மதுரை குஞ்சரத்தம்மாள்
மதுரை குஞ்சரத்தம்மாள் :
இந்திய வரலாற்றில் எத்தனையோ தியாகங்கள் செய்த பெண்களுள் இவரின் தியாகம் மகத்தானது. தாசி குலத்தில் பிறந்து வாழ்க்கையை நடத்தினாலும் தன் உயர்ந்த எண்ணத்தாலும் கருணை மிக்க செயலினாலும் மதுரை மக்களின் மனதில் உயர்ந்து நின்றவர்.19ம் நூற்றாண்டின் தாது வருட பஞ்ச காலத்தில் தன் சொத்து வீடு வாசல் நகைகள் அனைத்தையும் விற்று ஒரு அரசால் செய்யவேண்டிய உணவு வழங்கலை தனியொரு பெண்ணாக நடத்தி கஞ்சி தொட்டி திறந்து மதுரை மக்களின் உயிரை காத்த மாதருள் மாணிக்கம் இவர்.
குஞ்சரம் மதுரையில் கொடிகட்டி பறந்த தாசி குல பெண்மணி. பெரும்செல்வந்தர்களும் அவரிடம் மயங்கி தன் செல்வங்களை கொட்டி வழங்க காத்திருந்தனர். அவரது கண்ணசைவுக்கு மதுரையே ஏங்கி கிடந்தது. மதுரையின் வடக்கு ஆவணி மூல விதியில் உள்ள இரண்டு பெரும் மாளிகைகளும் அவருக்கு சொந்தமாக இருந்தது. தேவரடியார் என்பதால் அந்த மாளிகைகளில் எப்போதும் இசையும் நடனமும் பாடலுமாக எப்போதும் களை கட்டியே இருக்கும். உடல் முழுக்க தங்கம் பவளம் வைரம் முத்து நகைகள் அணிந்து அவர் கோயிலுக்கு செல்வதை காண மதுரை மாநகரமே ஏங்கி கிடந்த காலம் அது. மிதமிஞ்சிய செல்வ செழிப்பில் மிதந்த பெண்மணி.
இவரின் இந்த காலகட்டத்தில் மதுரையில் தாது வருட பஞ்சம் கி.பி.1875-1880 களில் வாட்டி வதைக்க ஆரம்பித்தது. மக்கள் உணவுக்கு வழியில்லாமல் எறும்புகள் தங்கள் புற்றுகளில் சேகரித்து வைத்திருக்கும் புற்று குறுணை அரிசியை எறும்பு புற்றை உடைத்து சேகரித்து உண்ண ஆரம்பித்தனர். முருங்கை கீரையை அவித்து உண்டு பசியை போக்கினார். அதுவும் கிடைக்காத நேரங்களில் பசியினாலும் யாராவது கஞ்சி தருவார்களா என்றும் காத்திருந்தனர். பசியை தாங்க முடியாத மக்கள் கொத்து கொத்தாக மடிய ஆரம்பித்தனர். ஆங்கிலேய அரசும் இதை கண்டு எந்த ஏற்பாடுகளும் செய்யவில்லை. குஞ்சரத்தம்மாள் மக்களின் பசியை கண்டு வருந்தி தன் நகைகளை விற்று மக்களுக்கு கஞ்சி வடித்து ஊற்றி அவர்களின் பசியை போக்கினார். மக்கள் கூட்டம் அலை மோதியது. அனைவருக்கும் கஞ்சி தொட்டி திறந்து அவர்களின் பசியை போக்கினார். அவரின் நகைகள் அனைத்தும் விற்றவுடன் பின்னர் மாளிகைகளையும் விற்று நாடி வந்த மக்களுக்கு கஞ்சி காய்ச்சி ஊற்றினார். வேலையாட்கள் வராத போதும் கூட தளராமல் தானே அனைவருக்கும் கஞ்சி காய்ச்சி பரிமாறினார். சிலப்பதிகாரத்தில் கூறப்பட்ட மணிமேகலையாக தன் சொத்துக்கள் அனைத்தையும் விற்று மக்களின் பணிப்பிணியை போக்கும் முயற்சியில் தளராமல் ஈடுபட்டார். இவர் கஞ்சி தொட்டி திறந்ததை கண்ட மதுரை கலெக்டர் ஜார்ஜ் பிராக்டர் ஆச்சரியப்பட்டு அரசு செய்ய வேண்டியதை தனியொருத்தி செய்வதை கண்டு மேலதிகாரிகளிடம் பேசி அடுத்த ஆறு வாரங்களில் அரசின் சார்பாக கஞ்சி தொட்டிகள் திறந்து மக்களின் பசியை போக்கும் முயற்சியில் உதவ ஆரம்பித்தார். ஆங்கிலேயர் வழங்கிய கஞ்சி தொட்டியில் குடித்தவர்களை அவர் ரயில் பாதைகள் அமைக்கும் வேலைக்கு உபயோகப்படுத்தினார். மெல்ல மெல்ல இவரின் கஞ்சி தொட்டியில் குடிக்க ஆட்கள் குறைந்தாலும் இவர் விடாது தன்னை நாடி வந்த மக்களுக்கு தொடர்ந்து தானே காய்ச்சி கொடுத்து உதவினார். சொத்துகளை இழந்து குடிசைக்கு மாறினார். தொடர்ந்த உழைப்பினால் நோய்வாய்ப்பட்டார். தாது வருட பஞ்சம் கழிந்தது. பஞ்சகாலத்தில் தாயாக உதவியவரை மதுரை மக்கள் போற்றி புகழ்ந்தனர். வறுமையில் நோய்வாய்ப்பட்டு குடிசையில் வாழ்ந்தாலும் மக்களின் பசியை போக்கிய அந்த தாயுள்ளம் பஞ்சம் முடிந்ததை கண்டு மகிழ்ந்தது. ஆனால் அடுத்த இரண்டு மாதங்களில் அவர் இறந்து போனார். மதுரையே கண்ணீர் விட்டு கதறியது. இவரின் கஞ்சி தொட்டியினால் உண்டு பிழைத்த மக்கள் அனைவரும் இவரின் இறுதி சடங்கிற்கு ஒன்று கூடினர். மதுரையே குலுங்கியது. இதை கண்ட மதுரை கலெக்டர் ஜார்ஜ் பிராக்டர் மதுரையில் திருவிழா சமயத்தில் இத்தனை கூட்டம் கூடும். ஒருவர் இறந்ததற்காக இத்தனை கூட்டம் கூடியதை இன்று தான் பார்க்கிறேன் என்று தன் குறிப்புகளில் எழுதி வைத்தார். இவரின் மறைவினால் வான் மழைக்கு ஈடாக மக்களின் கண்ணீர் மழை உண்டானது. மறைந்த கவிஞர் கண்ணதாசனின் வைர வரிகளான "வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்" என்ற பாடலுக்கு உதாரணமாக மதுரை குஞ்சரத்தம்மாள் மதுரை மக்களின் மனங்களில் தெய்வதாயாக உயர்ந்து நிற்கிறார்.
பின் குறிப்பு : இது உண்மை கதையில்லை என்ற விவரம் பின்பு தான் தெரிந்தது. காவற்கோட்டம் நாவலில் உள்ள கிளைக்கதையின் விவரமே இது. இது உண்மை சம்பவமல்ல என்று சம்பந்தப்பட்ட எழுத்தாளரின் பேட்டியின் மூலம் அறிந்து கொண்டதினால் இந்த பகுதி எண்களோடு குறிப்பிடப்படவில்லை.

Comments
Post a Comment