53) மாய் பாகோ
மாய் பாகோ (கி.பி.1665-1708 க்கு பிறகு) :
கொண்ட கொள்கைக்காக வீரம் தியாகமே முக்கியம் உயிர் முக்கியமல்ல என்பதை உலகிற்கு அடித்து சொல்லிய வீர பெண்மணி. குரு கோபிந்த் சிங்கை காக்க பின்னால் விரட்டி வந்த மொகலாய படைகளை தானும் தன் குடும்பத்தாரும் மகன்களும் மற்றும் உறவினர்கள் மற்றும் 40 வீரர்கள் உடன் தடுத்து போரில் படுகாயமுற்று குரு கோபிந்த் சிங்கால் காப்பாற்றப்பட்டவர். பின்னாளில் அவரின் மெய்காப்பாளராக ஆணுடை தரித்து அவரின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார். குருவின் மரணத்திற்கு பின்னர் துறவறம் ஏற்று கர்நாடகா பகுதிக்கு வந்து ஆன்மீகத்தில் சீக்கிய மதத்தை பரப்பினார். குடும்ப வாழ்க்கை பின்னர் குருவை காக்க போர் பின்னர் குடும்பத்தை இழந்து குருவால் உயிர் பிழைத்து அவரின் மெய்காப்பாளர் பின்னர் அவரது மறைவுக்கு பின்னர் ஆன்மீக வாழ்வு என்று பலமுகங்களாக வாழ்ந்த வீர பெண்மணி இவர். சீக்கிய மதம் கண்ட வீர மகா உத்தம பெண்களுள் இவரும் ஒருவர். இவர் "சீக்கியர்களின் ஜோன் ஆஃப் ஆர்க்" என்று குறிப்பிடப்பட்டவர்.
இவர் இன்றைய பஞ்சாப்பிலுள்ள தார்ன்தரன் மாவட்டத்திலுள்ள சாபால் காலன் என்னும் கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தையான மாலோ ஷா குரு ஹர்கோபிந்த் ராணுவத்தில் இருந்தவர். இவரது தாத்தா 84 கிராமங்களின் தலைவராக இருந்த பாய் லங்கா என்பவரின் இளைய சகோதரர். அவரே குரு அர்ஜூன் சிங் காலத்தில் 84 கிராம மக்களுடன் கூண்டோடு சீக்கிய மதத்தின் இணைந்தவர். இவருக்கு தில்பாக் சிங் மற்றும் பாக் சிங் என்று இரு சகோதரர்கள் உண்டு. இவர் சிறு வயதில் இவரது தந்தையுடன் சென்று குரு கோபிந்த் சிங்கிடம் ஆசீர்வாதம் பெற்றார். இவர் பட்டி நகரை சேர்ந்த பாய் நிதான் சிங் என்பவரை மணந்தார்.
கி.பி.1704ல் சிர்ஹிந்தின் வஸீர்கான் மொகலாய ஒளரங்கசீப்பின் ஆணைப்படி அனந்த்பூர் சாகிப் மீது படையெடுத்தார். முற்றுகையின் போது சீக்கியர்கள் தங்கள் மதத்தை விட்டு வெளியேறினால் அவர்களை விட்டுவிடுவதாக அறிவித்தார். அதன்படி மஹான் சிங் என்பவரின் தலைமையில் 40 சீக்கியர்கள் குரு கோபிந்த் சிங்கிடம் சென்று தங்கள் சீக்கிய மதத்தை விட்டு வெளியேறுவதாக அறிவித்து அவரிடம் சாசனம் பெற்று வெளியேறினர். பின்னர் குரு கோட்டையை விட்டு வெளியேறினால் முற்றுகையை விட்டுவிடுவதாக கூற கோபிந்த் சிங் அவ்வாறே வெளியேற மொகலாய தளபதி வஸீர் கான் மற்றும் ஜபர்தஸ்த் கான் இருவரும் அவரை விரட்ட சம்கவுர் போர்களத்தில் குருவின் மூத்த