54) சந்த் பீபி
சந்த் பீபி (கி.பி.1550-1599) :
இந்திய வரலாற்றில் எத்தனையோ ராணிகள் தங்கள் தியாகத்தாலும் வீரத்தாலும் கருணையினாலும் இடம் பிடித்துள்ளனர். அத்தகைய ராணிகளுள் ஒருவராக அஹ்மத் நகர் சுல்தானகத்தின் ராணியான சந்த் பீபி இடம் பிடித்துள்ளார். கி.பி.16ம் நூற்றாண்டின் இறுதியில் பெரும்பலம் கொண்ட மொகலாய பேரரசர் அக்பரின் படைகளை எதிர்கொண்டு முறியடித்து விரட்டியவர் என்ற பெருமையை பெற்றவர் இவர்.
இவர் கி.பி.1550ல் அகமது நகர் சுல்தானான ஹூசைன் நிஜாம் ஷாவுக்கு மகளாக பிறந்தார். சுல்தானகங்களுக்குள் உள்ள நட்பால் பிஜப்பூரின் சுல்தான் முதலாம் அலி அடில் ஷாவை மணந்தார். தம்பதிகளுக்கு குழந்தையில்லை. அலி அடில் ஷா கொல்லப்பட இவர் தனது வளர்ப்பு மகனான இரண்டாம் இப்ராஹிம் அடில் ஷாவை பிஜப்பூர் மன்னராக்கினர். அவருக்கு பாதுகாவலராக இருந்து செயல்பட்டார். இவர் சித்தார் இசைக்கருவி வாசிப்பதில் வல்லவராக இருந்தார். ஓவியம் வரைவது இவரது பொழுதுபோக்காக இருந்தது. இவர் அரபி, பெர்ஷியன், துருக்கி, மராத்தி மற்றும் கன்னடம் மொழிகளை அறிந்தவர். குதிரையேற்றம் மற்றும் போர் பயிற்சிகளையும் பெற்றவர். இந்த நேரத்தில் அகமது நகரில் தந்தைக்கு பிறகு இவரது சகோதரர் இரண்டாம் புர்ஹான் நிஜாம் ஷா கி.பி.1590-95ல் அகமது நகர் சுல்தானாக இருந்தார். நான்கு தக்காண சுல்தானகமும் தனது ஆட்சியின் மேலாண்மையை ஏற்று செயல்பட அக்பர் கூறவே நான்கு சுல்தானகமும் மறுத்தது. அக்பர் பிஜப்பூர் சுல்தானகம் மேல் படையெடுக்க போரில் இவரது சகோதரர் கொல்லப்பட அவரது பிரபுக்கள் அவரது சிறுவயது மகனை அரசனாக்கினர். சில பிரபுக்கள் மொகலாயர்களின் நட்பு வேண்டி நின்ற போது அக்பரின் மகனான முராத் அகமது நகர் சுல்தானகம் மீது படையெடுத்து வந்து அகமது நகரை அபகரிக்க நினைக்க அகமது நகர் பிரபுக்கள் தங்கள் தவறை உணர்ந்து இறந்த போன அரசரின் சகோதரியான சந்த் பீபியை பாதுகாவலராக கொண்டு சிறுவனான பகதூர்ஷாவை அரசனாக்கினர். கி.பி.1595 நவம்பரில் அகமது நகர் முற்றுகையிடப்பட்டது. வெற்றிகரமாக முற்றுகையை சந்த் பீபி தவிர்த்தார்.
கி.பி1596ல் படைகள் பஞ்சத்தால் தவிக்க முராத் பின்வாங்கி சென்றார். பின்னர் சந்த் பீபி பிஜப்பூர் சுல்தானான தனது மருமகன் மற்றும் கோல்கொண்டா சுல்தானையும் மொகலாயர்களுக்கு எதிராக ஒன்றுபடுமாறு கேட்டுக்கொண்டார். பிஜப்பூரின் சுல்தான் இரண்டாம் இப்ராஹிம் அடில் ஷா தனது அமைச்சர் சோஹைல் கானுடன் 25000 படைகளை அனுப்பினார். சந்த் முஹம்மது கானை தனது அமைச்சராக்கினார். அவர் மொகலாய படைகளிடம் விலை போனார். மொகலாயர்களின் கான்-இ-கானா பெராரரின் சில பகுதிகளை கைப்பற்ற ஆரம்பிக்க சோஹைல் கானுக்கு மொகலாய படைகளை தாக்க பிஜப்பூரிலிருந்து உத்தரவு வந்தது. கோதாவரி ஆற்றின் கரையில் நடந்த மோதலில் சோஹைல் கான் தலைமையில் பிஜப்பூர், அகமது நகர் மற்றும் கோல்கொண்டா படைகள் மொகலாய படைகளுடன் மோதின. மொகலாய படைகள் வெற்றி பெற்றாலும் அதன் வலிமை குறையவே மொகலாய படைகள் ஆக்ரா திரும்பியது. பின்னர் கொஞ்ச காலத்தில் அக்பர் மீண்டும் தன் மகன் டேனியல் மற்றும் கான்-இ-கானாவுடன் படைகளை அனுப்பினார். அகமது நகரில் புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர் நேஹாங் கான் சந்த் பீபியின் பேச்சை கேட்காமல் மொகலாயர் வசமிருந்த பீட் நகரை கைப்பற்றி அதன் மொகலாய ஆளுநரை சிறைபிடித்தார். பின்னர் நேஹாங் கான் ஜெய்ப்பூர் கோட்லி கணவாய்யை கைப்பற்ற சென்றார். அக்பர் அனுப்பிய அவரது மகனான டேனியல் அவரை அங்கு சந்திக்காமல் அகமது நகர் கோட்டையை முற்றுகையிட்டார். மொகலாயரிடம் இருந்து கோட்டையை சந்த் பீபி காத்தாலும் ரொம்ப காலத்திற்கு அது முடியாது என்று உணர்ந்தார். அதனால் அவர் டேனியலுடன் பேச்சு வார்த்தை நடத்த முடிவு செய்தார். இந்த நேரத்தில் ராணியின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் புழங்கிய பிரபுக்கள் ராணி மொகலாயர்களிடம் ஏற்கனவே ஒப்பந்தம் செய்து கொண்டு விட்டார். கோட்டையை காட்டி கொடுக்கிறார் என்று வதந்தியை பரப்பினர். இதனால் ஆத்திரமடைந்த அவரது படைகளால் சந்த் பீபி கொல்லப்பட்டார். அவரது மரணத்திற்கு 4 மாதங்களுக்கு பிறகு அகமது நகர் கோட்டையை மொகலாயர்கள் கைப்பற்றி தங்களுடன் இணைத்து கொண்டனர். போட்டி பொறாமை பூசல்களால் நாட்டை நேசித்த ராணி சொந்த மக்களால் கொல்லப்பட்டதுடன் அகமது நகர் சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்தது. புத்திசாலித்தனமும் வீரமும் உடைய ராணியின் பேச்சை முழுவதும் புரிந்து கொள்ளாமல் அவரச புத்தியினால் அவரை கொன்று தங்களது வீழ்ச்சிக்கு அவர்களே அடிகோலினர். அக்பரின் படைகளை எதிர்த்து ஒருமுறை வாகை சூடி வீரமாக போரிட்டு நாட்டை காப்பாற்றிய ராணி சந்த் பீபி சொந்த மக்களால் கொல்லப்பட்டது தான் சோகத்தின் உச்சம்.


Comments
Post a Comment