75) குலாப் கவுர்
குலாப் கவுர் (கி.பி.1890-1931)
இந்திய வரலாற்றில் நாட்டுக்காக எத்தனையோ பெண்கள் உயிர் தியாகம் செய்துள்ளனர். இயற்கையிலையே பஞ்சாபிகள் வீர உணர்வு நிரம்பியவர்கள். அதில் ஆண்கள் பெண்கள் என்ற வேறுபாடு எல்லாம் கிடையாது. அப்படிப்பட்ட பஞ்சாபி குடும்பத்தில் பிறந்து நாட்டிற்காக கணவனை துறந்து நாட்டு விடுதலைக்காக போரிட துணிந்த வீர மங்கை தான் இந்த குலாப் கவுர். சரித்திரத்தின் மறைக்கப்பட்ட பக்கங்களுள் இவரும் ஒருவர்.
கி.பி.1890ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்திலுள்ள சங்ரூர் மாவட்டத்தில் பக்ஷிவாலா கிராமத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்தவர். பக்கத்து கிராமத்தை சேர்ந்த மான் சிங் என்பவரை மணந்தார். ஏழ்மை நிலையால் அமெரிக்கா சென்று பணம் சம்பாதிக்க முடிவு செய்து கணவரும் மனைவியும் பிலிப்பைன்ஸ் வழியாக செல்ல முடிவெடுத்தனர். மணிலாவில் தங்கி பணம் சம்பாதித்து அமெரிக்கா செல்ல முடிவு செய்த நிலையில் மணிலாவில் வெளிநாட்டில் இருந்து இந்திய விடுதலைக்கு போராடிய கெதர் கட்சியின் தலைவர்களுடன் நட்பு ஏற்பட்டது. அவர்களின் வீரகக்தையினால் ஈர்க்கப்பட்டு கெதர் கட்சியில் இணைந்து இந்திய விடுதலைக்கு போராட தம்பதியினர் முடிவெடுத்தனர். கெதர் மணிலா பிரிவின் தலைவர் ஹபீஜ் அப்துல்லாவினால் முக்கிய கட்சி பணிகளை கையாள குலாப் கவுர் நியமிக்கப்பட்டார். பத்திரிக்கையாளர் போர்வையில் கட்சியின் கட்சியின் அச்சகத்தை கவனிக்கும் பணியில் கட்சி உறுப்பினர்களுக்கு ஆயுதங்கள் எடுத்து சென்று வினியோகித்தார். மக்களை கட்சியில் சேர ஊக்குவித்தார். கெதர் கட்சி கணிசமாக வளர்ந்து உறுதியான புரட்சியாளர்களை இந்தியாவுக்கு அனுப்பி வலிமையான சுதந்திர இயக்கத்தை உருவாக்கி பாடுபட முடிவு செய்தது. குலாப் கவுர் மற்றும் அவரது கணவரும் அமெரிக்க கனவை விட்டுவிட்டு இந்தியா திரும்பி சுதந்திர இயக்கத்தில் இணைய முடிவு செய்தனர். பயணத்திற்கு முந்தைய நாள் அவரது கணவர் இந்தியா திரும்ப மறுத்து விட்டார். கணவரை சமாதானப்படுத்த முயற்சிகள் தோல்வியுற்றது. பதிபக்தியா? தேசபக்தியா? எது என்று முடிவெடுக்கும் சூழ்நிலையில் பதிபக்தியை விட தேசபக்தியே என்று முடிவெடுத்து கணவரை விட்டு நீங்கி மற்ற போராளிகளுடன் இணைந்து தேஷாமாரு கப்பலில் இந்தியாவுக்கு புறப்பட்டார்.
இந்தியாவுக்கான பயணத்தின் நடுவே கி.பி.1914ல் ஹாங்காங் வந்தது கப்பல். அங்கு குடியேறிவர்களிடையே தேசபக்தியை ஊக்குவிக்க கூட்டங்கள் நடந்தது. வெளிநாட்டில் வசிக்கும் ஒவ்வொரு இந்தியர்களும் நாட்டின் சுதந்திர போராட்டத்தில் இணையுமாறு வேண்டுகோள் விடுத்தனர். கூட்டத்தின் முடிவில் குலாப் கவுர் தேசபக்தி கவிதையான "கதர்-கி-கஞ்ச்" வரிகளை பாடினார். கூட்டத்தினரிடையே உற்சாகம் கூட தொடங்கியது. மக்கள் தஙக்ள் பெயர்களை தேச பக்தி இயகக்த்தில் இணைய பதிவிட்டனர். ஆனாலும் சிலர் அரைமனதாக இருப்பதை கண்டு மனம் வருந்தி குலாப் கவுர் தனது வளையல்களை கழற்றி "தாய்நாட்டிற்காக போராடும் அரிய வாய்ப்பிலிருந்து பின்வாங்குபவர்கள் இந்த வளையல்களை அணிந்து கொண்டு ஒதுக்குங்கள். பெண்களாகிய நாங்கள் அவர்களுக்கு பதிலாக போராடுவோம்" என்று அறைகூவல் விடுத்தார். முன்னிலும் வேகமாக மக்கள் ஆனந்த கூத்தாடி போராட்ட களத்தில் இணைந்தனர். பின்னர் இந்தியாவுக்கு கப்பல் பயணப்பட்டது. அவர்களது கப்பலான "தேஷ மாரு" இந்தியாவை அடைந்ததும் பல கெடாரைட்டுகள் காவல்துறை மற்றும் சிஐடிகளால் கைது செய்யப்பட்டனர். ஆனால் குலாப் கவுர் அவர்களிடம் இருந்து தப்பி பஞ்சாப்பை அடைந்தார். அங்கு ஹோஷியார்பூர், ஜலந்தர் மற்றும் கபுர்தலா மாவட்டங்களில் புரட்சிகர நடவடிக்கையை தொடர்ந்தார். ஆயுத புரட்சிக்காக சுதந்திர இயக்கங்களின் செய்திகளை வினியோகிப்பது மற்றும் அச்சகத்தின் பாதுகாப்பை கவனிப்பதுவும் அவரது வேலையாக இருந்தது. மேலும் கெதர் கட்சியின் உறுப்பினர்களுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை வினியோகித்தார். பலரையும் கெதர் கட்சியில் இணைய வழிவகுத்தார். இவரை பிரிட்டிஷ் அதிகாரிகள் தேச துரோக குற்றச்சாட்டின் கீழ் கைது செய்து லாகூர் உள்ள ஷாஹி கிலா சிறையில் இரண்டு ஆண்டுகள் அடைத்தனர். அவரை கடுமையாக சித்திரவதை செய்தும் கெதர் இயக்கத்தினரை காட்டி கொடுக்காமல் இரண்டு ஆண்டுகளிலையே சிறையில் தனது உயிரை கி.பி.1931ல் இழந்தார். கட்டிய கணவனை விட தாய்நாடே முக்கியம் நாட்டின் விடுதலையே உயிர் மூச்சு என்று முழங்கி அதற்காக புரட்சிகர இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு ஆங்கிலேயரிடம் பிடிபட்டு சிறையில் சித்திரவதைக்குள்ளாகி உயிர்விட்ட தியாக செம்மல் தான் குலாப் கவுர் என்ற பஞ்சாப் தந்த வீரப்பெண்மணி.

Comments
Post a Comment