65) குர்மா தேவி

குர்மா தேவி :


சரித்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ராணிகளில் ஒருவர். இவர் துணிச்சலான ராணியாக கோரி முகமதுவை கி.பி.1178ல் தோற்கடித்து விரட்டிய நைய்கி தேவி (என்ற) நாயகி தேவியின் மகள். இவரும் கோரியின் தளபதியான இருந்து டெல்லி சுல்தானாகி அடிமை வம்சத்து ஆட்சியை முதன்முதலில் இந்தியாவில் முஸ்ஸீம்களின் ஆட்சியை ஆரம்பித்து வைத்த குத்புதீன் ஐ-பெக்கை தன்னந்தனியே தனி போரில் வென்று அவரை காயப்படுத்தியவர்.

இவர் குஜராத்தின் சாளுக்கிய சோலாங்கி வம்சத்தை சேர்ந்தவர். அஜயபாலா - நைய்கி தேவியின் மூத்த மகளாக பிறந்தவர். இவருக்கும் சித்தோர்கார்க் மன்னரான மேவாரின் ராணா ராவல் சமந்த் சிங்குக்கும் திருமணம் நடந்தது. இவர் சமந்த் சிங்கின் இரண்டாவது மனைவி. இந்த நேரத்தில் குர்மா தேவியின் தந்தை மறைவுக்கு பின்னர் தாயார் சகோதரனின் சார்பாக நாட்டை ஆண்டு வந்தார். கோரி முகம்மது படைகளுடன் வர அபு மலையடிவாரத்தில் கோரி முகமதுவை வெற்றி கண்டு விரட்டியடித்தார். பின்னர் இரண்டாம் தரெய்ன் போரில் இவரது கணவர் மற்றும் மூன்றாவது மனைவியின் மூலம் பிறந்த மகனான கல்யாண் ராய் ஆகியோர் போரில் கொல்லப்பட்ட பிறகு தன் மகன் கர்ண சிங் 12 வயது மைனராக இருந்ததால் அவர் சார்பாக நாட்டை ஆண்டு வந்தார். தன் கணவரின் மரணத்திற்கு பழிவாங்க அண்டை ராஜபுத்திர அரசுகளுடன் கூட்டணி அமைத்து கொண்டு அடுத்த ஆண்டு கி.பி.1193ல் டெல்லியை நோக்கி சென்றார். பழைய ஆம்பர் கோட்டை (ஜெய்ப்பூரிலிருந்து 12 கி.மீ தூரத்தில் உள்ளது) அருகில் குத்புதீன் ஐ-பெக் படைகளை எதிர்கொண்டார். குத்புதீன் படைகளுக்கு நடுவே தன்னந்தனியே சென்று குத்புதீன் ஐ-பெக்கை தனி போருக்கு அழைத்தார். குர்மா தேவியின் அழைப்பை ஏற்று நடந்த தனி போரில் குத்புதீன் ஐ-பெக் இவரின் வாளினால் படுகாயமுற்றார். குத்புதீன் ஐ-பெக் மரணமடைந்ததாக எண்ணி அவரது படைகள் அவரை தூக்கி சென்றது. முடிவில் பலத்த காயங்களுடன் சிகிச்சையின் உதவியினால் அவர் பிழைத்து கொண்டார்.

