47) கமலாதேவி சட்டோபாத்யாய்

கமலாதேவி சட்டபாத்யாய் (கி.பி.1903-1988) :


இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் எத்தனையோ ஆண்களுடன் பெண்களும் சிறையில் வதைபட்டு இருக்கின்றனர். அவர்களில் இவரும் ஒருவராக இருந்தாலும் இருந்தாலும் அந்த காலத்தில் விதவைகள் மறுமணம் என்ற நிகழ்வின் மூலம் சமுதாயத்தின் எதிர்ப்புகளை முறியடித்து திருமணம் முடித்தவர்.

இவர் கி.பி‌.1903ல் ஏப்ரல் 3ல் மங்களூரில் ஆனந்தய்யா-  கிரிஜா பாய் தம்பதிகளுக்கு நான்காவது மகளாக பிறந்தார். இவரது தந்தை தரேஷவர் மாவட்ட ஆட்சியாளராக மங்களூரில் இருந்தார். இதனால் சிறு வயதிலையே கோபால கிருஷ்ண கோகலே, மகாதேவ கோவிந்த ராணடே, அன்னிபெசண்ட் அம்மையார் மற்றும் ரமா பாய் ராணடே போன்ற தேசிய தலைவர்களின் உரையாடல்களை இவரின் தந்தையை சந்திக்க வீட்டுக்கு வரும்போது கேட்டு சுதந்திர இயக்கத்தில் ஆர்வம் கொண்டார். இவரது தந்தை இவரது 7 வயதில் மரணமடைந்தார். இவரது மூத்த சகோதரி திருமணம் ஆன சில மாதங்களிலையே மரணமடைந்தார். இவருக்கும் 14 வயதில் திருமணம் நடந்து இவரின் கணவர் அடுத்த 2 வருடங்களில் மரணமடைந்தார். இவர் கேரள கூடியாட்டக்கலையை இளமையிலையே கற்றார்.


பின்னர் சென்னை ராணி மேரி கல்லூரியில் படிப்பை தொடர்ந்தார். இந்த நேரத்தில் தான் இவருடன் படித்த சக நண்பரின் மூலமாக அவரின் சகோதரியான சரோஜினி நாயுடு இவருக்கு அறிமுகமானார். சகோதரிகளின் மூலமாக அவரது சகோதரர் அரிந்திரநாத் சட்டோபாத்யா இவருக்கு அறிமுகமானார். அவர் அந்த காலத்தில் புகழ்பெற்ற கவிஞர்-எழுத்தாளர்-நடிகர் என்ற பன்முக தன்மையை பெற்றவர்.‌அவருடன் இவருக்கு காதல் மலரவே திருமணம் செய்ய முடிவெடுத்தார். அந்த நேரத்தில் விதவைகள் திருமணம் என்பதற்கு மிகப்பெரிய எதிர்ப்புகள் இருந்தது. அதையும் மீறி அரிந்திரநாத் சட்டோபாத்யாவை கி.பி.1923ல் திருமணம் செய்தார். இவர்களுக்கு அடுத்த ஆண்டே தம்பதிகளுக்கு ஒரே மகனாக ராமா பிறந்தார். இவர்களின் திருமணத்திற்கு பிறகு கணவர் இலண்டன் செல்ல சில மாதங்களுக்கு பிறகு இவரும் இலண்டன் சென்று அங்குள்ள பல்கலைகழகத்தில் சமூகவியல் பாடத்தில் டிப்ளமோ பட்டம் பெற்றார். இவர் இலண்டனில் இருந்தபோது கி.பி.1923ல் காந்தி ஒத்துழையாமை இயக்கத்திற்கு அழைப்பு விடுக்க இலண்டனில் இருந்து இந்தியா திரும்பி சேவாதளம் அமைப்பில் இணைந்தார். பின்னர் விரைவில் சேவாதளம் அமைப்பின் மகளிர் பிரிவு பொறுப்பாளராக உயர்ந்து பெண்களுக்கு பயிற்சி அளிக்க ஆரம்பித்தார்.  பின்னர் அனைத்திந்திய மகளிர் மாநாட்டின் நிறுவனருடன் ஏற்பட்ட நட்பால் கி.பி.1926ல் சென்னை மாகாண சட்டசபைக்கு முதன்முதலில் போட்டியிட்ட பெண் என்ற பெருமையை பெற்றாலும் குறைந்த ஒட்டு வித்தியாசத்தில் தோல்வியுற்றார். பின்னர் அனைந்திய மகளிர் மாநாட்டில் அமைப்பு செயலாளராக உயர்ந்து ஐரோப்பிய நாடுகளுக்கும் பயணம் செய்து பெண் கல்வியின் அவசியத்தையும் சமுதாய மாற்றத்தையும் விளக்கி பெண்களின் உரிமைக்காக பாடுபட ஆரம்பித்தார். கி.பி.1930ல் காந்தி உப்பு சத்தியாகிரகம் அறிவிப்பு வெளியிட்ட போது அந்த குழுவின் 7 உறுப்பினர்களுள் இவரும் ஒருவராக மும்பையில் உப்பு காய்ச்சி அதை விற்கும் முயற்சியில் கைது செய்யப்பட்டார். பின்னர் காங்கிரஸ் சோஷியலிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்பட்டார். 


