73) துர்காவதி தேவி (துர்கா பாபி)

துர்காவதி தேவி (துர்கா பாபி) (கி.பி.1907 - 1999) :


இந்திய சரித்திரம் கண்ட தியாக பெண்மணிகளுள் இவரும். லாகூரில் வெடிகுண்டுகள் தயாரித்து புரட்சிகர வழியில் சுதந்திரத்திற்காக பாடுபட்டு 3 ஆண்டுகள் சிறையில் இருந்தவர். பகத்சிங், சிவராம் இராஜகுரு  ஆகியோரை லாகூர் கொலைக்கு பின்னர் கி.பி.1928ல் அங்கிருந்து தப்பிக்க உதவியவர். அனைவராலும் "துர்கா பாபி - துர்கா அண்ணி" என்று அழைக்கப்பட்டவர்.

இவர் கி.பி.1907ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி அலகாபாத்தில் குஜராத்தி பிராமண குடும்பத்தில் பிறந்தார். தனது 11வது வயதில் நவ் ஜவான் பாரத் சபாவின் தீவிர உறுப்பினராக இருந்த பகவதி சரண் வோஹ்ராவை மணந்தார். கெதர் கட்சியின் உறுப்பினராக வெளிநாட்டில் வேலை பார்த்து இந்திய சுதந்திரத்திற்காக புரட்சிகர நடவடிக்கைகளுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட கர்தார் சிங் சரபாவின் 11வது ஆண்டு நினைவு தினத்தில் துர்கா பாபி கலந்து கொண்டவுடன் புரட்சிகர நடவடிக்கைகளில் பங்கு கொள்ள ஆரம்பித்தார். லாகூரில் லாலா லஜபதிராயின் மரணத்திற்கு காரணமான ஆங்கிலேய அதிகாரியான ஜான் பி.சாண்டர்ஸை லாகூரில் வைத்து பகத் சிங் மற்றும் சிவராம் ராஜகுரு இருவரும் கி.பி.1928 டிசம்பர் 17ம் தேதி சுட்டு கொன்றனர். பகத் சிங் தாடியுடன் டர்பன் அணிந்த படத்தை அடையாளமாக கொண்டு அவரை ஆங்கிலேயர்கள் லாகூர் முழுவதும் தேட ஆரம்பித்தனர். இந்த நேரத்தில் சுக்தேவ் தாப்பர் துர்கா பாபி மற்றும் அவரது கணவரது உதவியை நாடினார். பகத் சிங் மற்றும் சிவராம் ராஜகுருவை லாகூரிலிருந்து தப்பிக்க உதவுமாறு கேட்க பகத் சிங் தனது தாடியை மழித்து கொண்டு தலையை மொட்டையடித்து மேற்கத்திய உடையை அணிந்தார். பகத் சிங் துர்கா பாபியின் கணவர் மாதிரி நடித்து குழந்தை சசிந்திர வோஹ்ரா உடன் அழைத்து கொண்டு சிவராம் ராஜகுருவை அவர்களின் வேலையாள் மாதிரி காட்டிக்கொண்டு டிசம்பர் 20ம் தேதி கல்கத்தா ஹவுரா ரயிலை பிடித்து தப்பிக்க முடிவு செய்தனர். கான்பூருக்கு துர்கா பாபி மற்றும் பகத் சிங்கிற்கு முதல் வகுப்பு டிக்கெட்டும் சிவராம் ராஜகுருவுக்கு மூன்றாம் வகுப்பு டிக்கெட்டும் எடுத்து பாதுகாப்புக்காக துப்பாக்கியுடன் ரயிலில் ஏறினர். ஹவுரா ரயில் நிலையத்தில் சிஐடி ஆய்வு வழக்கமாக நடப்பதால் கான்பூரில் இறங்கி லக்னோவிற்கு ரயிலில் ஏறினர். ராஜகுரு லக்னோவில் இருந்து பெனாரஸுக்கு புறப்பட்டு சென்றார். துர்கா பாபி, அவர் குழந்தை , பகத் சிங்குடன் கல்கத்தாவில் பகத் சிங்கை பாதுகாப்பாக சேர்த்து விட்டு பகத் சிங்குடன் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டார். அங்கு காந்தி, நேரு மற்றும் சுபாஸ் ஆகிய தலைவர்களை சந்தித்தார். கல்கத்தாவில் பகத்சிங் பெங்காலி தோழர்களுடன் இணைந்து கட்சி அலுவலகத்தை திறந்தார். துர்கா பாபி அங்கு வெடிகுண்டு தயாரிக்கும் முறையை கற்றுக்கொண்டு தனது குழந்தை சசீந்திர வோஹ்ராவுடன் சில நாட்களில் லாகூர் திரும்பினார். 

