46) இராணி அபக்கா செளதா
ராணி அப்பாக்கா செளதா :
16ம் நூற்றாண்டில் இந்தியாவில் காலனி ஆதிக்கம் ஏற்பட ஆரம்பித்த வேளையில் போர்த்துகீசியர்களை எதிர்த்து போராடிய இன்றைய கர்நாடகத்தில் உள்ள துளு நாட்டின் உல்லால் பகுதி ராணி இவர். துணிச்சலான வீர மங்கை.
இவர் திகம்பர சமணர்கள் பிரிவை சேர்ந்தவர். தாய்வழி உறவு முறையை தொடர்ந்து அபக்காவின் மாமாவான திருமலை ராய சவுதா இவருக்கு முடிசூட்டினார். இவரது தலைநகரம் புட்டீஜ். உல்லால் இரண்டாவது வாணிக தலைநகராக விளங்கியது. இவருக்கும் மங்களூரில் பங்கா நாட்டு மன்னர் லட்சுமப்பா அராச பங்கராயாவுக்கும் திருமணம் நடந்தது. இவரது மாமா திருமலை ராயர் இவருக்கு போர் பயிற்சிகள் அளித்தார். திருமண உறவு ரொம்ப காலம் நீடிக்கவில்லை. கணவருடன் ஏற்பட்ட முரண்பாடுகளால் மீண்டும் உல்லாலுக்கு திரும்பினார். இவரது கணவர் போர்த்துகீசியர்களுடன் இணைந்து இவருக்கு எதிராக செயல்பட விருப்பம் கொண்டார். கோவாவை கைப்பற்றிய பின்னர் மீண்டும் தெற்கு நோக்கி திரும்பினர். கி.பி.1525ல் தெற்கு கனரா கடற்கரையை தாக்கி மங்களூர் துறைமுகத்தை அழித்தனர். அந்த நேரத்தில் உல்லால் துறைமுகம் வாணிக நகரமாக மசாலா பொருட்கள் ஏற்றுமதியில் கொடி கட்டி பறந்ததால் உல்லாலை கைப்பற்ற திட்டம் போட்டனர்.
அபக்காவின் ஆட்சியில் நிர்வாகம் சமணர்கள், இந்துக்கள் மற்றும் முஸ்லீம்கள் ஆகியோரால் நன்கு நடந்து வந்தது. மலாலி அணையின் கட்டுமானத்தின் போது கட்டுமான பணிகளை ராணி மேற்கொண்டார். காலிகட்டின் ஜாமோரின் (சமுத்திரன்) மன்னர்களுடன் நட்பு கொண்டு போர்த்துகீசியர்களுக்கு எதிராக கூட்டணி சேர்ந்தார். இதனால் ஆத்திரமடைந்த போர்த்துகீசியர்கள் அபக்கா செளதா கப்பம் கட்ட கூற இவர் மறுத்தார். அதனால் கி.பி.1555ல் அட்மிரல் டோம் அல்வாரோ டா சில்வீராவை போரில் எதிர்த்து தோற்கடித்து விரட்டினார். கி.பி.1557ல் மங்களூரை தாக்கி அழித்தவுடன் கி.பி.1568ல் உல்லால் மீது பார்வையை திருப்பினர். அவர்களை எதிர்த்து போரிட்டு தோற்று மசூதியில் அடைக்கலம் புகுந்தார். உல்லால் நகரை கைப்பற்றிய போர்த்துகீசியர்களை அன்றிரவே 200 வீரர்களுடன் தாக்குதல் நடத்தி அவர்களின் ஜெனரலை போரில் கொன்று உல்லாலை மீட்டார். போர்த்துகீசியர்கள் பின்வாங்கி ஓடினர். பின்னர் மங்களூரில் இருந்த போர்த்துகீசிய ஜெனரலை கொன்றதால் அங்கிருந்தும் பின்வாங்கினர். பின்னர் மங்களூரையும் குண்டபூரையும் போர்த்துகீசியர்கள் கைப்பற்றினர். ராணியை விட்டு பிரிந்த கணவரின் உதவியுடன் உல்லால் நகர் மீது தாக்குதல் தொடர்ந்தனர். கி.பி.1570ல் அகமது நகர் பிஜப்பூர் சுல்தான் மற்றும் காலிகட்டின் ஜாமோரின் (சமுத்திரன்) மன்னருடன் கூட்டணியை உருவாக்கி மங்களூரில் இருந்து போர்த்துகீசிய கோட்டையை தாக்கி அழித்தாலும் திரும்பும் வழியில் ஜாமோரின் தளபதி கொல்லப்பட்டார். இவரது முன்னாள் கணவரின் துரோகத்தால் போரில் தோற்கடிக்கப்பட்டு சிறைபிடிக்கப்பட்டார். சிறையில் கூட கிளர்ச்சிகள் செய்து மாண்டதாக தெரிகிறது.
அபக்கா செளதாவின் நினைவகம் உல்லால் நகரில் அமைந்துள்ளது. இவரது நினைவாக வருடத்திற்கொரு முறை "வீர ராணி அபக்கா உற்சவம்" கொண்டாடப்படுகிறது. கி.பி.2003 ஜனவரி 13ல் இவரது நினைவாக சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டது. ராணியின் வெண்கல சிலை பெங்களூர் நகரிலும் உல்லால் நகரிலும் அமைக்கப்பட்டுள்ளது. இந்திய கடலோர காவற்படையின் கப்பல்களில் ஒன்று அபக்கா மகாதேவி என்ற பெயரிடப்பட்டது.

Comments
Post a Comment