70) கனக்லதா பரூவா
கனக்லதா பரூவா (கி.பி.1924-1942) :
இந்திய வரலாற்றில் எத்தனையோ பெண்களும் தங்களது இன்னுயிரை இழந்து நாட்டின் விடுதலைக்காக போராடியுள்ளனர். அவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் இவர். இளம் வயதிலையே (13 வயது) தாய் தந்தையரை இழந்து கல்வி பயில்வதை நிறுத்தி தனது தம்பி தங்கைகளுக்காக உழைத்தவர். நாட்டின் மீது கொண்ட பற்றால் போராட்டத்தில் கலந்து கொண்டு தேசிய கொடியை விட மறுத்து அதனால் துப்பாக்கி சூட்டினால் தனது இன்னுயிரை 18 வயதிலையே இழந்தவர் இவர்.
இவர் இன்றைய அஸ்ஸாம் மாநிலத்தில் கோஹ்பூர் நகரிலுள்ள போரங்பாரி என்னும் கிராமத்தில் கி.பி.1924 டிசம்பர் 22ல் பிறந்தார். இவரது தாயாரான கர்னேஸ்வரி பரூவா இவரது 5 வயதில் இறந்ததால் இவரது தந்தையான கிருஷ்ணகாந்த் பரூவா மறுமணம் செய்தாலும் அவரும் இவரது 13வது வயதில் மறைந்தார். இவரின் மூதாதையர்கள் "டோஷகாரியா பரூவா" என்ற அஸ்ஸாமின் அஹோம் அரச பரம்பரையை சேர்ந்தவர்கள். தந்தை இறந்ததால் 3வது வகுப்போடு பள்ளி படிப்பை நிறுத்திய இவர் தம்பி தங்கைகளை பார்த்து கொள்ள துவங்கினார். இதனால் இவர் இளமையிலையே பொறுப்புணர்ச்சியும் தியாக குணமும் கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் காந்தியின் வெள்ளையனே வெளியேறு போராட்டம் நாடு முழுவதும் பரவியது. இதை பார்த்த இவர் நாட்டிற்கு தனது பங்கையும் ஆற்ற வேண்டிய செயலை நினைத்து "ஆசாத் ஹிந்த்" படையில் சேர விரும்ப 17 வயதே ஆன இவரை சேர்த்து கொள்ள மறுத்து விட்டனர். அதனால் இவர் வீட்டில் யாருக்கும் தெரியாமல் "மிருத்யு பஹினி" என்ற தற்கொலை படையில் இணைந்தார். காந்திஜியின் அறைகூவலை ஏற்று அஸ்ஸாமின் விடுதலை போராட்ட வீரர் "ஜ்யோதி பிரசாத் அகர்வால்" தலைமையில் தீவிரவாத படை தராங் மாவட்டத்திலுள்ள கிராம காவல் நிலைய்ததிலுள்ள ஆங்கிலேயரின் ஜாக் கொடியை இறக்கி இந்திய தேசிய கொடியை ஏற்ற உறுதி எடுத்தனர். கி.பி.1942 செப்டம்பர் 20ம் தேதி எல்லா நாளை போலவும் வீட்டு வேலைகளை முடித்து விட்டு வீட்டை விட்டு வெளியேறினார். இவர் இணைந்த படை அங்கிருந்த போலீஸ் ஸ்டேஷனில் தேசிய கொடியை ஏற்ற "செய் அல்லது செத்து மடி" என்ற நோக்கத்துடன் தயாராக இருந்தது. ஆயுதம் ஏதுமின்றி அஹிம்சை வழியில் ஊர்வலமாக தேசிய கொடியை ஏந்தி கனக்லதா பரூவா தலைமையில் சென்றவர்களை "ரெபாடி மஹன் சாம்" என்ற போலீஸ் அதிகாரி தடுத்து பெண்கள் படையை ஊர்வலத்தின் பின்புறம் செல்ல உத்தரவிட்டார். அதற்கு இவர் "பெண் வீராங்கனைகள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. தேவையானால் எங்கள் இன்னுயிரை இழக்கவும் சித்தமாக உள்ளோம்" என்று அறைகூவல் விடுத்து முன்னேறினார். காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்துவோம் என்று கூற "அஹிம்சை வழியில் காந்திஜியின் போராட்டத்தை தொடர்ந்து நடத்துகிறோம். எங்கள் நோக்கம் தேசிய கொடியை ஏற்றுவதே. பின்வாங்க மாட்டோம்" என்று அறைகூவல் விடுத்தார். தன் நெஞ்சை நோக்கி நீட்டிய துப்பாக்கியை புறம் தள்ளிய இவர் "எங்கள் உடலை குண்டுகள் துளைக்கலாம். எங்கள் உள்ளம் இரும்பாலானது. நாட்டு விடுதலைக்காக எங்கள் கடமையை முடிக்காமல் விட மாட்டோம்" என்று கூறி முன்னேறினார். துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. "கோகல் சிபாயி" என்ற கான்ஸ்டபிள் இவரது மார்பை நோக்கி சுட இவர் வீழ்ந்தாலும் தேசிய கொடியை அருகில் நின்றிருந்த "முகுந்தா காகடி" என்ற இளைஞனிடம் கொடுக்க அவரையும் போலீஸ் சுட்டு வீழ்த்தியது. இதனால் ஆவேசமான இளைஞர் படைகள் முன்னிலும் ஆக்ரோஷமாக காவல் நிலையத்தை நோக்கி போலீஸாரின் அடக்குமுறையையும் மீறி காவல் நிலையத்தின் மீது தேசிய கொடியை ஏற்றினர். தனது இன்னுயிரை இழந்தார். தனது குடும்பமாக இந்தியாவை நினைத்து விடுதலை களத்தில் தலைமை தாங்கி அஹிம்சா வழியில் முன்னேறி உயிரையும் கொடுத்து தியாகிகள் பட்டியலில் தனது 17வது வயதில் இடம் பிடித்தார் இந்த வீர மங்கை கனக்லதா பரூவா.
அஸ்ஸாமில் பர்காங் என்னுமிடத்தில் "கனக்லதா பரூவா மொமோரியல்" அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று அவளுடைய வீரமும் தியாகமும் நினைவு கூறப்பட்டு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அஸ்ஸாம் தேஜ்பூரில் "கனக்லதா உத்யான் என்ற ராக் கார்டனில் அவர் சுடப்பட்ட நிகழ்வு செதுக்கப்பட்டுள்ளது. இவரின் முழு உருவசிலை அஸ்ஸாம் கெளரிபூரில் 2011ல் திறக்கப்பட்டது. இந்திய கடலோர ரோந்துபடையில் கி.பி.1997ல் இவரது பெயரில் ஒரு கப்பலுக்கு பெயர் சூட்டப்பட்டது. இளம் வயதில் 18வயது கூட நிரம்பாத பெண்ணாகிய இவரின் வீரத்தையும் தியாகத்தையும் போற்ற "கனக்லதா மாடல் பள்ளி" என்று பள்ளிகூடம் ஒன்றிற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.

Comments
Post a Comment