இரு மகன்களும் படைதளபதிகளும் இறந்தனர். இந்த நேரத்தில் மாய் பாகோ மஹான் சிங் உட்பட 40 சீக்கியர்களை சந்தித்து சீக்கிய மதத்தில் இணைந்து குருவின் வழி நடக்க சம்மதிக்க வைத்தார். குருவை மொகலாய படைகள் விரட்ட கிர்தானா கிராமத்தில் மாய் பாகோ மற்றும் அவரது உறவினர்கள் கணவர் குழந்தைகள் மற்றும் 40 சீக்கியர்கள் உடன் இடையில் புகுந்து மொகலாய படைகளுடன் மோதினர். மொகலாய படைகளுக்கு பெருத்த சேதம் விளைவித்தனர். அந்த நேரத்தில் குன்றின் மேலிருந்து குரு கோபிந்த் சிங்கும் மொகலாய தரப்பை தாக்க அவர்கள் விலகி ஓடினர். போர்களத்தில் வந்து பார்க்கும்போது மஹான் சிங் தவிர மற்ற அனைவரும் இறந்து போய்விட்டிருந்தனர். மஹான் சிங் தலையை தன் மடியில் ஏந்திய குரு கோபிந்த் சிங் அவருக்கும் மற்றவர்களும் சொர்க்கம் உண்டு என்று அறிவித்தார். காயம்பட்டு நினைவு இழந்திருந்த மாய் பாகோவை தன்னுடன் அழைத்து சென்று காப்பாற்றினார். இந்த போரில் மாய் பாகோவின் உறவினர்கள் குழந்தைகள் மற்றும் கணவர் உட்பட அனைவரும் கொல்லப்பட்டனர். பின்னர் இவர் குரு கோபிந்த் சிங்கின் மெய்காவல் படையில் இணைந்தார். ஆணுடை தரித்து வாள் சகிதம் எப்போதும் குருவின் காவலுக்கு துணை நின்றார்.
கி.பி.1708ல் நந்தேத் என்னுமிடத்தில் உள்ள குருத்வாராவில் வஸீர் கான் மற்றும் ஜபர்தஸ்த் கான் அனுப்பிய கூலிப்படை மாறுவேடம் அணிந்து பக்தர்கள் போல் வந்து தாக்க அதில் குரு கோபிந்த் சிங் காயம்பட்டார். சிகிச்சையின் போதும் உடல் பயிற்சிகள் செய்ததால் காயங்களிலிருந்து இரத்த பெருக்கு ஏற்பட்டது. தன் முடிவை அறிந்து இனி பண்டா பகதூரே சீக்கியர்களின் கல்சா அமைப்பின் தலைவர் என்றும் இனி மானிடர்களில் தன்னுடன் குரு வம்சம் முடிந்தது என்றும் 10 குருக்களின் போதனைகளே இனி சீக்கியர்களை காப்பாற்றும் என்று கூறி மறைந்தார். அவரின் மறைவுக்குப் பின்னர் மாய் பாகோ ஆன்மீகத்திற்கு மாறினார். இன்றைய கர்நாடகத்திலுள்ள பிடர் அருகிலுள்ள ஜனவாடா என்னுமிடத்தில் அங்கு சீக்கியர்களின் தேரா அமைத்து தியானத்தையும் சீக்கியத்தையும் பரப்பினார். அவர் மறைவுக்கு பின்னர் அந்த இடம் குருத்வாராவாக மாறியது. சீக்கிய மதத்தை காக்க வாள் ஏந்திய இவர் "சீக்கியர்களின் ஜோன் ஆஃப் ஆர்க்" என்ற பெயரில் குறிப்பிடப்பட்டார். சீக்கிய பெண்களுக்கு இவர் ஒரு உத்வேகமாக இருந்தார். சீக்கிய குறிப்பேடுகளில் இவருக்கு ஒரு தனியிடம் உண்டு. மானத்தை இழந்து வாழ்வதை விட போரிட்டு மாள்வதே மேல் என்று முடிவெடுத்த வீர பெண்மணி இவர்.


Comments
Post a Comment