72) இராணி கைடிலின்யூ
ராணி கைடிலின்யூ (கி.பி.1915-1993) :
இந்திய வரலாற்றில் ஆயுதம் தாங்கி போராடிய எத்தனையோ பெண்களில் ஒருவர். நாகலாந்து மாநிலத்தில் இருந்து ஆங்கிலேயர்களை விரட்ட தனது 13 வயதில் இயக்கத்தில் இணைந்து ஆயுதம் தாங்கி போராடி தனது 16வது வயதில் கைது செய்யப்பட்டு கி.பி.1932-1946 வரை 14 ஆண்டுகள் இளம் வயதில் ஆங்கிலேயர்களால் சிறையில் அடைக்கப்பட்டு இடைக்கால இந்திய அரசு அமைந்தவுடன் நேருவால் விடுவிக்கப்பட்டவர். இவரது நோக்கங்களால் ஈர்க்கப்பட்டு கி.பி.1937ல் நேரு இவருக்கு ராணி என்ற பட்டம் அளித்தார். அதிலிருந்து ராணி கைடிலின்யூ என்ற பெயரால் அழைக்கப்பட்டார்.
இவர் கி.பி.1915 ஜனவரி 26ல் மணிப்பூரின் தமெங்லாங் மாவட்டத்தில் உள்ள நுங்காவ் கிராமத்தில் லோதனங் - கரோட்லியன்லியு தம்பதியருக்கு மகளாக பிறந்தார். இவர் ரோங்மேய் நாகா பழங்குடியினத்தை சேர்ந்தவர். இவரது பெற்றோருக்கு மொத்தம் 7 மகள்கள் மற்றும் 1 மகன். இவர் 5வது குழந்தையாக பிறந்தார். இவரது பகுதியில் பள்ளிக்கூடம் இல்லாததால் முறையான கல்வி கற்கவில்லை. கி.பி.1927ல் தனது 12 வயதில் இவரது உறவினரான ஹைபூ ஜடோனாங்கின் உருவாக்கிய ஹெராகா இயக்கத்தில் இணைந்தார். இந்த இயக்கம் மணிப்பூர் மற்றும் நாகா பகுதிகளிலிருந்து ஆங்கிலேயரை விரட்டுவதற்காக உருவெடுத்தது. ஜடோனாங் ஆங்கிலேயர்களால் பிடிக்கப்பட்டு கி.பி.1931ல் தூக்கிலிடப்பட்டார். ஜடோனாங்கின் சித்தாந்தம் மற்றும் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட கைடிலின்யு ஆங்கிலேயர்களுக்கு எதிராக இயக்கத்தை தொடர்ந்து நடத்தினார். அவரது ஆன்மீக மற்றும் அரசியல் வாரிசாக கைடிலின்யு உருவெடுத்தார். இதனால் இவரையும் ஆங்கிலேயர்கள் கைது செய்ய விரும்பினர். ஆங்கில ஆட்சிக்கு எதிராக வரி கொடுக்க வேண்டாம் என்று மக்களை வலியுறுத்தினார். உள்ளூர் நாகா மக்கள் அவரது இயக்கத்திற்கு நன்கொடை கொடுத்தது மட்டுமன்றி அவரது இயக்கத்தில் இணையவும் செய்தனர். ஆங்கிலேயர்கள் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். அதனால் அஸ்ஸாம், நாகலாந்து மற்றும் மணிப்பூர் ஆகிய இடங்களை தாண்டி தலைமறைவானார். அவரை கண்டுபிடித்து சொல்லும் கிராமத்திற்கு 10 வருட வரிவிலக்கு என்றும் ஆங்கிலேயர்கள் அறிவித்தனர். பண உதவிகளும் வளர்க்கப்படும் என்றும் அறிவித்தது. அக்டோபர் 1932ல் அவர் புலோமி கிராமத்திற்கு வந்தார். அங்கு அவரது ஆதரவாளர்களுடன் சேர்ந்து மரக்கோட்டையை கட்ட ஆரம்பித்தார். இந்த நேரத்தில் அசாம் ரைபிள் குழு கேப்டன் மெக்டொனால்டு தலைமையில் இவரது கிராமத்தின் மீது தாக்குதல் நடத்தி இவரை கைது செய்தனர். இதனால் இவரது ஆதரவாளர்கள் கோபமுற்று நாகா மலையிலுள்ள ஆய்வு பங்களாலின் காவலாளியை இவரை காட்டி கொடுத்ததாக சந்தேகப்பட்டு கொலை செய்தனர். கைடிலின்யு இம்பாலுக்கு அழைத்து செல்லப்பட்டார். 10 மாத விசாரணைக்கு பின்னர் கொலை மற்றும் கொலைக்கு தூண்டிய குற்றத்திற்காக இவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. தனது 17வது வயதில் கி.பி.1932 முதல் கி.பி.1946 வரை 14 ஆண்டுகள் சிறையில் வாடினார். ஜவஹர்லால் நேரு அவரை கி.பி.1937ல் ஷில்லாங் சிறையில் சந்தித்து அவரின் விடுதலைக்கு உதவுவதாக உறுதி கூறினார். நேருவின் அறிக்கை இவரை மலைகளின் மகள் அல்லது ராணி என்ற பட்டத்தை அளித்தது. அது முதல் இவர் ராணி கைடிலின்யு என்ற பெயரில் அழைக்கப்பட்டார். ராணியின் விடுதலைக்கு ஏற்பாடு செய்யுமாறு பிரிட்டிஷ் எம்.பிக்கு கடிதம் எழுதினார். ஆனால் ராணி விடுவிக்கப்பட்டால் மீண்டும் பிரச்சினைகள் வரலாம் என்று வெளியுறவுத்துறை செயலாளர் நேருவின் கோரிக்கையை மறுத்து விட்டார். ஆனாலும் கி.பி.1946ல் நேரு தலைமையில் இடைக்கால அரசாங்கம் ஏற்பட்டவுடன் துரா சிறையில் இருந்த ராணி கைடிலின்யு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
