77) தாராபாய் போன்ஸ்லே

தாராபாய் போன்ஸ்லே (கி.பி.1675 - 1761) :


இந்திய வரலாற்றில் இடம்பெற்ற ராணிகளுள் ஒருவர். மராத்திய போரரசை தோற்றுவித்த சிவாஜி மகாராஜ்ஜின் மகனான இராஜாராம்மின் இரண்டாவது மனைவி இவர். கணவருக்கு பின்னர் தனது சிறுவயது மகனுக்காக ஆட்சியேறி ஆட்சியை அபகரிக்க முயன்ற மொகலாயப் படைகளை போர்களத்தில் சந்தித்து எதிர்த்து போராடிய வீர மங்கை இவர். மராத்தியர்களின் கோலாப்பூர் மரபை தோற்றுவித்தவர் இவர்.

இவர் சிவாஜியின் படைத்தளபதியாக பணியாற்றிய ஹம்பிராவ் மோஹிதேவின் மகள். கி.பி.1675ல் ஏப்ரல் மாதத்தில் பிறந்தார். இவரது தந்தையின் சகோதரி தான் சிவாஜியின் மனைவிகளுள் ஒருவரான சோர்யா பாய். இவர் தனது அத்தையான சோர்யா பாயின் மகனான முதலாம் ராஜாராம்மை கி.பி.1682ல் தனது 8வது வயதில் மணந்தார். இவர் இராஜாராமிற்கு இரண்டாவது மனைவி. இதற்கிடையில் சிவாஜியின் மரணத்திற்கு பின்னர் சோர்யா பாய் தனது மகனான இராஜாராமை அடுத்த சத்ரபதியாக்க முயன்றதை சிவாஜியின் மூத்த மகன் முறியடித்து அடுத்து சத்ரபதி ஆனார். இந்த நேரத்தில் சாம்பாஜிக்கு சோர்யா பாய் விஷமிட்டு கொல்ல முயன்றது தோல்வியில் முடிய சாம்பாஜி சோர்யா பாய் மற்றும் அவர் ஆதரவாளர்கள் அனைவரையும் விஷமிட்டு கொன்றார். ஆனாலும் தன் தம்பி இராஜாராம் மற்றும் அவர் மனைவிகளுக்கு எந்த தீங்கும் இழைக்கவில்லை. பின்னர் கி.பி.1689ல் சாம்பாஜி மற்றும் அவர் ஆதரவாளர்கள் ஓளரங்கசீப்பால் கொடூரமாக கொல்லப்பட்ட பின்னர் இராஜாராம் அடுத்த சத்ரபதியாக கி.பி.1689-1700 வரை இருந்தார். அந்த நேரத்தில் முதல் மனைவியான ஜானகி பாய் மகாராணியாக இருந்தார். கணவர் இராஜாராம் மறைவுக்கு பின்னர் தனது மகனான சிறுவனான இரண்டாம் சிவாஜியை அடுத்த சத்ரபதியாக்கி அவரின் சார்பாக நாட்டை ஆண்டு வந்தார். இந்த நேரத்தில் ஓளரங்கசீப்பின் மொகலாயப் படைகள் இவரை வீழ்த்த முயன்று பலமுறை படையெடுத்து வந்தனர். இவர் தளபதியின் மகளாக இருந்த காரணத்தால் போர்திட்டங்கள் மற்றும் போரிடுவது கைவந்த கலையாயிற்று. அதனால் குதிரைபடைகளை இவரே தலைமையேற்று மொகலாய படைகளை விரட்டி அடித்தார். கி.பி.1705ல் மொகலாயர்கள் வசமிருந்த மால்வா (மத்திய பிரதேசத்தை) பிரதேசத்தை கொள்ளையடித்து பொருள் சேர்த்து கொண்டார். கி.பி.1706 ல் இவர் மொகலாய படைகளிடம் சிக்கி கொண்டாலும் 4வது நாள் சிறையிலிருந்து தப்பி வந்து மீண்டும் மராத்திய படைகளை மொகலாயர்களுக்கு எதிராக திருப்பினார். இந்த காலகட்டத்தில் ஓளரங்கசீப்பிற்கு இருந்த ஒரே எதிர்ப்பாக மராத்திய அரசியான தாராபாய் போன்ஸ்லே மட்டுமே. கி.பி.1707ல் ஒளரங்கசீப் மறையவே மராத்திய படைகள் கொஞ்சம் மூச்சு வாங்கியது. 