பின்னர் இவர் அந்த காலத்தில் ஓலியமைப்பு இல்லாத பேசாதிரைப்படங்களில் நடித்தார். கன்னடத்தில் முதல் பேசா திரைப்படமான மிரிச்சகட்டிகா என்ற படத்தில் கி.பி.1931ல் நடித்தார். பின்னர் இந்தியில் தான்சேன், ஷங்கர் பார்வதி, தான்னா பஹத் ஆகிய திரைபப்டங்களில் நடித்தார். திருமணமான சில ஆண்டுகளுக்கு பிறகு இவரை கணவரை மணமுறிவு செய்தார். அந்த காலகட்டத்தில் பெண்கள் விவாகரத்து செய்வது மிகவும் புதியதாக இருந்ததால் இவரது விவாகரத்து சமூகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் இவரை பற்றிய விமர்சனங்கள் பரவலாக எழுந்தது.


கி.பி.1939ல் இவர் இங்கிலாந்தில் இருந்தபோது இரண்டாம் உலகப்போர் ஆரம்பித்தது. அந்த நேரத்தில் இந்தியாவின் விடுதலைக்காக இங்கிலாந்தில் ஆதரவு திரட்டினார். நாடு சுதந்திரம் அடைந்தபோது ஏற்பட்ட கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிதாபாத் நகரில் மருத்துவ சேவை மையம் அமைத்து உணவும் தங்குமிடம் மருத்துவ சேவைகளை அளித்தார். அவர்களின் மறுவாழ்விற்கு கைத்தறி தொழிலை கற்று கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவினார். இவரது பணிகளால் இந்திய அரசு இவருக்கு கி.பி.1955ல் பத்ம பூஷன் விருதும் கி.பி.1966ல் ராமன் மகசேசே விருதும் வழங்கியது. பின்னர் இவரின் கைவினை பொருட்கள் ஊக்குவிப்பிற்காக யூனெஸ்கோ அமைப்பு கி.பி.1977ல் விருது வழங்கியது. இந்திய அரசு கி.பி.1987ல் இவருக்கு பத்ம விபூசன் விருது வழங்கி கெளரவித்தது. இவர் எண்ணற்ற நூல்களை மகளிர் நலம், கைவினை பொருட்கள் சம்பந்தமாக எழுதியுள்ளார். கி.பி.1988 அக்டோபர் 29ம் தேதி மும்பையில் இவர் தனது 85வது வயதில் காலமானார்.

Comments

Popular posts from this blog

145) குந்தள குமாரி சபத்

146) அம்மு சுவாமிநாதன்

137) காளி பாய்