48) அஸிசுன் பாய்

அஸிசுன் பாய் (கி.பி.1831-1858) :

சரித்திரத்தில் மஹாராஜாக்கள் மஹாராணிகள் மட்டும் இடம் பெறவில்லை. சாமானியர்களும் தங்கள் தியாகத்தாலும் அவர்களின் அப்பழுக்கற்ற எண்ணங்களாலும் செயல்களாலும் இடம் பெற்று இருக்கின்றனர். அத்தகையவர்களில்  ஒருவர் தான் அஸிசுன் பாய். முதல் இந்திய சுதந்திர போரில் மிகவும் துடிப்புடன் பாடுபட்ட இளம்பெண் இவர். இன்றும் கான்பூர் நகரில் இவரின் தியாகத்தை சிறப்பித்து இவர் பெயரிலான வீதிகள் இன்றும் உள்ளது.

இவர் கி.பி.1831ல் லக்னோவில் பிறந்தார். இவரது தாய் அரண்மனையில் பணிப்பெண்ணாக பணிபுரிந்தவர். இவரது சிறு வயதிலையே அவர் இறந்து போனார். அதனால் இவர் லக்னோவிலுள்ள சத்ரங்கி மஹால் அரண்மனையில் பணிப்பெண்ணாக வேலைக்கு சேர்ந்தார். பின்னர் இவர் கான்பூரில் உம்ரோ பேகம் என்பவரின் லூர்கி மஹாலில் பணிப்பெண்ணாக வேலைக்கு சேர்ந்தார். இவருக்கும் கான்பூரின் குதிரைப்படையில் 2ம் பிரிவு வீரரான சாம்சுதீன் கானுக்கும் காதல் மலர்ந்தது. அந்த நேரத்தில் கான்பூரின் நானா சாகிப் கி.பி.1857ல் இந்திய சுதந்திர போராட்டத்தின் போது ஆங்கிலேயருக்கு எதிர்நிலை எடுக்க இவரது காதலருக்கு ஆதரவாக இவரும் களத்தில் குதித்தார். நானா சாகிப்பை இந்தியாவின் மஹாராஜாவாக ஆக்கும் முயற்சியில் இவரது வீட்டில் தான் படைவீரர்கள் தகவல்களை பரிமாற்றம் நிகழ்வுகளும் நடந்தது. இவரது வீட்டில் ஆயுதங்களை சேகரித்து வைத்தனர். இவரும் ஆயுதங்களை உபயோகிக்கவும் குதிரையேற்றமும் கற்று கொண்டார். தன்னையொத்த பெண்களுக்கும் ஆயுதங்களை உபயோகிக்கவும் குதிரையேற்றமும் கற்று கொடுத்தார். ஆண்களை போல உடையணிந்து பயிற்சிகள் கொடுத்தார். அது மட்டுமல்லாது போரில் காயமடைந்த வீரர்களுக்கு சிகிச்சையளிக்கவும் பெண்கள் படையை தயார் செய்தார். இவர் ஆங்கிலேய ஜெனரல் வீலரை எதிர்த்து முதல் நாள் போரில் வெற்றி பெற்றார். நானா சாகிப்பின் ஆரம்ப நிலை வெற்றியில் இவரின் பங்கும் முக்கியமானது. பின்னர் போரின் போது இவர் சிறைபிடிக்கப்பட்டு ஜெனரல் ஹாவ்லாக் வசம் ஒப்படைக்கப்பட்டார். அவர் இவரிடம் புரட்சியாளர்களை பற்றி தகவல்கள் கூறினால் இவரை மன்னித்து விடுவதாகவும் போரில் இவரின் பங்களிப்பை மறந்து இவரை வெளியே விடுவதாகவும் கூறினார். ஆனாலும் இவர் அதை மறுத்து சக தோழர்களை காட்டி கொடுப்பதை விட மரணமே மேலானது என்று மரணத்தை தேர்ந்தெடுத்தார். ஆங்கிலேயர்கள் இவரின் பங்களிப்பை மறைக்க விரும்பி இவரை பற்றி பணிப்பெண் என்று கூறாமல் அந்தப்புர ஆசை நாயகிகளுள் ஒருவராக இருந்தார் என்று கேவலமாக குறிப்பிட்டனர். ஆனாலும் கான்பூர் மக்கள் இவரை தியாகத்தை மறக்கவில்லை. இன்றும் இவரது பெயரில் கான்பூரில் உள்ள தெருவுக்கு பெயர் சூட்டி இவரின் தியாகத்தை போற்றினர். 

இந்திய சுதந்திரத்திற்கு ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் தங்களது தியாகத்தால் இடம் பெற்றனர். அன்னியரை நாட்டை விட்டு விரட்ட தங்களது இன்னுயிரையும் தயங்காமல் தியாகம் செய்த பெண்களில் ஒருவராக அஸிசுன் பாய் வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடத்தை பெற்றுள்ளார்.

Comments

Popular posts from this blog

145) குந்தள குமாரி சபத்

146) அம்மு சுவாமிநாதன்

137) காளி பாய்