62) கா ஃபான் நோங்லைட்
கா ஃபான் நோங்லைட் (கி.பி.1799-1850) :
இவர் இன்றைய மேகாலயாவிலிருந்து சுதந்திர போராட்ட வீராங்கனையாக வந்தவர். மேகாலயாவின் முதல் பெண் விடுதலை போராட்ட வீரர் இவரே. துணிச்சலும் புத்திசாலித்தனமும் நிறைந்த பெண்ணாக போர்களத்தில் நடமாடியவர் இவர்.
இவர் கி.பி.1799ல் பிறந்த இவர் ஹிமா நோங்க்லாவின் கீழ் வரும் ரைம்லை கிராமத்தை சேர்ந்தவர். இவர் காசி ஹில்ஸ் பழங்குடி இனத்தை சேர்ந்தவர். இவர் காசி மலை பகுதியை சேர்ந்த அதன் நாயகனாக கருதப்படும் "யூ டிரோட் சிங் சையீம்" என்ற சுதந்திர போராளிக்கு உதவிகள் புரிந்தார். யூ டிரோட் சிங் பிரிட்டிஷ் ஆக்ரமிப்புக்கு எதிராக காசி பிராந்தியத்தின் சுதந்திரத்திற்காக தனது போர் தந்திரங்கள் மற்றும் வீரத்தின் காரணமாக புகழ்பெற்றவர். தங்களுக்கு எதிரான யூ டிரோட் சிங்கை பிடிக்க பிரிட்டிஷ் படையினர் வந்தனர். அவர்கள் மைலாங் கிராமத்தை விட்டு நோங்க்லாவை நோக்கி வந்த செய்தியை டிரோட் சிங்கின் வீரர்கள் அறிந்தனர். வழியில் எப்படியும் பகல் வெப்பத்தின் காரணமாக வழியில் 10 கி.மீ தொலைவில் உள்ள ஃபான் நோங்க்லைட் நீர்வீழ்ச்சியில் ஒய்வெடுப்பார்கள் என்று நம்பினர். அந்த நேரத்தில் தாக்கலாம் என்று முடிவெடுத்தனர். இந்த நேரத்தில் கா ஃபான் நோங்க்லைட் பிரிட்டிஷ் வீரர்களை நிழலில் காத்திருக்க சொல்லி நீர்வீழ்ச்சியில் ஓய்வெடுக்க சொன்னார். அவர்களுக்கு குளிர் பானங்கள் மற்றும் நீர் கொடுத்து தந்திரமாக அவர்களது ஆயுதங்களை எடுத்து சென்று நீர்வீழ்ச்சியின் பாறைக்கு அடியில் வீசினார். பின்னர் யூ டிரோட் சிங்கின் வீரர்கள் எளிதில் ஆயுதமில்லாமல் நிராயுதபாணியாக இருந்த பிரிட்டிஷ் வீரர்களை தாக்கி சிறைபிடித்தனர். இவரின் புத்திசாலித்தனமான விவேகமான சிந்தனையே பிரிட்டிஷ் வீரர்கள் தோல்வியை தழுவ காரணமாயிற்று. இவரும் வாளெடுத்து 32 வீரர்களின் மரணத்திற்கு காரணமாக இருந்ததாகவும் கூறுகிறார்கள். பின்னர் இவர் கி.பி.1850 டிசம்பர் 6ல் நோங்கர்மாய் கிராமத்தில் நீடித்த தொற்று நோயினால் மறைந்தார்.
புதுடில்லியில் நடைபெற்ற கலாச்சார அமைச்சகம் இவரை "Unsung Hero" என்று அங்கீகரித்துள்ளது. இவரை பற்றி சமீபத்தில் "கா ஃபான் நோங்க்லைட் - இந்தியாவின் பெண் சுதந்திர போராட்ட வீராங்கனை" என்ற பெயரில் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இன்றும் கா ஃபான் நோங்க்லைட்டின் சந்ததியினர் அவரது சமையல் பாத்திரங்களையும் அவர் வசித்த வீட்டையும் பாதுகாத்து வருகின்றனர். இன்றும் அந்த ஆயுதங்கள் அந்த நீர்வீழ்ச்சியின் பாறை துளைக்குள் கிடக்கிறது. மேலும் அந்த நீர்வீழ்ச்சிக்கு "பான் நோங்க்லைட் நீர்வீழ்ச்சி" என்றும் அவரின் நினைவாக பெயரிடப்பட்டுள்ளது.


Comments
Post a Comment