74) தேவல் தேவி

 தேவல் தேவி :


இந்திய வரலாற்றில் அன்னியர்களின் படையெடுப்புகளினால் இந்திய பெண்கள் மிகவும் அவதிப்பட்டனர். அப்படிப்பட்ட பெண்களில் இவரும் ஒருவர். இவரை பற்றிய செய்திகள் நந்தகுமார் மேத்தா எழுதிய "கரண் கெலோ" என்ற குஜராத்தி வரலாற்று நாடகத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்த நாவலின் உண்மை தன்மை வெளிப்படையாக இல்லை. ஆனால் இப்படி ஒரு ராஜகுமாரி இருந்தது உண்மை. இவர் குஜராத்தின் வகேலா வம்சத்து கடைசி அரசனான கர்ண தேவாவின் மகள். (சோலங்கி வம்சத்து கர்ண தேவன் அல்ல இவர்).‌இவர் தேவல் தேவி அல்லது தேவலா தேவி என்ற பெயர்களில் குறிப்பிடப்படுகிறார்.

குஜராத்தின் வகேலா வம்சத்தின் கடைசி அரசனான இரண்டாம் கர்ண தேவன் தனது மந்திரியான மாதவா என்பவரின் மனைவியை அபகரிக்க ஆசைப்பட்டு அவரை அபு மலை பக்கம் வெளியே வேலைக்கு அனுப்பிவிட்டு அவரின் மனைவியான ரூப்மதியை அரண்மனைக்கு தூக்கி சென்றார்.‌தடுக்க முயன்ற அமைச்சரின் தம்பியை கொலை செய்தார். இதனால் அமைச்சரின் தம்பி மனைவி கணவரின் உடலுடன் உடன்கட்டை ஏறினார். அரண்மனைக்கு கொண்டு வரப்பட்டவுடன் ரூப்மதி அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டார். இதனால் அமைச்சர் மாதவா அபு மலை வழியாக தப்பி சென்று டெல்லி சென்று அலாவூதின் கில்ஜியை சந்தித்து தனக்கு நேர்ந்த அவமானத்திற்கு பழி வாங்குமாறும் அதற்கு பலனாக அரசின் கஜானா இருக்குமிடத்தை கூறுவதாகவும் கூற  கி.பி.1296ல் அலாவூதின் கில்ஜி படைகள் படையெடுத்து வந்து கர்ண தேவனை தோற்கடித்து விரட்ட அவர் தனது சிறு வயது மகளான தேவல் தேவியுடன் தேவகிரி யாதவர்களிடம் அடைக்கலம் புகுந்தார். கம்பத், சூரத், சோம்நாத், பதான் மற்றும் பல பகுதிகளை கில்ஜி படைகள் கைப்பற்றின. கர்ண தேவனின் மனைவியான கமலா தேவியையும் கைப்பற்றி டெல்லி கொண்டு செல்ல அவர் அலாவூதீன் கில்ஹியின் மூன்றாவது மனைவியானார். யாதவர்களின் அடைக்கலத்தில் வாழ்ந்து வந்த இரண்டாம் கர்ண தேவனின் மகளான தேவலா தேவி பெரியவளாக வளர்ந்தார். அவரை யாதவர்கள் அரசனான ராமசந்திர தேவாவின் மகனான சங்கர தேவாவுக்கு திருமணம் செய்ய நினைக்கும் தருணத்தில் கமலா தேவி தன் மகளை தன்னிடம் ஒப்படைக்குமாறு கூற அதற்கு சரியென்று கூறிவிட்டு யாதவர்களின் சங்கர தேவாவுக்கு மகளை மணம் முடிக்க நிச்சயித்தார். இந்த விவரம் கில்ஜிக்கு தெரியவர மீண்டும் போர் தொடுத்தார். இந்த நேரத்தில் யாதவர்களின் தேவகிரிக்கு மணமகளை அனுப்புமாறு யாதவர்கள் கூற அவ்வாறே அனுப்பிய தேவலா தேவியை கில்ஜியின் வீரர்கள் சிறைப்பிடித்து கமலா தேவி வசம் ஒப்படைக்கின்றனர். கி.பி.1308ல் 12 ஆண்டுகளுக்கு பிறகு தன் மகளை சந்திக்கிறார். அவரிடம் அலாவூதீன் கில்ஜியின் மகனான கிஸிர் கானை திருமணம் செய்ய சொல்ல தாயின் விருப்பத்தின் பேரில் கி.பி.1308ல் கிஸிர் கானின் மனைவியானார்.


கி.பி.1316ல் அலாவூதீன் கில்ஜியின் மறைவுக்கு பின்னர் இன்னொரு மகனான குத்புதீன் முபாரக் ஷா அடுத்த அரசன் ஆனார். அவர் இவரது கணவரான கிஸிர் கானை ஆட்சியை கவிழ்க்க முயன்று குற்றத்திற்காக தூக்கிலிட்டார். தேவலா தேவியை முபாரக் ஷா திருமணம் செய்து கொண்டார். முபாரக் ஷா பெண்களுடன் மட்டுமல்ல ஆண்களுடனும் முறையற்ற இன்பம் கொள்ளும் தன்மையுடையவர். அவரது காம நண்பரும் அமைச்சருமான குஸ்ரூ கான் முபாரக் ஷாவை கி.பி.1320ல் கொன்று ஆட்சியை கைப்பற்றினார். அடிப்படையில் ராஜபுத்ர வம்சத்தில் இளவரசனாக பிறந்து போரில் அடிமையாக பிடிக்கப்பட்டு அலாவூதின் கில்ஜியினால் முஸ்லீமாக மாற்றப்பட்டவர் தான் இந்த குஸ்ரூ கான். ஆட்சியை கைப்பற்றியதுடன் தேவலா தேவியையும் கைப்பற்றி மூன்றாவது முறையாக தேவலா தேவிக்கு திருமணம் நடந்தது. பின்னர் குஸ்ரூ கானின் ஆட்சியை அடுத்த 5 மாதங்களில் கியாஸ்ஸூதின் துக்ளக் வம்சத்தினர் கைப்பற்ற இதற்கு மேல் அவமானத்தை சந்திக்க முடியாது என்று இவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். முறையற்ற அடாத செயல் செய்த தகப்பனின் செயல்களின் விளைவுகளால் தாயும் மகளும் அவமானப்பட்டு மடிந்தனர். சரித்திரத்தில் கண்ணீரில் சிந்த வைக்கும் பக்கங்களில் இவரின் வரலாறும் ஒன்று.

Comments

Popular posts from this blog

145) குந்தள குமாரி சபத்

146) அம்மு சுவாமிநாதன்

137) காளி பாய்