயதில் இவர் மறைந்தார். பெண்களால் அடுப்பறை மட்டுமல்ல ஆண்களுக்கு இணையாக விமானங்களையும் ஒட்டவும் முடியும் என்ற நிரூபித்த இவர் ஒரு சாதனை பெண்மணி.

Comments

Popular posts from this blog

145) குந்தள குமாரி சபத்

146) அம்மு சுவாமிநாதன்

137) காளி பாய்