42) கடம்பினி கங்குலி

கடம்பினி கங்குலி (கி.பி.1861-1923) :

இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான ஆனந்தி பாய் ஜோஸி அமெரிக்காவில் முதன்முதலில் மருத்துவம் முடித்த அதே ஆண்டு இந்தியாவில் கல்கத்தாவில் மருத்துவ பட்டம் பெற்ற பெண் மருத்துவர் தான் கடம்பினி கங்குலி. இருவரும் அலோபதி சிகிச்சை முறையில் மருத்துவ பட்டம் பெற்றவர்கள் தான்.

கி.பி.1861 ஜூலை 18ம் தேதி இன்றைய பீஹாரிலுள்ள பகல்பூரில் பிரஜ கிஷோர் பாசு என்பவருக்கு மகளாக பிறந்தார். இவர் இன்றைய பங்களாதேஷ்ஷில் இருந்த வங்காள குடும்பத்தினர். பிரம்ம சமாஜத்தை சேர்ந்த இவரது தந்தை அபய் சரண் மாலிக் என்பவருடன் இணைந்து "பகல்பூர் மகிளா சமிதி" என்ற பெண்கள் அமைப்பை இந்தியாவில் முதன்முதலில் பெண் விடுதலைக்காக உருவாக்கினார். கடம்பினி கங்குலி படித்த "பங்க மகிள வித்யாலயா" பள்ளி கி.பி.1878ல் பெத்தூன் பள்ளியுடன் இணைக்கப்பட்ட போது இவர் கல்கத்தா பல்கலைக்கழக நுழைவு தேர்வு எழுதி வெற்றி பெற்ற முதல் பெண்மணியாக ஆனார். இவரும் சந்திரமுகி பாசுவும் பெத்தூன் கல்லூரியில் முதல் பட்டதாரி பெண்கள் மட்டுமல்லாது இந்தியாவில் பட்டம் பெற்ற முதல் பெண் பட்டதாரிகள் என்ற பெருமையை பெற்றனர். 


இவர் கி.பி.1883ல் பிரம்ம சமாஜத்தை சேர்ந்த சீர்திருத்தவாதியும் பெண் விடுதலை போராளியுமான துவரகநாத் கங்குலியை திருமணம் செய்தார். பின்னர் கல்கத்தா மருத்துவ கல்லூரியில் சேர்ந்து கி.பி.1886ல் மருத்துவராக பணியாற்றும் தகுதி பட்டத்தை பெற்றார். அதே நேரத்தில் தான் அமெரிக்காவில் ஆனந்தி கோபால் ஜோஷியும் டாக்டர் பட்டம் பெற்றார். இவர் சமூகத்தின் பழமைவாதிகளிடமிருந்து பலவிதமான எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருந்தது. இதையெல்லாம் இவரது கணவரான துவாரகநாத் கங்குலி பொருட்படுத்தாமல் இவரது முயற்சிகளுக்கு துணை நின்றார். இருவரும் பெண் விடுதலைக்காகவும் பாடுபட்டனர். கி.பி.1889ல் இந்திய தேசிய காங்கிரஸின் 5வது கூட்டத்தொடரிலும் இவர் கலந்து கொண்டார். கி.பி.1892ல் இலண்டன் சென்று மருத்துவ மேற்நடிபபுகளை முடித்து விட்டு இந்தியா திரும்பி லேடி டுஃபெரின் மருத்துவமனையில் சிறிது காலம் வேலை பார்த்துவிட்டு சொந்த மருத்துவ பயிற்சியில் ஈடுபட்டார்.


வங்காள பிரிவினைக்கு பின்னர் கி.பி.1906ல் கல்கத்தாவில் மகளிர் மாநாட்டை நடத்தினார். கி.பி.1908ல் தென்னாப்பிரிக்காவிலுள்ள டிரான்ஸ்வால் என்னுமிடத்தில் நடந்த சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக கல்கத்தாவில் ஒரு மாநாட்டை நடத்தினார். அந்த பணியாளர்களுக்கு உதவ சங்கங்கள் மூலம் நிதியை திரட்டி அனுப்பி வைத்தார். கி.பி.1914ல் கல்கத்தாவுக்கு வந்த மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்த சதாரன் பிரம சமாஜ் நடத்திய கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். இவர் எட்டு குழந்தைகளுக்கு தாயாக இருந்ததால் வீட்டு வேலைகளுக்கும் அதிக நேரம் செலவிட நேர்ந்தது. அதனுடனும் பெண்கள் விடுதலைக்காகவும் குரல் எழுப்பினார். கி.பி.1923 அக்டோபர் 3ம் தேதி கல்கத்தாவில் இவர் மறைந்தார். பெண் உரிமைக்காகவும் இவரது தன்னலமற்ற தொண்டினாலும் சிறந்து விளங்கிய இந்த மாதர் குல மாணிக்கம் இந்தியாவில் முதல் பெண் மருத்துவர் என்ற பெருமையை பெற்றவர்.

Comments

Popular posts from this blog

145) குந்தள குமாரி சபத்

146) அம்மு சுவாமிநாதன்

137) காளி பாய்