66) மினல் தேவி (எ) மாயநல்லா
மினல் தேவி (என்ற) மாயநல்லா :
இவரும் குஜராத் சாளுக்கியர்களின் வழியில் வந்தவர் தான். வீரமும் மட்டுமல்ல கருணையும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கும் நல்ல உள்ளமும் கொண்ட ராணிகளுள் ஒருவர். தலைசிறந்த நிர்வாகியாகவும் திகழ்ந்த ராணி இவர்.
இவர் கி.பி.11ம் நூற்றாண்டில் குஜராத்தில் வாழ்ந்தவர். கர்நாடகாவின் கடம்ப இனத்தை சேர்ந்த மன்னரான ஜெயகேஷின் மகள் இவர். இவர் அனஹில்லபதனவாடா (இன்றைய பதான்-குஜராத்) மன்னரான குஜராத் சாளுக்கிய சோலங்கி வம்சத்தின் அரசரான முதலாம் கர்ண தேவனை மணந்தார். இவரின் கணவரான முதலாம் கர்ண தேவன் இளமையிலையே மறைந்ததால் அந்த நேரத்தில் இவரது மகனான சித்தராஜ் ஜெய்சிங் சிறுவனாக இருந்தார். இதனால் இவரது கணவரின் தம்பியான தேவபிரசாதா அடுத்து அரியணை ஏற முயற்சிக்க மினல் தேவி அமைச்சரான சாந்து என்பவரின் உதவியால் தன் மகனான சித்தராஜ் ஜெய்சிங்கை மன்னராக்கி அவரது பாதுகாவலராக நாட்டை ஆண்டார்.
இவர் பல நினைவு சின்னங்கள், ஏரிகள் கட்டினார். சோம்நாத்திற்கு வருகை தரும் யாத்திரீகர்களின் வரியையும் குறைத்தார். இவரது காலத்தில் தான் விராம்கம் அருகே கட்டப்பட்ட மினலாசர் ஏரி மற்றும் அகமதாபாத்திலுள்ள தவலக்கா ஆகியவை. மால்வா ஏரி கட்ட முன்மொழியப்பட்ட இடத்தில் ஒரு சிறு தடை இருந்தது. அந்த இடத்திலுள்ள ஒரு பெண் தன் நிலத்தை தரமறுத்தார். ராணி மினல் தேவி அந்த இடத்தினால் தான் ஏரியின் வடிவம் முற்று பெறும் என்று கூறியும் தர மறுத்து என்னை அந்த இடத்திலிருந்து வெளியேற்றினால் தற்கொலை செய்து கொள்ளவேன் என்று கூறினார். ராணி அவரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவரின் இடத்தை விட்டு ஏரியை கட்டினார். நீதி நிர்வாகம் மக்கள் நலன் ஆகியவற்றில் அனைத்து தரப்பினரும் விரும்பக்கூடிய வகையில் நல்லாட்சி நடத்தினார்.
இவரது சம கால இலக்கியங்களில் இவர் உயர்ந்த மரியாதையுடன் குறிப்பிடப்படுகிறார். முத்ரிடகுமுதசந்திர-பிரகரணா என்ற சமஸ்கிருத நாடகத்தில் திகாம்பரம் மற்றும் ஸ்வேதம்பரர்களுக்கு இடையேயான கற்றறிந்த சர்ச்சையை பற்றி கூறுகிறது. அதன்படி சத்வா (நல்ல குணம் கொண்ட) பெண்கள் முக்தி அடைய முடியும் என்று கூறி புராணங்களில் இருந்து சீதையையும் ராணியான மினல் தேவியையும் உதாரணங்களாக குறிப்பிட்டுள்ளனர். மாற்று மதத்தினர் கூட விரும்பும் வகையிலும் மக்களின் நலன் ஒன்றையே பிரதானமாக கருதி அனைவருக்கும் சிறந்த நிர்வாகத்தை வழங்கியமை இதன் மூலம் அறிய முடிகிறது. இவரை பற்றி கி.பி.1946ல் பாலிவுட் திரைப்படம் "மஹாராணி மினல் தேவி" என்ற பெயரில் எடுக்கப்பட்டது.

Comments
Post a Comment