50) ஒனகே ஒபவ்வா

ஒனகே (உலக்கை) ஒபவ்வா :


இந்திய சரித்திரம் கண்ட வீரப்பெண்மணிகளுள் இவரும் ஒருவர். எதிரிகள் தங்கள் கோட்டையில் சிறு குகை பிளவின் வழியாக ஒருவர் பின் ஒருவராக நுழையும்போது அவர்களை தடுக்க ஆள் துணையில்லாமல் தான் ஒருவரே எந்த ஆயுதமும் இல்லாமல் உலக்கையில் அடித்து கொன்று கோட்டையை காத்த வீரப்பெண்மணி இவர். தன்னம்பிக்கையும் துணிச்சலுமே ஆயுதமாக கொண்டு எதிரிகளை தடுத்து நிறுத்திய பெண்மணி இவர்.

இவர் கி.பி.18ம் நூற்றாண்டை சேர்ந்த பெண்மணி. அந்த காலகட்டத்தில் இன்றைய கர்நாடகாவின் சித்ரதுர்கா பகுதி மதகரி நாயக்கர் என்பவரால் ஆளப்பட்டது. அவரது கோட்டை காவலாளியின் மனைவி தான் இந்த வீரப்பெண்மணி ஒபவ்வா. உலக்கையை கொண்டு எதிரிகளை வீழ்த்தியதால் ஒனகே (உலக்கை) ஒபவ்வா என்று அழைக்கப்பட்டார். கி.பி.1779ல் மைசூராக ஆண்ட சுல்தான் ஹைதர் அலி சித்ரதுர்காவை பிடிக்க ஆசை கொண்டார். இதனால் அவரின் படைகள் சிதரதுர்காவின் மீது படையெடுத்து முற்றுகையிட்டது. கோட்டை மலைகுன்றின் மேல் இருந்ததால் கோட்டையை பிடிக்க ஹைதர் அலியின் படைகள் சிரமப்பட்டன. இந்த நேரத்தில் குன்றில் உள்ள சிறு பிளவை ஹைதர் அலி படைகள் கண்டுபிடித்தனர். ஆனால் அதன் வழியே ஒருவர் பின் ஒருவராக தான் செல்ல முடியும் என்ற நிலை இருந்தது. எதிரிகள் இதன் வழியே உள்ளே வரலாம் என்று உணர்ந்த சித்ரதுர்கா அரசரான மதகிரி நாயக்கர் அந்த பிளவுக்கு ஒபவ்வாவின் கணவரை காவலுக்கு நியமித்தார். மதிய உணவுக்காக வீட்டுக்கு வந்த கணவர் மனைவி ஒபவ்வாவை தண்ணீர் எடுத்து வர கூற பிளவின் அருகில் இருந்த குட்டையில் நீர் எடுத்து வர சென்ற போது எதிரி ஒருவர் பிளவிலிருந்து வெளியே வர முயற்சித்தார். இதை கண்ட ஒபவ்வா அருகிலுள்ளோரை அழைக்க முற்பட்டு யாரும் இல்லாததை உணர்ந்து தன் கையில் எந்த ஆயுதமும் இல்லாததை உணர்ந்து கையில் இருந்த உலக்கையையே ஆயுதமாக பயன்படுத்த முடிவு செய்து பிளவின் வழியே வந்த முதல் வீரனை வீழ்த்தினார். பின்னர் ஒருவர் பின் ஒருவராக வந்த வீரர்கள் அனைவரையும் அடுத்தவர் அறியாமல் தலையில் உலக்கையால் அடித்து கொன்றார். மதிய உணவை முடித்து வந்த கணவர் தன் மனைவி உலக்கையுடன் ரத்தம் சொட்ட சொட்ட நிற்பதையும் கீழே எதிரிகள் மாண்டு கிடப்பதையும் கண்டவர் அபாய சங்கை ஊதி தன் வீரர்களை வரவழைத்து பிளவின் உள்ளே இருந்த எஞ்சிய ஹைதர் அலியின் வீரர்களையும் கொன்றனர். இவ்வாறு ஹைதர் அலி சித்ரதுர்கா கோட்டையில் நுழைய முயன்ற நிகழ்வு தடுத்து நிறுத்தப்பட்டது. ஆனாலும் அன்றே இந்த வீரபெண்மணி ஒபவ்வாவும் மரணமடைந்தார். அதிர்ச்சியில் மரணமடைந்ததாகவும் எதிரி வீரர்களால் கொல்லப்பட்டார் என்றும் இருவேறு கருத்துகள் உண்டு. 

இவரின் தைரியம் மற்றும் தன்னம்பிக்கை காரணமாக இவர் கர்நாடகத்தின் வீரபெண்மணிகளுள் ஒருவராக மதிக்கப்படுகிறார். சித்ரதுர்கா கோட்டையில் மைசூர் ஹைதர் அலியின் வீரர்கள் நுழைய முயன்ற பிளவு "ஒனகே ஒபவ்வா கிண்டி" என்ற பெயரினால் இன்று அழைக்கப்படுகிறது. மேலும் சித்ரதுர்காவிலுள்ள அரசு விளையாட்டு மைதானத்திற்கு இவரின் பெயரை சூட்டி கர்நாடக அரசு இவரை கெளரவித்தது. சங்க காலத்தில் புலியை முறத்தால் விரட்டிய தமிழ் பெண்மணியின் மறு உருவமாக ஆயுதங்களுடன் வந்த எதிரிகளை வெறும் உலக்கையினாலும் சாதுர்யமான புத்தியினால் வீழ்த்தி தனது கோட்டையையும் எதிரிகளிடமிருந்து காத்த இந்த வீரபெண்மணி உண்மையிலேயே போற்றுதலுக்குரியவர்.

Comments

Popular posts from this blog

145) குந்தள குமாரி சபத்

146) அம்மு சுவாமிநாதன்

137) காளி பாய்