45) உஷா மேத்தா

உஷா மேத்தா (கி.பி.1920-2000) :


இந்திய சுதந்திரத்திற்கு பாடுபட்ட பெண்களுள் ஒருவர் இவர் என்றாலும் அந்த காலத்தில் தனிநபர்கள் ரேடியோ வைத்திருப்பதே அபூர்வம் என்ற வகையில் தனி ரேடியோ ஸ்டேஷனை நடத்தி விடுதலை போராட்ட நிகழ்வுகளை மக்களுக்கு தெரிவித்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை தொடர்ந்து நடத்தி வந்தவர்.

இவர் குஜராத் மாநிலத்திலுள்ள சூரத் மாவட்டத்தில் சரஸ் என்னும் கிராமத்தில் கி.பி.1920 மார்ச் 25ல் பிறந்தார். இவரது தந்தை மாவட்ட நீதிபதியாக பணியாற்றினார். இவருக்கு 5 வயதாக இருக்கும்போது அகமதாபாத்திலுள்ள சபர்மதி ஆஸ்ரமத்தில் காந்தியை கண்டார். பிறகு சில மாதங்களில் காந்தி இவரது ஊருக்கு அருகில் நடத்திய நிகழ்வுகளில் கலந்துகொண்டார். கி.பி.1928ல் இவருக்கு எட்டு வயதாக இருக்கும்போது சைமன் கமிஷனை எதிர்த்து நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டு பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார். இந்த நிகழ்வுகளுள் தேசிய கொடியை வைத்திருந்த சிறுமியை அடித்து கீழே தள்ளிவிட்டு கொடியை போலீசார்கள் பிடுங்கி கொண்டனர். இந்த நிகழ்வை சிறுமிகள் தங்கள் பெற்றோரிடம் கூற அவர்கள் தேசிய கொடியில் அவர்களுக்கு ஆடை அணிவித்து வீதிகளில் நடக்க விட்டனர். குழந்தைகள் மீண்டும் "போலீசார்கள் உங்களால் தடிகளால் எங்களை அடிக்க மட்டும் தான் முடியும். எங்கள் கொடியை அகற்ற முடியாது" என்று கூறி போராட்டத்தை தொடர்ந்தனர். உஷா மேத்தாவின் தந்தை மாவட்ட நீதிபதியாக இருந்ததால் அவரது மகள் இந்த போராட்டங்களில் ஈடுபடுவதை விரும்பவில்லை. ஆனாலும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் அவர் ஓய்வு பெற்று விட்டதால் குடும்பம் பம்பாய்க்கு குடிபெயர்ந்தது. இளமைக்காலத்தில் குஜராத்தின் கேடா மற்றும் பரூச் நகரங்களில் பள்ளிப்படிப்பை தொடர்ந்தவர் பின்னர் பம்பாயில் சந்தாராம் உயர்நிலைப்பள்ளியில் படித்து பின்னர் கி.பி. 1939ல் வில்சன் கல்லூரியில் படித்து தத்துவ பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர் சட்டம் பயில கல்லூரியில் சேர்ந்தவர் கி.பி.1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தினால் சட்ட படிப்பை பாதியில் நிறுத்தினார். கி.பி.1930 முதல் தந்தையின் கண்டிப்பிலிருந்து (தந்தை நீதிபதி பதவியில் இருந்து ஒய்வு பெற்ற பின்னர்) விடுபட்டு தீவிரமாக விடுதலை போராட்டங்களில் ஈடுபட ஆரம்பித்தார். காந்தியின் வழிகளை பின்பற்றியதால் அது முதல் காதி துணிகளை அணிய ஆரம்பித்தார்.

