51) பெல்வாடி மல்லம்மா
பெல்வாடி மல்லம்மா :
இந்திய சரித்திரம் கண்ட வீரபெண்மணிகளுள் இவரும் ஒருவர். தனது இராஜ்ஜியத்தை அபகரிக்க முயன்ற சத்ரபதி சிவாஜியை எதிர்த்து போரிட்டு அவரை விரட்டியடித்தார். தனது இராஜ்ஜியத்தின் மீது மாற்றானின் நிழல் கூட படக்கூடாது என்று கணவரின் மரணத்தினாலும் துவளாமல் தானே படை நடத்தி சென்ற வீரபெண்மணி தான் இந்த பெல்வாடி மல்லம்மா.
இவர் சோர்டே சமஸ்தானத்து மன்னரான மதுலிங்க நாயக்கருக்கு மகளாக பிறந்தார். இவருக்கு 5 வயதாக இருக்கும்போது இவரது தந்தையான மதுலிங்க நாயக்கர் இவருக்கும் இவரது மூத்த சகோதரரான சதாசிவ நாயக்கருக்கும் கல்வி கற்பதற்காக பள்ளிகூடம் கட்டினார். பள்ளிக்கூடத்திற்கு 10 கற்றறிந்த ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் மட்டும் படிக்காமல் படிக்க விருப்பப்பட்ட அனைத்து சாதி குழந்தைகளும் இந்த பள்ளிக்கூடத்தில் படித்தனர். 10 வருடம் இந்த பள்ளியில் படித்து மராத்தி, உருது, சமஸ்கிருதம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றார். படிப்பில் மிக புத்திசாலியாக விளங்கினார். இவர் தனது 12 வயதிலையே பாடல் எழுதும் திறமையை வளர்த்துக்கொண்டார். இவரது தந்தை அனைத்து ஆண்களும் கட்டாயம் ராணுவ பயிற்சி பெற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து அவர்களுக்கு பயிற்றுவிக்க ரன்வீர் சிங் என்பவரை நியமனம் செய்தார். அதன் மூலம் பெண்ணாக இருந்தாலும் இவரும் வாள் வீச்சு, அம்பெறிதல் மற்றும் குதிரையேற்றம் முதலிய போர்க்கலைகளை கற்றார். பின்னர் இவர் பெல்வாடி சமஸ்தான மன்னரான இஷா பிரபுவை மணந்தார்.
கி.பி.17ம் நூற்றாண்டின் இறுதி பகுதியான கி.பி.1678ல் அந்த நேரத்தில் சிவாஜியின் மராத்திய சாம்ராஜ்யம் தக்காண பகுதிகளில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது. இந்த நேரத்தில் இன்றைய பெல்காம் அருகிலுள்ள பெலகவி மாவட்டத்திலுள்ள பெலவாடி சமஸ்தானத்தை மல்லம்மாவின் கணவரான இஷாபிரபு ஆண்டு வந்தார். தெற்கே தனது சாம்ராஜ்யத்தை விரிவாக்கம் செய்து விட்டு மகாராஷ்டிரா திரும்பும் வழியில் பெலவாடியை கடக்கும்போது அங்குள்ள விவசாயிகளின் கால்நடைகளை மராத்திய படைகள் அபகரித்தன. இதனால் விவசாயிகள் இஷாபிரபுவிடம் முறையிட அவர் போருக்கு தயாரானார். போரின் போது இஷாபிரபுவின் குதிரையின் பின்னங்காலை மராத்திய படைகள் தாக்கியதில் குதிரையிலிருந்து கீழே விழந்த மல்லம்மாவின் கணவரான இஷாபிரபு இறந்து போனார். அதன் பின்னர் தனது நாட்டை காக்க மல்லம்மாவே போர் களத்தில் இறங்கினார். போரின் போது தன்னை சூழ்ந்த 5,6 மராத்திய வீரர்களை கொன்று குவித்தார். கணவரின் மரணத்தையும் கண்டு கலங்காமல் சிவாஜியின் படைகளுடன் போரிட்டார். அவரின் குதிரையின் கால்களை தாக்கியதால் கீழே விழந்த இவர் சுதாரித்து எழுந்து மராத்திய தளபதியான தாதாஜி ஜாதவ்வை வாளால் எதிர்கொண்டார். தனது வாளால் அவரை பயங்கரமாக காயப்படுத்திய நேரத்தில் மற்றொரு மராத்திய படைகள் வெள்ளை கொடி ஏந்தி வந்து போரை நிறுத்தி சிவாஜி மகாராஜா உங்களை சந்திக்க பிரியப்படுவதாக கூறவும் பல்லக்கில் ஏறி சென்று சிவாஜி மஹாராஜாவை சந்தித்தார். அவரை சந்தித்த சிவாஜி அவரின் காலில் தலைவைத்து வணங்கி "ஜெகதாம்பா பவானி தேவி. என்னை மன்னியுங்கள். முஸ்லீம்கள் ஆட்சியை ஒழிக்க தான் படை நடத்தி சென்றேன். இந்து இராஜ்யங்களின் மீது ஆசையில்லை. இது தவறுதலாக நடந்த ஒன்று. உங்களின் கால்களில் மன்னிப்பை வேண்டுகிறேன்" என்று சமாதானம் கூறினார். ஆனால் மல்லம்மா தேவி சிவாஜியிடம் "உங்களது மகன் சாம்பாஜி என்னை அபகரிக்க நினைத்து என் கணவரை கொன்று விட்டார். அதனால் எனது கணவரை விட மோசமான சாவு அவனுக்கு வரும்" என்று சாபமிட்டார். சிவாஜி மல்லம்மாவிடம் "அம்மா உன்னில் என் தாய் ஜீஜாபாய்யை காணுகிறேன். இது அறியாமல் நடந்த தவறு. முஸ்லீம் ஆட்சியாளர்கள் தான் எங்களது இலக்கே தவிர இந்து இராஜ்யங்கள் அல்ல" என்று கூறி பெண்களிடம் தவறாக நடக்க முயன்ற தளபதியை கொல்ல ஆணை பிறப்பித்தார். சிவாஜியின் இந்த பண்பினால் மல்லம்மா அவரிடம் பெருமதிப்பு கொண்டார். இந்த நிகழ்வு தான் யாதவதா கல்லில் குறிப்பிடப்பட்டுள்ளது. மல்லம்மாவின் ஆசிரியரான சங்கர பட்டர் எழுதிய சமஸ்கிருத புத்தகத்தில் சிவாஜி மல்லம்மாவால் தோற்கடிக்கப்பட்டார் என்று விவரத்தை குறிப்பிட்டுள்ளார். மராத்திய அறிஞர் ஜதுநாத் சர்க்கார் எழுதிய சிவாஜியின் வாழ்க்கை வரலாற்றில் மல்லம்மாவை சாவித்திரி பாய் என்றும் இருவருக்கும் இடையே 27 நாட்கள் போர் நடைபெற்றதையும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் மல்லம்மாவின் சாபத்தின் விளைவோ என்னவோ அடுத்த 11 வருடங்களில் சிவாஜியின் மகனான சாம்பாஜி மொகலாய அரசர் ஒளரங்கசீப்பினால் கைது செய்யப்பட்டு கண்கள் தோண்டப்பட்டு நாக்கு வெட்டப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.


Comments
Post a Comment