58) ஹன்ஸா மேத்தா
ஹன்ஸா மேத்தா (கி.பி.1897-1995) :
இந்திய வரலாற்றில் முக்கியமான இடத்தை பெற்ற பெண்களுள் இவரும் ஒருவர். சுதந்திர போராட்ட களத்திலும் சமூக சேவகியாகவும் பெண்ணியவாதியாகவும் சீர்திருத்தவாதியாகவும் பல அவதாரங்கள் கொண்ட பெண்மணி இவர். இந்தியாவிலையே முதன் முதலில் பல்கலைகழக துணைவேந்தராக பரோடா யூனிவர்சிட்டியில் நியமிக்கப்பட்டவர் இவர் தான்.
இவர் கி.பி.1897 ஜூலை 3ல் இன்றைய சூரத் நகரில் பரோடா மாநிலத்தின் திவானாக இருந்த மனுபாய் மேத்தாவின் மகளாக பிராமண குடும்பத்தில் பிறந்தார். இவரது தாத்தாவான நந்தசங்கர் மேத்தாவே முதல் குஜராத்தி நாவலான "கரண் கெலோ"வை எழுதியவர். இவர் கி.பி.1918ல் தத்துவத்தில் பட்டம் பெற்று பின்னர் இங்கிலாந்தில் பத்திரிகை மற்றும் சமூகவியல் படித்தார். கி.பி.1918ல் சரோஜினி நாயுடுவையும் பின்னர் கி.பி.1922ல் மகாத்மா காந்தியையும் சந்தித்தார். அதன் பின்னர் ஹன்ஸா மேத்தா "இந்திய பெண்கள்" என்று எழுதிய புத்தகத்தில் இந்திய பெண்களின் கல்வியறிவை உயர்த்தும் நோக்கத்தில் எழுதியதால் பம்பாய் முனிசிபல் கல்விக்கூடங்களின் கமிட்டியில் இடம் பெற்றார். அந்த காலத்தில் சமூக அந்தஸ்து பெற்றிருந்த குடும்பத்தில் இருந்து வந்ததால் அவரால் வெளிநாடு சென்று படிக்க முடிந்தது. கி.பி.1928ல் மருத்துவரான ஜிவ்ராஜ் நாராயண் மேத்தா என்பவரை மணந்தார். இவரது கணவரே பின்னாளில் குஜராத்தின் முதல் முதலமைச்சராக பதவியேற்றவர். இவர் பரோட்டாவின் சீனியர் மெடிக்கல் ஆபிஷராக பணியாற்றினார். பின்னர் திருமணம் நடைபெறும் சமயத்தில் பம்பாயில் உள்ள கிங் எட்வர்ட் நினைவு மருத்துவமனையின் டீனாக பணியாற்றினார். இவரின் கணவர் பின்தங்கிய பிரிவில் இருந்து வந்ததால் பரோடாவின் மன்னர் மூன்றாம் சாயாஜிராவ் கெய்க்வாட் இவரது தந்தையை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தார்.