பின்னர் கி.பி.1929ல் லாகூர் சட்டமன்றத்தில் நடந்த குண்டுவீச்சில் பகத் சிங் மற்றும் ஜதின் தாஸ் ஆகியோர் லாகூர் சிறையில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டனர். அவர்களை சிறையில் இருந்து வெளியே கொண்டு வருவதற்காக தனது நகைகளை 3000 ரூபாய்க்கு விற்று அவர்களின் விடுதலைக்கு செலவு செய்தார். காந்தியிடம் மன்றாடி கேட்டார். ஆனாலும் 63 நாட்கள் லாகூர் சிறையில் உண்ணாவிரத போராட்டம் இருந்து உயிர்விட்டார் ஜதின் தாஸ். அவரது இறுதி ஊர்வலத்தில் லாகூரிலிருந்து கல்கத்தா வரைக்கும் துர்கா பாபி தலைமை தாங்கினார். வழியெங்கும் பெருந்திரளான மக்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். பின்னர் துர்கா பாபி தனது கணவர் மற்றும் விமல் பிரசாத் ஜெயின் உடன் இணைந்து லக்னோவில் டெல்லி குதுப் சாலையில் "ஹிமாலயன் டாய்லெட்ஸ்" என்ற பெயரில் வெடிகுண்டு தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தினார். இவரது கணவரான பகவதி சரண் வோஹ்ரா கி.பி.1930 மே 28ல் லாகூரில் ராவி நதிக்கரையில் அவர் தயாரித்த வெடிகுண்டு சோதனை செய்யும் போது இறந்தார். வெடிகுண்டுகளை வெடித்து லாகூர் சிறையில் உள்ள பகத்சிங் மற்றும் ராஜகுரு , சுகதேவ் தாப்பர் ஆகியோரை மீட்க நினைத்து தயாரித்த வெடிகுண்டு வெடித்து இவரின் கணவர் இறந்து போனார். அதன் பிறகும் பகத் சிங் மற்றும் மற்றவர்களை விடுவிக்க அரசியல் போராட்டத்தை ஏற்று நடத்தினார். தொடர்ச்சியான போராட்டங்களால் வேண்டுகோள்களால் காந்தி அசைந்து கொடுத்து கவர்னர் ஜெனரலை சந்தித்து பகத் சிங் மற்றும் மற்றவர்களை விடுவிக்க கோரிக்கை விடுத்தார். ஆனாலும் மறுமுறை காந்தி கவர்னர் ஜெனரலுடன் நடக்கவிருந்த கூட்டத்திற்கு முன்பு காந்தியடிகள் மீண்டும் இந்த கோரிக்கையை வலியுறுத்துவார் என்று அதை முறியடிக்க நினைத்து கி.பி.1931ல் மார்ச் 23ல் பகத் சிங், ராஜகுரு, சுக்தேவ் ஆகியோரை ஆங்கிலேய அரசு முன்னறிவிப்பின்றி தூக்கிலிட்டது. இந்த நிகழ்வுகள் நடந்த 8 மாதத்திற்கு பிறகு புரட்சியாளர்களின் மரணத்திற்கு பழிவாங்கும் விதமாக துர்கா பாபி பஞ்சாப் முன்னாள் கவர்னரான ஹெய்லியை கொல்ல திட்டமிட்டு அவர் மீது வெடிகுண்டு வீசினார். குண்டு வீச்சில் ஹெய்லி படுகாயம் அடைந்தாலும் உயிர் தப்பினார். துர்கா பாபி அங்கிருந்து தப்பி சென்றார். ஆனாலும் மும்பையில் பிடிபட்டு மூன்றாண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. அதன் பின்னரும் சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் கி.பி.1935 முதல் இந்திய சுதந்திர போராட்ட களத்தில் தொடர்ந்து ஈடுபட்டார். பின்னர் இந்திய சுதந்திரத்திற்கு பின்னர் அவர் காஸியாபாத்தில் வசிக்க தொடங்கினார். பின்னர் அவர் லக்னோவில் பூரண கிலா பகுதியில் ஏழை குழந்தைகளுக்காக பள்ளிக்கூடம் தொடங்கி நடத்தினார். இந்த பள்ளிக்கு கி.பி.1956ல் ஜவஹர்லால் நேரு விஜயம் செய்தார். இப்போது இந்த பள்ளி "சிட்டி மாண்டிசேரி பள்ளி" என்று பெயரில் அழைக்கப்படுகிறது. கி.பி.1999ல் காஸியாபாத்தில் அக்டோபர் 19ல் இவர் தனது 92வது வயதில் மரணமடைந்தார்.

 ஆங்கிலேயர்களால் "இந்தியாவின் அக்னி" என்று பெயரால் அழைக்கப்பட்ட துர்கா தேவி வோஹ்ரா அச்சமற்ற தைரியமான புரட்சி பெண்ணாக இந்திய சுதந்திர போராட்ட களத்தில் வலம் வந்தார். கி.பி.2006ல் "ரங் தே பசந்தி" திரைபடத்தில் இவரை பற்றி குறிப்புடன் இவரது வேடத்தை ஏற்று சோஹா அலி கான் நடித்தார். புரட்சியாளர்கள் இவரை துர்கா பாபி என்ற பெயரிலையே அழைத்தனர். நாட்டு விடுதலைக்காக புரட்சிகர நடவடிக்கை மூலம் துணிச்சலான செயல்கள் மூலமும் இளம் வயதில் கணவரை இழந்தாலும் கணவரின் புரட்சிகர நடவடிக்கையை தொடர்ந்து செய்து ஆங்கிலேயருக்கு பயத்தை ஏற்ப்படுத்திய இவர் ஆங்கிலேயர்களால் குறிப்பிடப்பட்ட மாதிரி இந்தியாவின் அக்னி தான் என்பது உண்மையே.

Comments

Popular posts from this blog

135) கங்கா தேவி

137) காளி பாய்

முன்னுரை