கி.பி.1709ல் மொகலாயர்களுக்கும் சிறையில் இருந்த சாம்பாஜியின் மகனான முதலாம் சாஹூவுக்கும் உடன்பாடு ஏற்பட்டது. அவர் மராத்திய வாரிசுரிமையை கோரினார். இந்த நேரத்தில் மராத்திய பேஷ்வாவான பாலாஜி விஸ்வநாத்தின் ஆதரவு முதலாம் சாஹூவுக்கு இருந்தது. அவரே பட்டத்திற்கு தகுதியானவர் என்ற முடிவுடன் தாராபாயை ஓரங்கட்ட அவர் கி.பி.1710ல் கோலாப்பூர் சென்று மராத்தியர்களின் கோலாப்பூர் அரச மரபை தோற்றுவித்தார். அவரது மகனான இரண்டாம் சிவாஜி கோலாப்பூரில் இருந்தும் சாம்பாஜியின் மகனான முதலாம் சாஹூ சதாராவில் இருந்தும் அரசாண்டனர். இதற்கிடையில் கி.பி.1704ல் இராஜாராமின் இன்னொரு மனைவியான ரஜேஸ்பாய் இவரை கோலாப்பூரில் தோற்கடித்து இவரை அரசை கைப்பற்றினார். அவர் தனது மகனான இரண்டாம் சாம்பாஜியை கோலாப்பூரின் அரசனாக்கினார். கி.பி.1714 முதல் கி.பி.1726 வரை தாராபாய் மற்றும் அவரின் மகனான இரண்டாம் சிவாஜியும் இரண்டாம் சாம்பாஜியால் சிறைவைக்கப்பட்டனர். கி.பி.1726ல் இரண்டாம் சிவாஜி சிறையிலையே மரணமடைந்தார். கி.பி‌. 1730ல் தாரா பாய் மற்றும் முதலாம் சாஹூ மகாராஜ் உடன் உடன்பாடு ஏற்பட்டதால் தாரா பாய் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு சதாராவில் வந்து தங்கினார். எந்த வித அரசியல் ஈடுபாடும் இல்லாமல் கி.பி.1730-1749 வரை அரசியலை விட்டு ஓதுங்கியிருந்தார். இந்த நேரத்தில் முதலாம் சாஹூ மகாராஜா வாரிசில்லாமல் மறையவே மீண்டும் அரசியல் வெளிச்சத்திற்கு தாராபாய் வந்தார்.