இந்த நேரத்தில் கி.பி.1930ல் சுதந்திர போராட்டம் வேகமெடுத்தது. காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்து வைக்க மே 1, 1930ல் தேஷ் சேவிகா சங்கத்தின் (ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராட பெண்களால் அமைக்கப்பட்ட குழு) குழுவை வழிநடத்தி பம்பாயில் வெளிநாட்டு துணி மற்றும் மதுபான கடைகளை முற்றுகையிட்டு போராட்டங்கள் நடத்தினார். பம்பாயின் காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக அறிவிக்கப்பட்டார். இதனால் கைது செய்யப்பட்டு மூன்று மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் காந்தி - இர்வின் ஒப்பந்தத்தின் விளைவாக சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். கி.பி.1932ல் ஹரிஹன சேவக் சங்கத்தின் துணை தலைவராக நியமிக்கப்பட்டார். கி.பி.1936-37ல் நடந்த மாகாண தேர்தலில் பம்பாய் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சிலில் வெற்றி பெற்று கல்வி மற்றும் சுகாதார துறைகளின் நாடாளுமன்ற செயலாளராக நியமிக்கப்பட்டார். இதன் மூலம் தொழில், வணிக மற்றும் தொழில்நுட்ப பள்ளிகளை அமைத்து கல்வியின் தரத்தை மேம்படுத்தினார். கி.பி.1946ல் அகில இந்திய மகளிர் மாநாட்டின் தலைவராக பணியாற்ற சமயத்தில் ஹைதராபாத்தில் நடந்த மாநாட்டில் பெண் உரிமைகள் மற்றும் கடமைகளுக்கான சாசனத்தை முன்மொழிந்தார். ஆகஸ்ட் 14,1947ல் இந்தியா சுதந்திரம் அடையும் தருணத்தில் நேரு மற்றும் இராஜேந்திர பிரசாத் அருகில் இருந்த ஹன்ஸா மேத்தா இந்திய சுதந்திர அமர்வில் ராஜேந்திர பிரசாத்திற்கு தேசிய கொடியை வழங்கி தனது உரையில் "நாங்கள் காவி நிறத்தை அணிந்துள்ளோம். போராடினோம் கஷ்டப்பட்டோம் தியாகம் செய்தோம் நம் நாட்டின் சுதந்திரத்திற்காக.. இன்று அதை அடைந்துள்ளோம். நமது சுதந்திரத்தின் அடையாளத்தை முன்வைத்து மீண்டும் ஒருமுறை தேசத்திற்கு எங்கள் சேவைகளை வழங்குகிறோம்" என்று இந்திய பெண்களின் சார்பாக உரையாற்றினார். இந்திய அரசலமைப்பு சட்ட வரைவு குழுவில் பணியாற்றிய 389பேரில் மொத்தம் இருந்த 15 பெண்களில் இவரும் ஒருவர்.
கி.பி.1947ல் ஹன்சா மேத்தா ஜக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையத்தின் இந்திய பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். மேலும் பம்பாயிலிருந்து அரசியலமைப்பு சபைக்கு நியமிக்கப்பட்டு சடட்மன்ற கவுன்சில் உறுப்பினராக இருந்தார். கி.பி.1948ல் பாராளுமன்றத்தில் இந்து சட்ட மசோதாவை விவாதித்த போது தந்தையின் சொத்துகளில் மகளுக்கும் சம பங்கு வேண்டும் என்றும் விவாகரத்தான பெண்களின் உரிமையையும் குறிப்பிட்டு வாதிட்டார். கி.பி.1949ல் பரோடா பல்கலைகழகத்தின் முதல் பெண் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். பல்கலைகழகத்தில் புதுப்புது பாடத்திட்டங்களை உருவாக்கி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி தேர்வு முறைகளை ஆய்வுக்கு அனுப்பி வைத்தார். கி.பி.1959ல் இவரது சேவைகளுக்காக இவருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. அடுத்த ஆண்டில் இவரது கணவர் குஜராத்தின் முதலமைச்சராக ஆனார். பின்னர் கி.பி.1964ல் லண்டன் இந்திய உயர் ஆணையராக நியமிக்கப்பட இவரும் இங்கிலாந்து சென்றார். பின்னர் ஜவஹர்லால் நேரு விருப்பத்தின் பேரில் இந்தியா திரும்பினார். இவர் சமூக சேவை அரசியல் பெண்ணுரிமை மட்டுமல்லாது 15 புத்தகங்களையும் எழுதியுள்ளார். ஆங்கில நூல்களையும் குஜராத்தியில் மொழிபெயர்த்துள்ளார். பெண்கள் கல்வி அறிவு பெற்றே ஆகவேண்டும். கல்வியறிவே அவர்களின் உரிமைகளை பாதுகாப்பை பெற்று தரும் என்று கடைசி வரை முழங்கிய இவர் கி.பி.1995 ஏப்ரல் 4ல் மறைந்தார்.

Comments
Post a Comment