68) மரியம் உல் ஜமானி (ஜோதா பாய்)
மரியம்-உல்-ஜமானி (ஜோதா பாய்) (கி.பி.1542-1623) :
மொகலாயப் பேரரசின் தலைசிறந்த மன்னரான அக்பரின் மூன்றாவது மனைவி. இராஜபுத்ர பெண்மணியான பிறந்த இவர் அரசியல் காரணமாக அக்பருக்கு மனைவியானார். இயற்பெயரான ஹர்கா பாய் அக்பரை திருமணம் செய்தவுடன் மரியம்-உல்-ஜமானி என்று அழைக்கப்பட்டார். ஜோதா பாய் என்ற தவறாக அழைக்கப்பட்டவர் இவரே. மான்வதி பாய், ஹரிகா பாய், ஹிரா குன்வாரி, ஹர்கா பாய் மற்றும் ஷாஹி பாய் என்று பல பெயர்களால் அழைக்கப்பட்டவரும் இவரே. 19ம் நூற்றாண்டில் பிற்பகுதியில் எழுதப்பட்ட ஆங்கிலேய ஏடுகளில் தான் இவர் ஜோதா பாய் என்ற பெயரால் குறிபிபிடப்பட்டார். ஆனால் ஜோத்பூரின் ராஜா உதய் சிங்கின் மகளான ஜஹாங்கீரின் மனைவியான ஜகத் கோசைன் தான் ஜோதா பாய் என்றும் கூறுபவர்கள் உண்டு.
இவர் கி.பி.1542ல் அம்பரின் (ஜோத்பூர்) அரசரான ராஜா பர்மாலால் மற்றும் ராணி சம்பவவதி ஆகியோருக்கு மகளாக பிறந்தார். இயற்கையிலையே ஓவியம் வரையும் திறமை பெற்றிருந்தார். அரசியல் காரணங்களுக்காக பேரரசர் அக்பருக்கு கி.பி.1562ல் திருமணம் செய்து வைக்கப்பட்டார். இவரது தந்தையான ராஜா பர்மாலாலுக்கும் அக்பரின் மைத்துனருக்கும் ஏற்பட்ட பிரச்சினைகளால் இவரின் சகோதரர் மற்றும் இவரது சகோதரிகளின் கணவர்களையும் பிணைய கைதிகளாக்கினார். பின்னர் இவரது தந்தை அக்பரிடம் முறையிட்டு அவர்களை விடுவித்தார். இதன் காரணமாக உடன்பாட்டின் படி இவர் அக்பருக்கு திருமணம் செய்து கொடுக்கப்பட்டார். இவர் இயற்கையிலையே மிகவும் புத்திசாலியானவராகவும் மதசார்பற்றவராகவும் இருந்தார். இவர் பல மொழிகள் அறிந்தவர். அக்பருடனான திருமணத்திற்கு பிறகு உருது மொழி கற்று அதிலும் வல்லவரானார். அக்பரின் அனைத்து மத சகிப்புதன்மைக்கு காரணகர்த்தாவாக இவரே இருந்தார். இவருக்கும் அக்பருக்கும் மூன்று மகன்கள் பிறந்தனர். கி.பி.1564ல் ஹூசைன் மிர்ஸா மற்றும் ஹாசன் மிர்ஸா என்ற இரட்டையர்கள் பிறந்து இறந்து விட்டனர். பின்னர் கி.பி.1569ல் சலீம் சிஷ்டி மகானின் ஆசிர்வாதத்தின் படி பதேஃபூர் சிக்ரியில் அடுத்த வாரிசான சலீம் (என்ற) ஜஹாங்கீர் என்ற மகனை பெற்றெடுத்தார். இதனால் இவருக்கு ஒரு லட்சம் பொற்காசுகள் பெறுமானமுள்ள நகைகளை அக்பர் அளித்தார்.
