56) கேப்டன் லக்ஷ்மி சேகல்
கேப்டன் லக்ஷ்மி சேகல் (கி.பி.1914-2012) :
இந்திய சரித்திரம் கண்ட வீர பெண்மணிகளுள் ஒருவர். மருத்துவம் படித்து மருத்துவராக இருந்தாலும் நாட்டு விடுதலைக்காக போராட்ட களத்தில் இறங்கி நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் கேப்டன் பொறுப்பில் இருந்து பாடுபட்டவர். கடைசியில் போரில் சிறைபிடிக்கப்பட்டு பின்னர் இடைக்கால அரசினால் விடுவிக்கப்பட்ட பின்னர் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்பட்டவர். பின்னாளில் இந்திய ஜனாதிபதி தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக நிறுத்தப்பட்ட பெருமைக்குரியவர் இவர்.
இவர் கி.பி. 1914 அக்டோபர் 24ல் கேரளாவில் உள்ள பாலக்காட்டில் தமிழ் பிராமணரான சென்னை வழக்கறிஞர் சுவாமிநாதனுக்கும் சமூக ஆர்வலரான கேரளாவின் நாயர் பிரிவை சேர்ந்த அம்முக்குட்டி என்பவருக்கும் மகளாக பிறந்தார். சென்னை ராணி மேரி கல்லூரியில் படித்து பின்னர் மருத்துவ படிப்பை தேர்ந்தெடுத்து கி.பி.1938ல் சென்னை மருத்துவக் கல்லூரியில் டாக்டர் பட்டம் பெற்றார். அடுத்த ஒரு வருடத்தில் மகளிர் மருத்துவம் மற்றும் மகப்பேறு மருத்துவத்தில் டிப்ளமோ பட்டம் பெற்றார். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அன்னை கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்தார். கி.பி.1940ல் விமானியான பி.கே.என். ராவ்வுடன் நடந்த திருமணம் தோல்வியில் முடிந்தவுடன் சிங்கப்பூர் சென்றார். அது தான் அவரது வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. சிங்கப்பூரில் இருந்தபோது சுபாஸின் இந்திய தேசிய ராணுவத்தில் உள்ள சிலரை சந்தித்தார்.
கி.பி.1942ல் ஆங்கிலேயரிடம் இருந்து ஜப்பானியர்களால் சிங்கப்பூர் கைப்பற்றப்பட்ட பின்னர் போரில் காயமடைந்த போர் வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்தார். அவர்கள் இந்திய தேசிய ராணுவம் அமைக்க ஆவலாக இருந்தனர். இந்த நேரத்தில் கி.பி.1943 ஜூலை 2ல் நேதாஜி சிங்கப்பூர் வந்தார். அவர் போரில் பெண்கள் படையை ஆரம்பிக்க ஆவலாக இருப்பதை அறிந்து அவருடன் ஒரு சந்திப்புக்கு வேண்டிக்கொண்டு சந்தித்தார். போரில் ஈடுபட விருப்பம் கொண்டிருந்த பெண்களை வைத்து ஜான்சி ராணி ரெஜிமெண்ட் என்ற பெயரில் பெண்கள் படைப்பிரிவை அமைத்தார். அது முதல் மருத்துவர் லக்ஷ்மி சுவாமிநாதன் கேப்டன் லக்ஷ்மி சுவாமிநாதன் என்ற பெயரில் அழைக்கப்பட ஆரம்பித்தார். கி.பி.1944 டிசம்பரில் ஜப்பானிய இராணுவம் பர்மாவை பிடிக்க அணிவகுத்து மார்ச் 1945ல் போர் ஜப்பானியருக்கு எதிராக திரும்பியது. இந்த போரில் கேப்டன் லக்ஷ்மி ஆங்கிலேயரால் பர்மாவில் மே 1945ல் சிறைபிடிக்கப்பட்டார். பின்னர் கி.பி.1946 மார்ச்சில் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார். இந்த நேரத்தில் இடைக்கால அரசு அமைந்து ஆங்கிலேய ஆட்சியின் முடிவு கண்ணில் தெரிய ஆரம்பிக்க இவர் விடுதலை செய்யப்பட்டார்.
பின்னர் இந்திய சுதந்திரத்திற்கு முன்னர் கி.பி.1947 மார்ச்சில் தன்னுடன் இந்திய தேசிய ராணுவத்தில் பணிபுரிந்த கேப்டன் பிரேம் சேகலை காதலித்து லாகூரில் திருமணம் செய்து கொண்டார். பின்னர் இவர்கள் கான்பூரில் குடிபுகுந்தனர். இந்த நேரத்தில் நாடெங்கும் இந்து-முஸ்ஸீம் கலவரம் பரவ கான்பூரில் மருத்துவ முகாம் அமைத்து காயம்பட்டவர்களுக்கு உதவிபுரிந்தார். தம்பதிகளுக்கு சுபாஷினி அலி மற்றும் அனிசா பூரி என்ற இரு மகள்கள் பிறந்தனர்.
இவர் கி.பி.1971ல் இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். ராஜ்யசபாவின் உறுப்பினராக பணியாற்றினார். 1971ல் பங்களாதேஷ் போரின் போது அகதிகளாக வந்த மக்களுக்கு கல்கத்தாவில் மருத்துவ நிவாரண முகாம்களில் பணிபுரிந்தார். கி.பி.1981ல் அனைத்திந்திய ஜனநாயக மகளிர் சங்கத்தின் நிறுவன உறுப்பினராக இருந்தார். கி.பி.1984ல் போபால் விஷவாயு கசிவின் போது மருத்துவ குழுவை தலைமை தாங்கி சென்றார். பொற்கோயில் சீக்கியர்கள் கலவரத்தின் போதும் மருத்துவ உதவிகள் செய்தார். பின்னர் கி.பி.1996ல் பெங்களூரில் நடந்த உலக அழகி போட்டிக்கு எதிரான பிரச்சாரத்தின் போது கைது செய்யப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் பார்வர்ட் ப்ளாக் போன்ற கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து கி.பி.2002ல் இவரை இந்திய ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக அறிவித்தன. அந்த தேர்தலில் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமிடம் தோற்று போனார். கி.பி.2006 வரை கான்பூரில் மருத்துவம் பார்த்து வந்த இவர் பின்னர் கி.பி.2012 ஜூலை 19ல் மாரடைப்பு ஏற்பட்டு கான்பூரில் தனது 98 வயதில் காலமானார். இவரது உடல் ஏற்கனவே மருத்துவ ஆராய்ச்சிக்காக தானமாக வழங்கப்பட்டது. போர் களத்திலும் சேவையிலும் நாட்டின் நெருக்கடியான கட்டங்களில் மருத்துவ சேவையையும் செய்ததுடன் நாட்டின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி போராடிய வீர பெண்மணியாக சரித்திரத்தில் லக்ஷ்மி சேகல் விளங்குகிறார்.


Comments
Post a Comment