43) சரளா தேவி செளதுராணி
சரளா தேவி செளதுராணி (கி.பி.1872-1945) :
இந்திய சரித்திரம் கண்ட முக்கியமான பெண்ணுரிமை மற்றும் பெண் கவிஞர்களுள் சிறப்பான இடத்தை பிடித்தவர். இந்தியாவில் முதன்முதலாக மகளிர் அமைப்பை ஆரம்பித்து பெண்ணுரிமை பெண் கல்விக்காக போராடியவர். காந்தியுடன் இருந்த நட்பு அந்த காலத்தில் சில அதிர்வலைகளை ஏற்படுத்தினாலும் அது நல்ல நட்பாக தான் இருந்தது. காந்தியின் போராட்டங்களில் எல்லாம் கலந்து கொண்டவர். மேலும் வங்காள கவி ரவீந்திரநாத் தாகூரின் சகோதரி மகள் என்பதால் இயற்கையிலையே கவிதை படைக்கும் திறன் இருந்ததோ என்னவோ?
இவர் கி.பி.1872 செப்டம்பர் 9ல் கொல்கத்தாவில் ஜானகிநாத் கோசல் - ஸ்வர்ணகுமாரி தேவி ஆகியோருக்கு மகளாக சரளா கோசல் என்ற இயற்பெயரில் பிறந்தார். இவரது தாயின் சகோதரர் தான் இலக்கியத்திற்காக நோபெல் பரிசு வென்ற பிரபல வங்காள கவிஞர் ரவீந்திரநாத் தாகூர். இவரது தந்தை வங்காள காங்கிரஸின் முதல் தலைவராக இருந்தார். இவரின் தாய்வழியில் ராஜாராம் மோகன் ராயின் பிரம்மசமாஜத்தை பின்பற்றி வந்தனர். இவரின் தந்தை ராஜாராம் மோகன்ராயிற்கு பிறகு பிரம்ம சமாஜம் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. கி.பி.1890ல் கொல்கத்தாவில் பெத்யூன் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார். கல்வியை முடித்தவுடன் இவர் மைசூரிலுள்ள மஹாராணி பெண்கள் பள்ளியில் ஆசிரியராக பணியில் சேர்ந்தார். ஒரு வருடத்தில் வேலையை விட்டுவிட்டு கொல்கத்தா திரும்பிய இவர் பாரதி என்ற வங்காள பத்திரிக்கையில் எழுத தொடங்கினார். பின்னர் அடுத்த 3 ஆண்டுகளில் அந்த பத்திரிக்கையை இலக்கிய தரத்தை உயர்த்தினார். அதனுடன் தேச பக்தி இயக்கத்திலும் பங்கு கொள்ள ஆரம்பித்தார். கி.பி.1904ல் கொல்கத்தாவில் பெண்களால் தயாரிக்கப்பட்ட கைவினை பொருட்களை விற்பனை செய்ய லக்ஷ்மி பந்தர் என்ற கடையை தொடங்கினார்.
கி.பி.1905ல் இவர் பிரபல கல்வியாளரும் வழக்கறிஞருமான ஆர்ய சமாஜத்தை பின்பற்றும் ரம்புஜ்தத் செளத்ரி என்பவரை மணந்து பஞ்சாப்புக்கு குடிபுகுந்தார். இந்த நேரத்தில் வங்காள பிரிவினை ஏற்பட்டது. அதை எதிர்த்து பஞ்சாப்பில் இருந்து புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்தார். திருமணத்திற்கு பின்னர் கணவர் நடத்தி வந்த உருது பத்திரிக்கையான ஹிந்துஸ்தானை நடத்துவதில் துணை புரிந்தார். பின்னர் அந்த பத்திரிக்கை ஆங்கில பத்திரிக்கையாக மாற்றப்பட்டது. கி.பி.1910ல் அலகாபாத்தில் "பாரத் ஸ்திரீ மஹாமண்டல்" என்ற பெண்கள் அமைப்பை ஆரம்பித்து பெண்களின் கல்வி மற்றும் தொழில் முன்னேற்றத்திற்கு பாடுபட ஆரம்பித்தார். இதுவே இந்திய அளவில் முதல் பெண்களின் அமைப்பாக கருதப்படுகிறது.
பின்னர் இந்திய சுதந்திர போராட்ட இயக்கங்களில் பங்கு கொண்ட சமயத்தில் காந்தியடிகள் கி.பி.1920ல் ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்தார். லாகூரில் அதற்கு பொறுப்பாக இருந்த இவரது கணவர் கைது செய்யப்பட லாகூரில் இவரது வீட்டுக்கு சென்று சந்தித்தார். இருவருக்கும் நெருக்கமான நட்பு ஏற்பட்டது. இதனால் லாகூர் வட்டாரங்களில் இவர்களது நெருக்கம் பேசுபொருளானது. வதந்திகள் பரவியது. அதன்பிறகு இவரது கவிதைகளையும் படைப்புகளையும் தனது கூட்டங்களிலும் யங் இந்தியா பத்திரிக்கையிலும் பயன்படுத்தினார். இவரும் ஒருவருக்கொருவர் அடிக்கடி கடிதங்கள் எழுத ஆரம்பித்தனர். ஆனால் உண்மையில் காந்தியடிகள் இவரின் எழுத்துகளினாலும் கவிதையினாலும் மட்டுமே ஈர்க்கப்பட்டார் . பரஸ்பர நட்பு ரீதியான சக பாராட்டலே தவிர வேறு எந்த உறவும் இல்லை. பின்னாளில் இவரது ஒரே மகனான தீபக் காந்தியின் பேத்தி ராதாவை திருமணம் செய்து கொண்டார்.
கி.பி.1923ல் இவரது கணவர் மறைவுக்கு பின்னர் கொல்கத்தா திரும்பினார். பின்னர் கி.பி.1924-1926 வரை பாரதி பத்திரிக்கையின் எடிட்டிங் வேலைகளை தொடர்ந்தார். கி.பி.1930ல் கொல்கத்தாவில் சிக்ஷா சதன் என்ற பெண்கள் பள்ளியை தொடங்கினார். பின்னர் கி.பி.1935ல் பொது வாழ்க்கையில் இருந்து விலகி ஆன்மீகத்தில் ஈடுபட்டார். இவரது சுயசரிதையான "ஜிவனெர் ஜாரா படா" வங்காள இதழில் தொடராக வெளியிடப்பட்டது. இது பின்னர் கி.பி.2011ல் சிகாதா பானர்ஜி என்பவரால் ஆங்கிலத்தில் "The Scattered leaves of My Life" என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டது. இவர் கி.பி.1945 ஆகஸ்ட் 9ல் கொல்கத்தாவில் மறைந்தார். சிறந்த பெண்ணுரிமைவாதியான இவர் இலக்கியம், பத்திரிகை, பெண்கள் அமைப்பு மற்றும் விடுதலை போராட்டங்களில் பங்கு கொண்ட பல்முக சாதனையாளராக திகழ்ந்தார்.


Comments
Post a Comment