இவர் முஸ்லீம் மதத்திற்கு மாறவில்லை. இந்து மதத்திலையே தொடர்ந்து அரண்மனையில் பூஜைகள் செய்யவும் அக்பர் அனுமதித்தார். மேலும் அவரும் மற்ற இந்து மனைவிகளின் பூஜைகளிலும் கலந்து கொண்டார். அக்பர் இவரை மிகவும் விரும்பினார். அதனால் இவருக்காக தனி அரண்மனையை கட்டி கொடுத்தார். இவர் கிருஷ்ணரின் பக்தை என்பதால் இவரின் அரண்மனை முழுவதும் கிருஷ்ணரின் ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டது. இவரினால் இவரது குடும்பத்தினர்களுக்கு மன்சப்தார்களாக பதவி வகித்தனர். அக்பரின் 27 ராஜபுத்திர மன்சப்தார்களில் 13 பேர் அம்பர் குலத்தை சேர்ந்தவர்களாக இருந்தார்கள். இவரது தந்தை 5000 குதிரைபடைகளின் தளபதியாக நியமிக்கப்பட்டார். இவரது சகோதரர் தந்தைக்கு பின்னர் அந்த பதவியிலும் அக்பரின் விருப்பத்திற்குரிய சகாவாகவும் விளங்கினார். சகோதரரின் மகனான முதலாம் மான் சிங்கை தன் சொந்த மகன் போலவே கருதினார். பின்னர் கி.பி.1585ல் இவரது மகனான சலீம் (ஜஹாங்கீர்) இவரது சகோதரரின் மகளான மன் பாய்யை மணந்து கொண்டார். அக்பர் நாமாவில் அபுல் ஃபாஸல் இவரை அறிவார்ந்த சாதுர்யமானவர் என்று குறிப்பிட்டுள்ளார். இவரினாலையே அக்பரின் மத விஷயங்களில் நடுநிலை வகித்தார். இந்துக்களின் மீது விதிக்கப்பட்ட ஜிஸியா வரியை நீக்கினார். மற்ற மொகலாய அரசர்களின் ஆட்சியில் இருந்த மாற்று மதத்தினரின் மீது இருந்த கட்டுப்பாடுகள் அக்பரின் ஆட்சியில் இல்லை. இவரும் மற்ற இந்து அரசிகளின் வற்புறுத்தலினால் அக்பர் மாட்டிறைச்சி சாப்பிடுவதை நிறுத்தினார். மேலும் முகமதியர்கள் போல தாடி வைப்பதை தவிர்த்தார்.
அக்பர் இவரிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். இவருக்காக ஆக்ராவில் ஒரு தோட்டத்தை உருவாக்கி கொடுத்தார். மேலும் ஆக்ரா, பதேஃபூர் சிக்ரி, மாண்டு, லாகூர் மற்றும் அலகாபாத் நகரங்களில் இவருக்கு அரண்மனைகள் கட்டி கொடுத்தார். மாண்டுவில் உள்ள அரண்மனையில் தான் ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் இவரது மகனான ஜஹாங்கீர் தங்குவார். இங்கு அக்பர் அவருக்காக சிவலிங்கத்துடன் கூடிய சிவன் கோயிலை அமைத்து கொடுத்தார். ஜஹாங்கீர் லாகூரில் இவர் நினைவாக கட்டிய மசூதி தான் பேகம் ஷாஹி மசூதி. அக்பருக்கும் ஜஹாங்கீருக்கும் மோதல் வந்தபோது இவரும் இன்னொரு ராணியான பைராம் கானின் விதவை மனைவியாக இருந்து அக்பரை திருமணம் செய்து கொண்டவருமான சலீமா சுல்தான் பேகமும் அக்பரை சமாதானப்படுத்தி ஜஹாங்கிர் மீது நடவடிக்கையை எடுக்க விடாமல் செய்தனர்.
இவருக்கு மிகப்பெரிய கப்பல் மூலம் மெக்காவிற்கு யாத்திரீகர்களை அனுப்பி வைத்தலிலும் மசாலா பொருட்களின் விற்பனையிலும் சர்வதேச வாணிகத்திற்காக அக்பரால் அனுமதிக்கப்பட்ட ஒரே மனைவியானதால் நல்ல வருவாய் வந்தது. வாணிகத்திற்காக அவ்வப்போது நாடு முழுவதும் சென்று வந்தார். ஒருமுறை போர்த்துகீசியர்களால் இவரது கப்பலான ரஹிமி கைப்பற்றப்பட்ட போது தன் மகனான ஜஹாங்கீரை சூரத்திலுள்ள அவர்களின் வாணிக தலங்களையும் அவர்களின் தேவாலயங்களையும் தாக்க உத்தரவிட்டார். போர்த்துகீசியர்கள் இவருக்கு பணிந்து 3 லட்சம் நஷ்ட ஈடு வழங்கினர். கி.பி.1616லிருந்து உடல்நலம் குன்றியிருந்த இவர் கி.பி.1623 மே 19ம் தேதி தனது 81வது வயதில் மறைந்தார். இவர் ஆக்ராவுக்கு அருகிலுள்ள சிக்கந்தராவில் அக்பரின் கல்லறைக்கு அருகில் புதைக்கப்பட்டார். அக்பரின் அருகில் புதைக்கப்பட்ட ஒரே ராணி இவர் மட்டுமே. சரித்திரத்தில் மொகலாய ஆட்சியில் இராஜபுத்ரர்கள் மற்றும் மாற்று மதத்தினர்கள் பெருமளவு பயமில்லாமல் இயல்பு வாழ்க்கை வாழ மதசார்பற்ற அரசாக அக்பரின் அரசை நடத்த தூண்டியவர் இவரே. இவரது மீது கொண்ட அன்பினால் தான் அக்பர் எல்லா மதத்தினரையும் ஒரே போல பாவித்தார்.


Comments
Post a Comment