52) பீபி டாலோர் கவுர்

பீபீ டாலோர் கவுர் (???‌-கி.பி.1705)


இந்திய வரலாற்றில் வீரத்திற்கு பெயர் போனவர்கள் என்றால் அதில் சீக்கியர்களுக்கு ஒரு தனியிடம் உண்டு. சீக்கியர்களுள் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் வீராங்கனைகளாக போர் உடை தரித்து குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும் எதிரிகளை விரட்டியடிக்க தங்கள் இன்னுயிரை இழந்து தங்கள் தாய் மண்ணிற்காக போரிட்டுள்ளனர். அப்படிப்பட்ட வீராங்கனைகளுள் ஒருவர் தான் இந்த வீர பெண்மணி பீபீ டாலோர் கவுர். சீக்கியர்களின் பிரதான இடமான அனந்த்பூர் சாகிப்பை காக்க 10வது மற்றும் கடைசி சீக்கிய குருவான குரு கோவிந்த் சிங்கால் நியமிக்கப்பட்டவர். 100 பெண்கள் மற்றும் 10 ஆண்களுடன் அனந்தபூர் சாகிப்பை பல மாதம் தாக்குபிடித்து எதிரிகளிடம் போரிட்டு அவர்களின் படைகளில் பலத்த சேதத்தை ஏற்படுத்தி தங்கள் இன்னுயிரை இவரின் படை வீரர்கள் இழந்தனர். "நாங்கள் வேட்டைக்கானவர்கள் அல்ல. வேட்டைக்காரர்கள். மொகலாயர்களே ஒரு அடி முன்னால் வந்து பாருங்கள். அதை உணர்ந்து கொள்வீர்கள் " என்று வீர உரை நிகழ்த்தி மொகலாய படைகளை கலங்கடித்தவர்.

பீபீ டாலோர் கவுர் என்பவர் கி.பி.17ம் நூற்றாண்டின் கடைசியில் வாழ்ந்த சீக்கிய பெண்மணி. இவர் போர்கலைகளில் வல்லவர். இவர் சீக்கிய பெண்கள் படையை அமைத்தவர். இவரிடம் அனந்த்பூர் சாகிப் கல்சாவை காக்கும் பொறுப்பை குரு கோவிந்த் சிங் ஒப்படைத்தார். மொகலாயர்களின் லாகூர் கவர்னரான வஸீர் கான் மற்றும் தளபதியான ஜபர்தஸ்த் கான் (இருவரும் தான் குரு கோபிந்த் சிங்கை சதி செய்து கொலைகாரர்களை வேடமிட்டு அனுப்பி கொன்றவர்கள். கோவிந்த் சிங்கின் குழந்தைகளை அவர்களின் பாட்டி கண் முன்னே வெட்டி கொன்றவர்கள். இரண்டு குழந்தைகளை உயிரோடு சுவர் எழுப்பி கொன்றவர்கள். இவர்களை தான் பின்னாளில் சீக்கிய மாவீரன் பண்டா பகதூர் சிங் போர்களத்தில் கொன்று குருவின் மரணத்திற்கு பழிவாங்கினார்) 9 மாதங்கள் முற்றுகையிட்டும் கோட்டையை பிடிக்க முடியவில்லை. மொகலாயர்களிடம் 1 லட்சம் படைவீரர்கள் இருந்தாலும் குரு கோபிந்த் சிங்கை நெருங்க கூட முடியவில்லை. ஆனால் சீக்கியர்களின் கல்சா ராணுவம் மொகலாயர்கள் படைகளில் புகுந்து 10000 பேரை வெட்டி கொன்றனர். ஆனாலும் கோட்டையை மொகலாயர்களால் பிடிக்க முடியாமல் முற்றுகையில் காலம் கழித்தனர். கோட்டைக்கு உணவு மற்றும் நீரை தடுத்தனர். இதனால் குரு கோபிந்த் சிங் கோட்டையை விட்டு வெளியேற முடிவு செய்து பீபீ டாலோர் கவுர் மற்றும் 10 கல்சா வீரர்கள் வசம் கோட்டையை ஒப்படைத்து வெளியேற சிர்ஸா நதிகக்ரையில் நடந்த மோதலில் கல்சா ராணுவம் தோல்வியை தழுவ குரு கோபிந்த் சிங் மற்றும் 40 வீரர்கள் மட்டும் பாலைவனத்தின் வழியே தப்பித்து சென்றனர். குருவின் மகன்களை தந்திரமாக பிடித்து உயிரோடு சுவர் எழுப்பி கொன்றார்கள். பின்னர் கோட்டையை நோக்கி மொகலாய வீரர்கள் வந்தனர். பீபீ டாலோர் கவுர் தனது படை பெண்களிடம் "சகோதரிகளே நாம் சத்தியத்திற்கு கட்டுப்பட்டவர்கள். நாம் பயிற்சி பெற்ற படை வீராங்கனைகள். நாம் அடிமையாக வாழ்வதை விட மானத்துடன் மடிவதே மேல் என்போம். நாம் பெண் புலிகள் என்பதை மட்டும் மறக்காதீர்கள்" என்று வீர உரை நிகழ்த்தினார்.

வீரமாக போரிட்டும் இலட்சம் பேர் கொண்ட படையின் முன்பு ஒன்றும் செய்யமுடியாது. துப்பாக்கிகளால் தாக்கியதாலும் மானத்துடன் வாழ்வதே மேல் என்று கூற 100 படை வீராங்கனைகளும் விஷம் குடித்து மாண்டனர். கோட்டையின் உள்ளே சென்று பார்த்தால் திடிரென்று தாக்குதல் நடத்தி சில கல்சா வீரர்கள் மொகலாய படைகளை கொன்று குவித்து மாண்டனர். கடைசியில் கோட்டையின் எல்லா இடங்களிலும் தேடினால் மாண்ட வீரர்களை தவிர யாருமில்லை. கோட்டையின் நிலவறை வழியாக பெரும்பாலான வீரர்கள் தப்பித்து சென்று விட்டனர். பீபீ டாலோர் கவுர் தன்னை பிடிக்க முயன்ற மொகலாய வீரர்களை கொன்று குவித்து மாண்டு போனார். கொண்ட இலட்சியத்திற்காக தன்னுயிரையும் இழந்த பீபீ டாலோர் கவுர் மற்றும் அவரது 100 படை வீராங்கனைகளும் மற்ற படை வீரர்களை தப்பிக்க வைத்து காப்பாற்றினார்கள்.  சீக்கிய வரலாற்றில் உன்னதமான இடம் பெற்ற வீரர்களுள் வீராங்கனையான இப்பெண்மணியும் சீக்கியர்களின் மனங்களில் நிறைந்துள்ளார்.

Comments

Popular posts from this blog

135) கங்கா தேவி

137) காளி பாய்

முன்னுரை