6) ராணி துர்காவதி
இந்திய சரித்திரம் கண்ட வீரப்பெண்மணிகளுள் ஒருவர். அன்னியர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து போராடி மோசமாக காயம்பட்டாலும் மற்றவர்களின் கையால் மரணமடைவதை விட தன் கையால் மரணமுற்ற வீராங்கனை. இன்றைய மத்திய பிரதேசமான கோண்டுவானா ராஜ்ஜியத்தின் ராணி இவர். சந்தல் ராஜ்புத்ர வம்சத்து மகோப நாட்டு அரசரான சாலிபாஹனுக்கு மகளாக கி.பி.1524 அக்டோபர் 5ல் பிறந்தார். இவர் கி.பி.1542ல் காலச்சூரிகளான கர்ஹா வம்சத்து அரசரான சங்க்ராம் ஷா என்பவரது வளர்ப்பு மகனான தால்பத் ஷா என்பவரை மணந்தார். இந்த திருமணத்தால் சந்தல இராஜபுத்ரர்கள் மற்றும் காலச்சூரிகள் இடையேயான நட்பு பலப்பட்டது. தால்பத் ஷா தனது இளைய வயதில் கி.பி.1550ல் திருமணம் முடிந்த 8 ஆண்டுகளில் மரணமடைந்தார். அந்த நேரத்தில் இவர்களது மகனான வீர் நாராயண் குழந்தை பருவத்தில் இருந்ததால் அவரின் சார்பாக ராணி துர்காவதியே அரசு ஏறினார். திவான் பியோதார் அதர் சிம்ஹா மற்றும் முதலமைச்சர் மான் தாக்கூர் வழிகாட்டுதலின்படி ராணி துர்காவதி அரசை நல்லமுறையில் நடத்தி வந்தார். துர்காவதி தனது தலைநகரை சிங்கோர்கர்க் கோட்டையில் இருந்து விந்திய சத்பூரா மலைத்தொடர் பாதுகாப்பு அரணாக உள்ள செளரகர்க் பகுதிக்கு மாற்றினார். சரித்திரத்தில் பாஸ் பகதூர்-ரூப்மதி புகழ் பாஸ் பகதூர் ஷா கி.பி.1556ல் இராணி துர்காவதி மீது படையெடுத்தும் அவரது படையெடுப்பு ராணி துர்காவதியால் முறியடிக்கப்பட்டது.
கி.பி.1562ல் மாளவம் பகுதியை ஆண்ட பாஸ் பகதூரின் படைகள் அக்பரின் படைகளால் தோற்கடிக்கப்பட்டது. இந்த போரில் பாஸ் பகதூர் தலைமறைவாகவே ரூப்மதி தற்கொலை செய்து கொண்டார். அதன் பிறகு மாளவம் மொகலாய பேரரசின் எல்லையாகவே ராணி துர்காவதியின் இராஜ்ஜியம் மொகலாய பேரரசை ஒட்டியபடி இருந்ததால் எந்நேரமும் மொகலாயர்கள் ராணியின் ஆட்சியை பறிக்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள் என்பதை உணர்ந்தே இருந்தார். இந்த நேரத்தில் மொகலாய தளபதி க்வாஜா அப்துல் மஜீத் அஸப் கான் என்பவருடன் பிரச்சினைகள் தோன்ற அவர் அக்பரின் அனுமதியை பெற்று இவரது இராஜ்ஜியத்தின் மீது படையெடுத்தார். அஸப் கானின் மொகலாய படையெடுப்பை கண்ட இவரது திவான் மொகலாய படைகளின் வலிமையை பற்றி கூறினார். அதற்கு இவர் அன்னியரின் கைத்தடியாக வாழ்வதை விட போரிட்டு மாள்வதே மேல் என்று கூறி எதிர் தாக்குதலுக்கு தயாரானார். இந்த போர் கலைகளில் பயிற்சி பெற்ற நவீன ஆயுதங்களுடன் வந்த படைகளுக்கும் பராம்பரிய போர் முறைகளில் பயிற்சி பெற்ற வில்,அம்பு,வாள் முதலியவறறை வைத்து மட்டும் போரிடும் படைகளுக்கும் நடந்த யுத்தமாக