சுதந்திரத்திற்கு பிறகும் தன் மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டார். கி.பி.1952ல் இவரது சொந்த கிராமமான லோங்காவோவிற்கு சென்றார். அடுத்த ஆண்டு நேரு இவரை சந்தித்து இவரது தியாகத்திற்கு நன்றி கூறினார். பின்னர் இவர் டெல்லி சென்று நேருவை சந்தித்து ஜெலியாங்ராங் மக்களின் நலன் மற்றும் மேம்பாடு குறித்து விவாதித்தார். பின்னர் இவர் "நாகா தேசிய கவுன்சில் (NNC)" கிளர்ச்சியாளர்களை எதிர்த்தார். தனி நாடு கேட்பதற்கு பதிலாக இந்திய யூனியனுக்குள் தனி பிரதேசம் வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார். நாகா கவுன்சில் பழங்குடியினரை இணைக்கும் முயற்சியில் இவரை ஹெராகா இயக்கத்தை தடையாக கருதினர். பாப்டிஸ்ட் தலைவர்கள் ஹெராகா மறுமலர்ச்சி இயக்கத்தை கிறிஸ்தவத்திற்கு எதிராக கருதினர். அவர்கள் இவரை தனது நிலைப்பாட்டை மாற்றாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டினர். இதனால் இவர் கி.பி.1960 முதல் தலைமறைவு வாழ்க்கை வாழ தொடங்கினார். பின்னர் கி.பி.1966ல் இந்திய அரசாங்கத்துடன் ஒப்பந்தத்தின் பேரில் தலைமறைவு வாழ்க்கையை விட்டு ஜனநாயக மற்றும் அஹிம்சை வழிகளில் தனது மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட ஆரம்பித்தார். பின்னர் அவர் கோஹிமாவுக்கு சென்று டெல்லிக்கு சென்று பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியை சந்தித்து தனி ஜெலியாங்ராங் பிரிவை உருவாக்க வலியுறுத்தினார். அவரை பின்பற்றுபவர்கள் சரணடைந்தனர். அவர்களில் பலர் நாகாலாந்து ஆயுதப்படை காவல்துறையில் வேலைக்கு சேர்க்கப்பட்டனர்.
இவருக்கு கி.பி.1972ல் "தாம்ரபத்ரா சுதந்திர போராளி "விருதும் கி.பி.1982ல் "பத்ம பூஷன்" விருதும் கி.பி.1983ல் "விவேகானந்தா சேவா விருதும்" வழங்கப்பட்டது. பின்னர் கி.பி.1991ல் பிறந்த இடமான லோங்காவோவுக்கு திரும்பினார். அங்கு கி.பி.1993ல் பிப்ரவரி 17ல் தனது 78வது வயதில் மறைந்தார். இவரது இறுதி நிகழ்வில் மணிப்பூர் நாகாலாந்து மாநில முதல்வர்கள் துணை முதல்வர்கள் மற்றும் தலைமை செயலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு அஞ்சலி தெரிவித்தனர். மாநில அரசு அன்றைய தினம் பொது விடுமுறை அறிவித்தது. இவரது மரணத்திற்கு பிறகு இவருக்கு "பிர்சா முண்டா" விருது வழங்கப்பட்டது. கி.பி.1996ல் இந்திய அரசு இவரது நினைவு தபால்தலை வெளியிட்டது. 2015ல் இவரது நினைவாக நினைவு நாணயம் வெளியிடப்பட்டது. ஆங்கிலேயர்களை எதிர்த்து ஆயுத புரட்சியையும் பிரிவினையை எதிர்த்து போர்குரலும் கொடுத்து நாகாலாந்து மற்றும் மணிப்பூர் மக்களின் நல்வாழ்விற்காக கடைசிவரை போராடிய வீர பெண்மணி இவர். தனது சுக துக்கங்களை மறந்து நாட்டு விடுதலைக்காக தனது 17வயதில் சிறை சென்று 14 ஆண்டுகள் இளமை பருவத்தை சிறைவாசத்தில் தொலைத்து பின்னரும் பிரிவினையை எதிர்த்து குரல் கொடுத்து அதை எதிர்த்து போராடிய வீரப்பெண்மணி இவர்.


Comments
Post a Comment