7) நாயகி தேவி (நைய்கி தேவி)
இந்திய சரித்திரம் கண்ட வீர பெண்மணிகளுள் இவரும் ஒருவர். கி.பி.12ம் நூற்றாண்டில் குஜராத்தை ஆண்ட ராணி இவர். இவர் கொங்கணி பிரதேசத்தை ஆண்ட கதம்பர்களின் அரசரான பெருமாதிதேவாவின் மகள் என்று சரித்திரத்தில் குறிப்பிட்டு இருந்தாலும் சரித்திர ஆராய்ச்சியாளரான அசோக் குமார் மஜூம்தார் இவர் சந்தல வம்சத்து அரசர் பரமார்டியின் மகளே என்று கூறுகிறார். இவர் இளமையிலையே வாள் பயிற்சி, குதிரையேற்றம், மற்றும் போர் கலைகளில் தேர்ச்சி பெற்றார். இந்த போர்கலைகளின் தேர்ச்சி பின்னாளில் இவரது இராஜ்ஜியத்தின் மீது படையெடுத்து வந்த முகமது கோரியுடனான போரில் வெளிப்பட்டது. இவருக்கு குஜராத் சாளுக்கிய சோலங்கி வம்சத்தின் அரசரான அஜய பாலாவுடன் திருமணம் நடந்தது. இவரது கணவரான அஜயபாலா பிரதிஹர அரசரான வாயுஜல தேவாவுடனான போரில் கி.பி.1175ல் மரணமடைந்தார். அந்த நேரத்தில் இவரது மூத்த மகனான இரண்டாம் மூலராஜனுக்கு 10 வயதே நிரம்பியிருந்ததால் அவரது தாயாரான நாயகி தேவியே ஆட்சி பொறுப்பை தன் மகன் சார்பாக கவனித்து வந்தார். தன் மகன் குழந்தை பருவத்தில் இருந்ததால் தானே ஆட்சியை நடத்தி வந்தார்.
இந்த நேரத்தில் தான் ஆப்கானிய கஜினி இராஜ்ஜியத்திலிருந்து அதன் இளவரசனாக இருந்த கோரி முகமது கி.பி.1178ல் இந்தியா மீது படையெடுத்து வந்தார். சாதாரணமாக சிறுவனின் ஆட்சியில் பெண் தானே ராஜ்ஜியத்தை ஆள்கிறார் எளிதாக கைப்பற்றி விடலாம் என்ற நினைப்பில் தார் பாலைவனத்தை கடந்து வந்த கோரி முகமதுவின் கனவில் மண்ணை அள்ளி போட்டார் நாயகி தேவி. தான் ஒரு பெண் அல்ல சூறாவளி என்று போர் களத்தில் நிரூபித்து காட்டினார். கோரி முகமதுவை விரட்டியடித்து வெற்றி கண்டார். இந்த போர் இன்றைய ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள அபு மலை அடிவ்ரத்திலுள்ள "கயந்த்ரா" என்ற கிராமத்தில் நடந்தது. இந்த போரில் பின்னாளில் டெல்லி சுல்தானான அடிமை வம்சத்து அரசரான குத்புதீன்-ஐபெக் இந்த போரில் தளபதியாக இருந்தார். அவருக்கு இந்த தோல்வியை ஜீரணிக்க முடியவில்லை. ஏனெனில் அந்த காலத்தில் அனஹில்லா (பதான்) செல்ல செழிப்புடன் குஜராத் சோலங்கிகளின் தலைநகராக விளங்கியது. அதை சூறையாடும் எண்ணத்துடன் வந்தவரின் எண்ணம் நாயகி தேவியால் வீணாயிற்று. பின்னர் நாயகி தேவியின் மகனான இரண்டாம் மூல ராஜன் உடல்நல குறைவினால் அந்த வருடமே மரணமடைய இன்னொரு மகனான இரண்டாம் பீம ராஜனை அடுத்த அரசராக அரியணை ஏற்றினார். அவருக்கும் உரிய வயது வரும்வரை இவரே ஆட்சியை நடத்தி வந்தார். பின்னர் முகமது கோரியின் படைகள் மெல்ல முல்தான், பஞ்சாப் மற்றும் நாட்டின் பல பகுதிகளை வெற்றி கொண்டது. மெல்ல கி.பி.1191ல் இன்றைய அரியானாவிலுள்ள தரெய்ன் நகரில் நடந்த போரில் கோரி முகமதுவை மூன்றாம் பிரித்விராஜ் செளகான் வென்று விரட்டியடிக்க அடுத்த ஆண்டே கி.பி.1192ல் மீண்டும் அதே தரெய்ன் யுத்தத்தில் பிரித்விராஜ் செளகானை வென்று டெல்லியின் ஆட்சியை பிடித்தார். மெல்ல கோரி முகமதுவின் இராஜ்யம் பெரிதாக வளர ஆரம்பித்தது. ஆனாலும் அவருக்கும் அவரின் தளபதியான குத்புதீன் ஐ-பெக்கிற்கும் நாயகி தேவியால் தோற்கடிக்கப்பட்டதை மறக்க முடியவில்லை. அதனால் மீண்டும் 1197ல் (21 ஆண்டுகளுக்கு பிறகு) மீண்டும் குத்புதீன் ஐ-பெக் தலைமையில் மீண்டும் சோலங்கி தலைநகரான இன்றைய பதான் நகரை கைப்பற்ற வந்தனர். எதிர்த்து நின்ற தளபதி ராய் கிரணை கொன்று பதான் நகருக்குள் புகுந்து சூறையாடினார்கள். இரண்டாம் பீம ராஜனின் குடும்பத்தினர்கள் ராணியின் கிணறு பகுதியில் இருந்த சுரங்கப்பாதை வழியாக தப்பித்து சென்றனர். பதான் நகரை கைப்பற்றிய குத்புதீன் ஐ-பெக் அதற்கு ஒரு முஸ்லீம் ஆளுநரை நியமித்து விட்டு அஜ்மீர் செல்ல திரும்பவும் இரண்டாம் பீம ராஜன் படைகளுடன் வந்து பதான் நகரை கைப்பற்றி கோரியின் படைகளை விரட்டியடித்தார். பின்னர் ராணி நாயகி தேவி கி.பி.1202ல் மறைந்தார். சரித்திரத்தில் மறக்கடிக்கப்பட்ட ராணிகளில் இவரும் ஒருவர். போர் நெறியற்ற அன்னிய படைகளை விரட்டியடித்து வெற்றி பெற்ற வீராங்கனைகளில் இவரும் ஒருவர். அந்த நேரத்தில் இந்தியாவின் வடமேற்கு பகுதிகள் வழியாக வந்த அன்னியர்கள் இவரது இராஜ்ஜியத்தை நெருங்க நினைக்காமல் சென்றனர். இவரை பற்றிய திரைப்படம் கி.பி.2022 (இந்த ஆண்டு) நாயகா தேவி என்ற பெயரில் குஜராத்தி மொழியில் வெளியிடப்பட்டுள்ளது.

Comments
Post a Comment