55) மகாராணி ஜிந்த் கவுர்
மகாராணி ஜிந்த் கவுர் (கி.பி.1817-1863) :
இவர் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்கு அஞ்சாமல் சீக்கிய பேரரசை தோற்றுவித்த மகாராஜா ரஞ்சித் சிங்கின் மூன்றாவது மனைவி. இரஞ்சித் சிங் மரணத்திற்கு பின்னர் வாரிசு போட்டியில் ஒருவரையொருவர் கொன்று ஆட்சியுரிமையை பெற்று ரஞ்சித் சிங் கட்டிக்காத்த அரசை தொலைக்க முற்பட்டனர். கடைசியில் அந்த நேரங்களில் காஷ்மீரில் பாதுகாப்புடன் இருந்த இவர் பின்னாளில் தன் மகனான சிறுவன் துலீப் சிங்கை அரசில் அமர்த்தி அவரின் சார்பாக ஆங்கிலேயரை எதிர்த்தார். இதனால் முதலாம் ஆங்கில-சீக்கிய போரில் தோற்கடிக்கப்பட்டு மகனை பிரிந்து இலண்டனில் சிறைவைக்கப்பட்டு அங்கேயே மடிந்தார்.
இவர் கி.பி.1817ல் இன்றைய குஜ்ரன்வாலா அருகிலுள்ள ஸாஸார் என்னும் ஊரில் பிறந்தார். இவரின் அழகான தோற்றத்தால் கவரப்பட்டு இவரது 18 வயதில் கி.பி.1835ல் ரஞ்சித் சிங் இவரை மணந்தார். இவருக்கு கி.பி.1838ல் துலீப் சிங் என்ற மகன் பிறந்தார். மகன் பிறந்த ஒரு வருடத்திலையே ரஞ்சித் சிங் மறைந்தார். சீக்கிய அரசில் குழப்பங்கள் இருந்ததால் மந்திரி ராஜா தியான் சிங் தில்லான் பொறுப்பில் தாயும் மகனும் காஷ்மீரில் வாழ்ந்து வந்தனர். கடைசியில் 4வது சீக்கிய மகாராஜாவான காரக் சிங் மற்றும் மந்திரி ராஜா தியான் சிங் தில்லான் ஆகியோர் ஒருவரையொருவர் சுட்டுக்கொண்டு இறந்ததால் அடுத்த வாரிசு என்று வரும்போது வாரிசுகளில் மிஞ்சி இருந்தது துலீப் சிங் மட்டுமே. இதனால் கி.பி.1843ல் தனது 5 வயதில் துலீப்சிங் 5வது சீக்கிய மகாராஜாவாக பதவியில் அமர தாயாரான ஜிந்த் கவுர் அவருக்கு பாதுகாவலராக இருந்து ஆட்சி புரிந்தார். கி.பி.1845 டிசம்பர் இறுதியில் ஆரம்பித்த முதலாம் ஆங்கிலேய-சீக்கிய யுத்தத்தில் தோல்வியுற்ற பின்னர் விசாரணைக்கு பின்னர் இவர் சிறைபிடிக்கப்பட்டு லண்டனுக்கு நாடு கடத்தப்பட்டார். இவரது மகனான துலீப் சிங் இளையவர் என்பதால் மன்னிக்கப்பட்டு ஆங்கிலேயர் பாதுகாப்புடன் ஆட்சியில் இருந்தார். பின்னர் கி.பி.1954ல் டல்ஹெளசி பிரபுவின் உதவியால் இங்கிலாந்து சென்று கிறிஸ்தவ மதத்திற்கு மாறி விக்டோரியா மகாராணியை துலீப் சிங் சந்தித்தார். அதன் பிறகு இறக்கும்வரை துலீப் சிங் இந்தியா வரவேயில்லை. பெரும் முயற்சிக்கு பின்னர் துலீப் சிங்கின் விருப்பப்படி கி.பி.1861ல் ஜிந்த் கவுர் தன் மகனான துலீப் சிங்கை பார்த்துக்கொள்ள ஆங்கிலேயர் அனுமதித்தனர்.
கி.பி.1863ல் ஆகஸ்ட் 1ல் இவர் இங்கிலாந்திலுள்ள கென்ஸிங்க்டன் என்னும் ஊரில் மறைந்தார். ராஜ்யத்தில் வாரிசு போட்டி இருந்த போது ஒதுங்கியிருந்து பின்னர் ஆட்சியை தக்கவைக்கும் முயற்சியில் ஆங்கிலேயருடன் மோதி தோல்வியுற்று நாடு கடத்தப்பட்டு அங்கேயே மடிந்த துர்பாக்கியசாலி இவர்.


Comments
Post a Comment