60) ஏ.வி. குட்டிமாலு அம்மா
ஏ.வி.குட்டிமாலு அம்மா (கி.பி.1905-1985) :
இந்திய சரித்திரம் கண்ட சிறப்பான பெண்மணிகளுள் இவரும் ஒருவர். சமூக சேவகி சுதந்திர போராட்ட தியாகி என்று பல அவதாரங்கள் எடுத்த பெண்மணி இவர்.
அனக்கார வடக்காத்து குட்டிமாலு அம்மா என்ற இவர் கி.பி.1905 ஏப்ரல் 23ல் பாலக்காட்டிலுள்ள அனக்கார கிராமத்தில் வடக்காத்து குடும்பத்தை சேர்ந்த பெரும்பிலாவில் கோவிந்த மேனன் மற்றும் மாதவியம்மா தம்பதியருக்கு மகளாக பிறந்தார். இவர் கோழிபுரத்து மாதவ மேனன் என்பவரை மணந்தார். இவரது கணவர் பின்னாட்களில் சென்னை மாகாணத்தின் மலபார் பகுதிக்கு உட்பட்ட மந்திரியாக இருந்தார்.
இவர் திருமணம் முடிந்த காலகட்டத்தில் கி.பி.1926ல் காந்தியடிகள் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலையை உயர்த்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது அவரின் சேவையின் உந்துதலால் இவரும் சமூக சேவைகளில் ஈடுபட ஆரம்பித்தார். நாட்டுப்பற்று அதிகமாக போராட்டங்களில் கலந்து கொள்ள ஆரம்பித்தார். கி.பி.1930ல் காலிகட்டின் மகிளா காங்கிரஸின் முக்கியமான உறுப்பினராக ஆனார். அந்த நேரத்தில் தேசத்தின் முக்கிய தலைவர்களான வல்லபாய் படேல் மற்றும் மதன் மோகன் மாளவியாவை கைது செய்ததால் இவர் தலைமையில் கி.பி.1930 ஆகஸ்ட் 15 தேச தியாகிகளின் தினமாக அறிவிக்கப்பட்டு மலபார் முழுவதும் பிரச்சாரம் செய்து குடும்ப பெண்களையும் போராட்ட களத்தில் கலந்து கொள்ள வைத்தார். கி.பி.1931ல் ஏப்ரல் மாதத்தில் நடுத்தர குடும்பத்து பெண்களுடன் இணைந்து அன்னிய துணிகளை விற்பனை செய்வதை எதிர்த்து மறியல் போராட்டம் நடத்தினார். கதர் துணிகளை விற்பனை செய்ய வலியுறுத்தினார். பின்னர் கி.பி.1932ல் நடந்த ஒத்துழையாமை இயக்க போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட சமயத்தில் இவர் 2 மாத கைக்குழந்தையுடன் சிறையில் அடைக்கப்பட்டார். குழந்தை பிறந்த இரண்டு மாதங்களில் வெளியே வந்து போராட்டம் நடத்தி தடியடி வாங்கி சிறை செல்வது எவ்வளவு கடினம். அதையும் மன உறுதியுடன் தாங்கி 2 மாத பால்குடி குழந்தையுடன் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் இரண்டு மாத கைக்குழந்தையுடன் சிறைக்கு சென்று இரண்டு வருட சிறை தண்டனை பெற்றது மக்களின் உணர்வுகளுக்கு உத்வேகம் அளித்தது. பின்னர் இவர் மெட்ராஸ் சட்டமன்றத்திற்கு கி.பி.1936ல் பரிந்துரைக்கப்பட்டு பணியாற்றினார். கி.பி.1940ல் காந்திஜி அறிவித்த தனிநபர் சத்தியாகிரகத்திற்கு மலபார் முழுவதும் அலைந்து அதற்கான ஏற்பாடுகளை செய்த இவர் கைது செய்யப்பட்டு ஒரு வருடம் சிறை தண்டனை பெற்றார். பின்னர் இவர் கி.பி.1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டு காலம் சிறை தண்டனை பெற்றார். அந்த நேரத்தில் மலபார் பகுதியின் காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைகளை செய்ல்படுத்துவதில் முனைப்புடன் இருந்தார். சிறையில் இருந்து வெளிவந்ததும் கி.பி.1944ல் "டெல்லி சலோ" இயக்கத்தில் இணைந்து போராட்டங்கள் செய்து மீண்டும் கைது செய்யப்பட்டார்.பின்னர் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுவிலும் இருந்தார். காலிகட் முனிசிபல் தலைவராகவும் இருந்துள்ளார்.இவர் இந்தி பிரச்சார சபாவின் தலைவராகவும் இருந்துள்ளார். கி.பி.1946ல் மீண்டும் சென்னை சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மலபார் பகுதியில் பல ஆதரவற்றோர் இல்லங்களை நடத்தி ஆதரவற்றோர்களின் துயர் துடைத்தார். நாடு விடுதலை அடைந்த பிறகும் தனது சேவைகளை இவர் தொடர்ந்து செய்து வந்தார். "அரசியல்வாதி மட்டும் தனது சேவையில் இருந்து வாழ்நாள் முழுவதும் ஒய்வு பெறமுடியாது" என்று கூறிய இவர் முதுமையிலும் மக்களுக்கு சேவைகள் செய்தார். இவருடைய நாட்டுக்கான மற்றும் மாநிலத்திறாகான சேவைகளை பாராட்டி கோவிந்தபிள்ளை - வேலுதம்பி தளவாய் விருது வழங்கப்பட்டது. மக்கள் இவரை அம்மா என்ற பெயரிலையே அழைத்தனர். இந்த ஒய்வறியா உத்தம உள்ளம் கி.பி.1985ல் தனது 80வது வயதில் ஏப்ரல் 14ம் தேதி மறைந்தார்.


Comments
Post a Comment