இருந்ததால் சேதாரம் தனக்கு அதிகமாகும் என்பதை உணர்ந்தே எதிர் தாக்குதலுக்கு தயாரானார். இவர் கெளவுர் மற்றும் நர்மதா முகத்துவார பகுதிக்கு சென்று மலையிலிருந்து எதிர் தாக்குதல் செய்ய முடிவெடுத்தார். போரில் இவரது பைஜூதாரான அர்ஜூன் தாஸ் காயம்பட்டு இறக்க படை பொறுப்பை தான் ஏற்று போரிட ஆரம்பித்தார். மொகலாயர்கள் நாராய் பள்ளதாக்குக்கு வரவும் தாக்குதல் தீவிரமடைந்தது. ராணியின் படைகளுக்கு சேதம் அதிகமானது. ராணி தாக்குதலை இரவிலும் தொடர்ந்து நடத்தலாம் என்றாலும் அவரின் தளபதிகள் அதை மறுத்து பேசவே வலுக்கட்டாயமாக இரவு தாக்குதலை தொடர்ந்தார். மறுநாள் காலையில் மொகலாயர்களின் தளபதி துப்பாக்கி தாக்குதலுக்கு உத்தரவிட ராணி மற்றும் அவரது மகனான வீர் நாராயண் ஆகியோர் யானை மீது இருந்து போரிட்டு மொகலாயர்களை மூன்று முறை பின் வாங்க செய்தாலும் வெற்றி ராணியின் படைகளுக்கு நிரந்தரமாக கிடைக்கவில்லை. அவரது மகனான வீர் நாராயண் போரில் காயம்பட்டு முதலுதவிக்காக வெளியேறினார். ராணி துர்காவதி மீண்டும் வலிவுடன் போரை நடத்த அவரும் மோசமாக காயம்பட்டார். காதிற்கு அருகில் ஒரு அம்பு பாய்ந்தது. கழுத்தில் ஒரு அம்பு பாய்ந்ததால் மயக்கமுற்றார். ஆனாலும் மயக்கம் தெளிந்தவுடன் பலத்த தோல்வியை தழுவும் நிலையில் இருப்பதை உணர்ந்தார். அவரது பாதுகாவலர் அவரை காயம் காரணமாக போர்களத்திலிருந்து வெளியேற சொன்னார். மொகலாயர்கள் அவரை சுற்றி வளைத்தனர். பலத்த காயப்பட்ட தன்னால் இனி போரிட முடியாது மட்டுமில்லாமல் தனது ஆயுதமும் கையை விட்டு போனதால் மொகலாயர்களிடம் சிக்கி மானமிழப்பதை விட உயிரை மாய்த்து கொள்வதே சிறந்தது என்று தன் யானை பாகனின் அங்குஸத்தை எடுத்து தன்னை தானே குத்திக்கொண்டு மாய்த்து போனார். அவர் இறந்த தேதி ஜூன் 24, 1564. சிலர் இவருடன் இவரது மகனான வீர் நாராயணனும் போர்களத்தில் மாண்டு போனார் என்று குறிப்பிட்டாலும் அது உண்மையில்லை. இவரது காலத்திற்கு பின்னர் இவரது மகன் வீர் நாராயணன் ஆட்சி புரிந்ததிலிருந்து அதை அறியலாம்.
மத்திய பிரதேச அரசு கி.பி.1983ல் ஜபல்பூர் பல்கலைக்கழகத்திற்கு ராணி துர்காவதி விஸ்வவித்யாலயா என்று பெயர் சூட்டியது. மத்திய அரசு கி.பி.1988ல் இவரது நினைவு நாளன்று இவரின் தபால் தலை வெளியிட்டு சிறப்பித்தது. ஜபல்பூர் - ஜம்முதாவி எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை ராணி துர்காவதி எக்ஸ்பிரஸ் என்ற பெயரிட்டு இவரின் தியாகத்தை பெருமைப்படுத்தியது. மேலும் கி.பி.2018ல் இந்திய கடலோர காவற்படையின் கப்பல்களுள் ஒன்றிற்கு ஐசிஜிஎஸ் ராணி துர்காவதி என்று பெயர் சூட்டப்பட்டது.

Comments
Post a Comment