8) ஜான்சி ராணி லெட்சுமி பாய்
ஜான்ஸி ராணி லட்சுமிபாய் : (கி.பி.1828-1858)
சரித்திரம் கண்ட வீராங்கனைகளில் ஒருவர். அன்னிய ஆங்கிலேயர்களை தாய் மண்ணில் இருந்து விரட்ட ஆயுதமேந்தி போரிட்டு போர்களத்தில் மாண்ட மாவீராங்கனைகளில் ஒருவர் தான் ஜான்ஸியின் ராணியான மணிகர்ணிகா தாம்பே (என்ற) லெட்சுமி பாய். இவர் இன்றைய வாரணாசியில் மராத்திய கார்டே பிராமண குடும்பத்தில் கி.பி.1828 நவம்பர் 19ல் பிறந்தார். தந்தை மோரோபந்த் தாம்பே தாய் பாகீரதி பாய் ஆகியோருக்கு மகளாக பிறந்த இவருக்கு இட்ட பெயர் மணிகர்ணிகா தாம்பே. மனு என்றும் செல்லமாக அழைக்கப்பட்டார். இவர்களது பெற்றோர் மகாராஷ்டிராவில் இருந்து வந்தவர்கள். இவரது அன்னை இவருக்கு நான்கு வயதாக இருக்கும்போது இறந்துவிட்டார். இவரது தந்தை பேஷ்வா இரண்டாம் பாஜிராவ் கீழ் கல்யாண்பிரந்த் யுத்தத்தில் தளபதியாகப் பணியாற்றினார். இவர் வீட்டிலேயே கல்வி பயின்றார். இளமையிலேயே துப்பாக்கி சுடுதல், குதிரையேற்றம் ஆகிய கலைகளை இளமைக்கால நண்பர்களான நானா சாகிப் மற்றும் தாந்தியா தோபே ஆகியோருடன் கற்றுத் தேர்ந்தார். பின்னாட்களில் இந்த நட்புறவினால் தான் மூவரும் சிப்பாய் புரட்சியின் போது இணைந்து ஆங்கிலேயரை விரட்ட முனைந்தனர். காலை உணவுக்கு முன்னர் பளு தூக்குதல், மல்யுத்தம் மற்றும் குதிரை பந்தயம் ஆகிய பயிற்சிகளை ராணி செய்வது வழக்கம். ஆண்களை போல உடற்பயிற்சிகளை செய்து உடலை வலுவாக போர்களில் ஈடுபடுவதற்கு தகுந்தாற் போல் மனதையும் ஒருங்கே பயிற்சி பெற்று தேர்ந்தார். பின்னாட்களில் ஆங்கிலேயரை விரட்ட ஜான்ஸியில் பெண்கள் படையை தயார்படுத்த இதுவே உதவிற்று.