கி.பி.1942 ஆகஸ்ட் 9ல் மற்ற தோழிகளுடன் இணைந்து பம்பாயின் கவாலியா மைதானத்தில் காந்திஜி "வெள்ளையனே வெளியேறு" இயக்கம் தொடங்குவதாக அறிவிப்பு கொடுத்தார். அதற்கு முன்னரே ஆங்கில அரசு முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் அனைவரையும் கைது செய்ததால் மூன்றாம் கட்ட இளம் தலைவர்களே போராட்டத்தை நடத்த ஆரம்பித்தனர். ஆகஸ்ட் 14ம் தேதி மற்ற இளம் தலைவர்களின் உதவியால் "இரகசிய காங்கிரஸ் வானொலி"யை ஆரம்பிக்க முடிவு செய்து ஆகஸ்ட் 27ல் 42.34 மீட்டர் அலைவரிசையில் முதன்முதலில் இரகசிய காங்கிரஸ் வானொலி செயல்பட ஆரம்பித்தது. இதில் காந்தியின் பழைய பேச்சு பதிவுகள் இளம் தலைவர்களின் பேச்சுக்கள் மற்றும் தலைவர்களின் நிலைகளை தொடர்ச்சியாக ஒளிபரப்ப ஆரம்பித்தனர். ஆங்கில அரசு இதை கண்காணிக்க ஆரம்பித்ததால் ஒவ்வொரு நாளும் வேறொரு இடங்களிலிருந்து வானொலி செயல்பட ஆரம்பித்தது. கடைசியில் 3 மாதத்திற்கு பிறகு கி.பி.1942 நவம்பர் 12ல் இவரையும் மற்றவர்களையும் கைது செய்து வானொலியை முடக்கியது. மன்னிப்பு கேட்டால் 6 மாதங்களில் விடுதலை என்ற நிபந்தனைக்கு பதிலளிக்க மறுத்ததால் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பூனாலிலுள்ள எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இவர் உடல்நலன் கெட மருத்துவமனையில் பலத்த காவலுடன் அனுமதிக்கப்பட்டு பின்னர் உடல்நலம் தேறிய பின்னர் திரும்பவும் சிறையில் அடைக்கப்பட்டார். கி.பி.1946ல் இடைக்கால அரசு அமைந்தவுடன் மொரார்ஜி தேசாய் மார்ச் மாதத்தில் விடுதலை செய்யப்பட்டார். 

இந்திய சுதந்திரத்திற்குப் பின்னர் இவர் சமூக மற்றும் அரசியலில் காந்தியின் பங்கு என்ற பாடத்தில் டாக்டர் பட்டம் பெற்று பம்பாய் கல்கலைகழகத்தில் பணிபுரிந்தார். சுதந்திரத்திற்கு பின்னர் காந்திய கொள்கைகளை பரப்புவதில் தொடர்ந்து ஈடுபட்டார். நிறைய புத்தகங்கள் கட்டுரைகளை சமூக பொருளாதார தலைப்புகளில் ஆங்கிலம் மற்றும் குஜராத்தி மொழிகளில் எழுதியுள்ளார்.‌தனது 60வது வயதில் பம்பாய் பல்கலைக்கழகத்தில் போராசிரியர் பதவியில் இருந்து ஒய்வு பெற்றார். இவருக்கு கி.பி.1998ல் பத்ம விபூசண் விருது பெற்றார். கி.பி.2000 ஆகஸ்ட் 11ல் தனது 80வயதில் பம்பாயில் மரணமடைந்தார். ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்து அவர்களின் கண்களில் மண்ணை தூவி மூன்று மாதங்கள் இரகசிய வானொலியை நடத்தி கலங்க வைத்தவர் என்றாலும் நண்பர்களையும் மற்றவர்களையும் காட்டி கொடுக்காமல் அதிகப்படியான தண்டனைகளை புன்சிரிப்புடன் ஏற்றுக்கொண்டு சிறை சென்று காந்திய வழியில் ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க பாடுபட்டவர் இவர்.

Comments

Popular posts from this blog

145) குந்தள குமாரி சபத்

146) அம்மு சுவாமிநாதன்

137) காளி பாய்