பின்னர் தன் மகனுக்கு பட்டம் கட்டினார். மெல்ல கோரி முகமதுவின் மறைவுக்கு பின்னர் குத்புதீன் ஐ-பெக் சித்தூர்கார்க் மீது படையெடுத்து கர்ண சிங்கை வெற்றி கொண்டு அவரையும் அவர் குதிரையான சுப்ரக்கையும் கைப்பற்றி லாகூர் அழைத்து சென்றார். லாகூரில் கர்ண சிங் தப்பிக்க முனைந்து பிடிபட்டார். அவரின் தலையை வெட்டி போலோ விளையாட்டு விளையாட ஆணையிட்டார். அவரின் தலையை வெட்டுவதற்கு பார்வையிட கர்ண சிங் குதிரையான சுப்ரக் மீது குத்புதீன் ஐ-பெக் சவாரி செய்து வந்தார். தன் முதலாளியை சங்கிலி போட்டு கட்டியிருந்ததை பார்த்த சுப்ரக் கண்ணீர் வடித்தது. தலையை வெட்டுவதற்கு சங்கிலியை கழற்றும் சமயத்தில் குத்புதீன் ஐ-பெக் ஒரு துள்ளலுடன் தரையில் தள்ளி தனது குளம்புகளால் 12-15 முறைகள் மிதித்து கொன்றது. அந்த இடத்திலையே குத்புதீன் ஐ-பெக் மாண்டு போனார். இந்த நேரத்தில் கர்ண சிங் சுப்ரக் மீது ஏறி தப்பித்து சித்தூர் வந்து சேர்ந்தார். சித்தூர் வந்து சேர்ந்தவுடன் குதிரை சுப்ரக் உயிர்விட்டது. இந்த நிகழ்வுகள் பிருத்விராஜ் ரஸோ நூலில் விளக்கப்படடுள்ளது.


ஆனால் இந்த ராவல் சமந்த் சிங் கி.பி.1179ல் செளகான் வம்சத்தின் கிட்டு சோனகராவுடன் நடந்த போரில் கொல்லப்பட்டார். அவருக்கு பின்னர் அவரது தம்பி ராவல் குமார் சிங் பட்டத்திற்கு வந்தவர் அவரும் கி.பி.1191ல் மறைந்தார். அவருக்கு பின்னர் ராவல் மதன் சிங் (கி.பி.1191-1211) வரை ஆண்ட சமயத்தில் இரண்டாம் தரெய்ன்  போரில் தோற்று கி.பி.1192 முதல் டெல்லியின் கட்டுப்பாட்டில் சித்தூர் வந்தது. பின்னர் கி.பி.1207ல் சித்தூர் சாளுக்கிய சோலாங்கிகளின் கட்டுப்பாட்டில் வந்தது. இப்படியிருக்க  குர்மா தேவியின் மகனான கர்ண சிங் சித்தூர் மன்னராக அதுவும் கி.பி.1210ல் குத்புதீன் ஐ-பெக் மரணத்தின் போது எப்படி அரசராக இருந்திருக்க முடியும்? ஒருவேளை கர்ண சிங்கின் இன்னொரு பெயராக கூட இருக்கலாம் என்று வைத்துக்கொண்டாலும் அந்த நேரத்தில் சித்தூர் சோலாங்கிகளின் கட்டுப்பாட்டில் இருந்ததையும் கவனத்தில் கொள்ள வேண்டும். வருடங்கள் குழப்பமா இல்லை நிகழ்வுகளே தவறா என்றும் தெரியவில்லை. ஏனெனில் கி.பி.1178ல் நைய்கி தேவி கோரியை வெற்றி கொள்ளும்போது அவரின் மூத்த மகனான இரண்டாம் மூல ராஜனுக்கு 13 வயது தான் ஆனது. அப்படியிருக்கும் போது கி.பி.1170ல் அவருக்கு 5 வயதிருக்கும் போது அவரது சகோதரியான குர்மா தேவிக்கு திருமணம் நடந்தபோது அவருக்கு என்ன வயது இருக்கும்? அவரது கணவர் கி.பி.1179ல் அதுவும் திருமணம் முடிந்த 9 ஆண்டுகளில் அவர் மரணமடைந்து விட்டார். அப்படியானால் குர்மா தேவி என்ற பெயர் யாருடையது? உயர்த்தி கட்டிவிடப்பட்ட கதையா?

Comments

Popular posts from this blog

145) குந்தள குமாரி சபத்

146) அம்மு சுவாமிநாதன்

137) காளி பாய்