61) அபாடி பானோ பேகம்
அபாடி பானோ பேகம் (பி அம்மான்) கி.பி.1850-1924 :
இவர் இந்திய சுதந்திர போராட்ட களத்தில் பங்கு பெற்றவர். கிலாபத் இயக்கத்தின் போதும் ஒத்துழையாமை இயக்கத்தின் போதும் ஆதரவு திரட்டுவதற்காக இந்தியா முழுவதும் பயணம் செய்தவர். தனது வயோதிக காலத்தில் அதுவும் 65 வயதிற்கு மேல் இந்த இயக்கங்களில் பங்கு கொண்டு சுதந்திர போராட்ட களங்களில் முண்ணனி வகித்தவர்.
அபாடி பானோ பேகம் கி.பி.1850ல் உத்திரப்பிரதேசத்தில் பிறந்தவர். ராம்பூர் மாநிலத்தில் பணியாற்றிய அப்துல் அலிகான் என்பவரை மணந்தார். இவருக்கு ஒரு மகள் மற்றும் 5 மகன்கள். இவரது இளம் வயதிலையே இவரது கணவர் மறைந்ததால் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு இவருக்கு வந்தது. தான் படிக்கவில்லை என்பதால் தனது குழந்தைகளும் அவ்வாறு இருக்கக்கூடாது என்று தனது நகைகளை விற்று குழந்தைகளை கல்வி கற்க பரேலி நகரிலுள்ள ஆங்கில பள்ளிக்கு படிக்க அனுப்பினார்.
படித்து முடித்த இவரது மகன்களான முகமது அலி ஜெளஹர் மற்றும் மெளலானா ஷெளகத் அலி (அலி சகோதரர்கள்) கிலாபத் இயக்கம் மற்றும் இந்திய சுதந்திர போராட்ட இயக்கத்தின் முக்கியமான நபர்களாக ஆனார்கள். இவர்கள் ஒத்துழையாமை இயக்கத்தின் போதும் முக்கிய பங்கு வகித்தனர். இதனால் அபாடி பானோ பேகமும் கிலாபத் கமிட்டியில் இணைந்து பணியாற்றினார். இதனால் சிறையில் அடைக்கப்பட்ட அன்னிபெசண்ட் அம்மையார் மற்றும் தனது மகன்களான அலி சகோதரர்களின் விடுதலைக்கான போராட்டத்தில் இணைந்து போராடினார். மகாத்மா காந்தியும் பெண்களால் மட்டுமே சுதந்திர இயக்கத்திற்கு ஆதரவை பெண்கள் மத்தியில் திரட்ட முடியும் என்று உணர்ந்து ஆதரவு அளித்தார். இவர் பேகம் ஹஸ்ரத் மோகனி, சரளா தேவி செளதுராணி, பசந்தி தேவி மற்றும் சரோஜினி நாயுடு ஆகியோருடன் இணைந்து போராடினார். இறக்கும்வரை சுதந்திர இயக்கத்தில் தீவிரமாக இருந்த இவர் கி.பி.1924 நவம்பர் 13ல் மறைந்தார். கி.பி.1990ல் பாகிஸ்தான் தபால்துறை "சுதந்திரத்தின் முன்னோடிகள்" என்ற பெயரில் இவருக்கு தபால்தலை வெளியிட்டது.


Comments
Post a Comment