சாஹூ மகாராஜாவின் மரண படுக்கையில் இரண்டாம் சிவாஜியின் நேரடி வாரிசு என்று இரண்டாம் இராஜாராம் என்றும் அவரின் பாதுகாப்புக்காக இவ்வளவு நாள் மறைந்து வாழ்ந்தார் என்றும் கூறியதால் இரண்டாம் இராஜாராமை அடுத்த சத்ரபதியாக வாரிசாக சாஹூ மகாராஜா ஏற்றுக்கொண்டார். பின்னர் மராத்திய பேஷ்வா முதலாம் பாலாஜி பாஜி ராவுடன் தாராபாய்க்கு மன வருத்தங்கள் ஏற்பட்டது. கி.பி.1750ல் மொகலாய அரசின் பாதுகாப்பு மராத்தியர்களின் கீழ் வந்தது. ஆப்கானியர்களின் தாக்குதலால் அவர்களிடம் இருந்து தப்பிக்க மராத்தியர்களின் பாதுகாப்பை கோரினர். அதனால் பாலாஜி பாஜி ராவ் மொகலாய அரசவைக்கு சென்றிருந்த சமயத்தில் இரண்டாம் இராஜாராமிடம் அவரை பதவியில் இருந்து நீக்க சொன்னார். சத்ரபதி இரண்டாம் இராஜாராம் அதை மறுக்கவே தாரா பாய் அவரை சிறை வைத்தார். தவறான ஒருவரை வாரிசு என்று சொல்லி விட்டேன். அதனால் எனது தவறை நானே சரி செய்கிறேன் என்று கூறி சத்ரபதியை கைது செய்து சதாராவில் சிறையில் அடைந்தார். பாலாஜி பாஜி ராவ் சத்ரபதியை சிறை மீட்க முயன்றும் முடியவில்லை. இந்த நேரத்தில் பேஷ்வா பூனாவுக்கு சென்று தங்கினார். தாராபாய் சில மராத்தியர்களின் ஆதரவுடன் பேஷ்வா படைகளை தாக்கி வெற்றியடைந்தார். ஆனாலும் பேஷ்வா படைகள் மீண்டும் தாக்கியதில் தாரா பாயின் ஆதரவாளர்கள் படை பலத்த சேதமுற்றது. முடிவில் கி.பி.1752ல் பேஷ்வா மற்றும் தாரா பாய் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனாலும் இரண்டாம் சிவாஜியை சத்ரபதியாக தாராபாய் ஏற்க மறுக்கவே அதிகாரங்கள் இல்லாமல் சத்ரபதி பதவியில் தொடர்ந்தார். மராத்தி சத்ரபதியின் அதிகாரங்கள் பேஷ்வா வசம் வந்தது. இதன் பின்னர் சதாராவில் வாழ்ந்த தாரா பாய் கி.பி.1761ல் தனது 86வது வயதில் காலமானார். உண்மையில் முதலாம் இராஜாராம் மறைவின் போது மராத்திய அரசில் ஏற்பட்ட வெற்றிடத்தை கனகச்சிதமாக தனது ஆளுமையால் நிரப்பி அன்றைய காலகட்டத்தில் மிகப்பெரிய மொகலாய சாம்ராஜ்யத்தின் அரசரான ஓளரங்கசீப்பின் படைகளை தனது போர் தந்திரங்களால் விரட்டியடித்து மராத்தியர்களின் சுதந்திரத்தை உயிர்ப்புடன் வைத்திருந்த பெருமை இவரையே சேரும். இவர் மட்டும் அந்த காலகட்டத்தில் இல்லாமல் இருந்தால் மொகலாய சாம்ராஜ்யம் மராத்திய சாம்ராஜ்யத்தை விழங்கியிருக்கும். பின்னர் சாஹூ மகாராஜா பேஷ்வாக்களின் காலத்தில் மொகலாயர்கள் மராத்தியர்களின் பாதுகாப்பை கோரினர். மராத்தியர்களுக்குள் ஏற்பட்ட சிறு சிறு பூசல்களால் அடிக்கடி மோதி கொண்டு தங்களின் பலத்தை இழந்தனர். இதனாலையே மூன்றாம் மராத்திய - ஆப்கானிய போரில் மராத்திய படைகள் தோல்வியுற ஒரு காரணமாயிற்று. சிவாஜியின் தளபதியின் மகளாக பிறந்து சிவாஜிக்கு மருமகளாக ஆனவர் அவரை போல்  மொகலாயர்களுக்கு எதிராக படை நடத்தி மராத்தியர்களின் மாண்பை காத்தார். இந்திய வரலாற்றில் போர்க்களம் சென்ற பெண்களுள் தனிச்சிறப்பு வாய்ந்தவர் இவர்.

Comments

Popular posts from this blog

145) குந்தள குமாரி சபத்

146) அம்மு சுவாமிநாதன்

137) காளி பாய்