கி.பி.1842ல் 14 வயதான மணிகர்ணிகா தாம்பே ஜான்ஸியின் நெவால்கர் பரம்பரையை சேர்ந்த மன்னரான கங்காதர் ராவ் (தம்பதிகள் இருவருக்கும் 31 வயது வித்தியாசம்) என்பவரை மணந்தார். திருமணத்திற்கு பின்னர் கணவரின் குல தெய்வமான மஹாலெக்ஷ்மியின் பெயர்களில் ஒன்றான லெக்ஷ்மி பாய் என்ற பெயர் அவருக்கு சூட்டப்பட்டது. தம்பதிகள் இருவருக்கும் கி.பி.1851ல் ஒரு மகன் (தாமோதர் ராவ்) பிறந்தார். மகன் பிறந்த சந்தோஷம் 4 மாதம் கூட நீடிக்காமல் அந்த குழந்தை இறந்து போனது. பின்னர் கணவரது உறவின் வழி சகோதரரான வாசுதேவ் நெவால்கர் என்பவரின் மகனான ஆனந்த் ராவ் என்ற சிறுவனை தத்தெடுத்து அவருக்கு "தாமோதர் ராவ்" என்ற பெயரையே சூட்டினார். இந்த தத்தெடுத்தல் நிகழ்வு இவர் கணவர் கங்காதர் இறப்பதற்கு முன்பு நடந்தது. பிரிட்டிஷ் ரெஸிடென்ட் ஜான்ஸி ராணி தத்தெடுத்த நிகழ்வை பற்றி கிழக்கிந்திய கம்பெனிக்கு கடிதம் எழுத கம்பெனியினர் டல்ஹெளஸி பிரபுவின் "அவகாசியிலி கொள்கை (வாரிசில்லா கொள்கை)" யின் படி ஜான்ஸியை கி.பி.1854 மார்ச் 10ல் தங்களது அரசுடன் இணைத்து கொண்டனர். ராணி லட்சுமி பாய்க்கு வருடம் 60000 ரூபாய் பென்ஷன் பணத்தை பெற்றுக்கொண்டு மாளிகையையும் கோட்டையையும் காலி செய்ய சொன்னார்கள். அங்கிருந்து வெளியேறி ஜான்ஸியிலுள்ள "ராணி மஹால்" என்ற மாளிகையில் தங்கினார். இந்த மாளிகை தற்போது மியூஸியமாக மாற்றப்பட்டுள்ளது. ஆனால் அவர் தனது வளர்ப்பு மகனுக்காக ஜான்ஸி நாட்டை விட்டு வெளியேற மாட்டேன் என்று கூறி நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தினார். தன்னார்வ இராணுவத்தை உருவாக்கி பெண்களுக்கும் இராணுவ பயிற்சி கொடுத்தார். அவரது படையில் குடா பக்ஷ், லாலா பாவ்பக்ஷி, மோதி பாய், தோஸ்த் கான், குலாம் கவுஸ் கான், திவான் ரகுநாத் சிங் மற்றும் திவான் ஜவஹர் சிங் ஆகிய வீரர்களும் இணைந்தனர்.
இந்த நேரத்தில் கிபி 1857 மே 10ல் மீரட்டில் சிப்பாய் புரட்சி ஏற்பட்டது. பசுவின் கொழுப்பும் பன்றியின் கொழுப்பும் அடங்கிய துப்பாக்கி குண்டுகளை உபயோகப்படுத்த மறுத்த இந்து மற்றும் முஸ்லீம் வீரர்கள் பிரிட்டிஷ் ஆபிஷர்களை தாக்கி கொலை செய்தனர். இதனால் ஆங்கிலேயர்கள் புரட்சியை அடக்குவதில் கவனம் செலுத்தினார்கள். இராணியிடம் மீண்டும் ஜான்ஸியை கொடுத்து ஆண்டு வர பணித்தனர். இதற்கிடையில் ஆங்கிலேயர்கள் நகர்ந்ததால் ஒர்ச்சா இராஜ்யத்தினர் ஜான்ஸியை தாக்கி அங்குள்ள புதையலை கைப்பற்ற துடித்து ஜான்ஸியின் மீது போர்தொடுத்தனர். ராணி ஆங்கிலேயரை துணைக்கு அழைக்க அவர்கள் வருவதற்கு காலதாமதம் ஆகவே இவரே போரிட்டு வென்று அவர்களை விரட்டியடித்தார். இந்த இடைப்பட்ட காலத்தில் தனது இராணுவ பலத்தை பெருக்கவே ஆங்கிலேயர்களுக்கு ஜான்ஸி ராணியின் மீது பயம் கொள்ள கி.பி.1858 மார்ச்சில் ஜான்ஸியின் மீது போர் தொடுத்து ஒரு வாரத்திற்கு மேலான முற்றுகையிற்கு பிறகு கைப்பற்றினார்கள். ராணி ஆண் வேடம் இட்டு தன் மகனுடன் ஜான்ஸி கோட்டை சுவரை குதிரையில் தாண்டி கல்பியில் போய் தாந்தியா தோபேவிடம் தஞ்சமடைந்தார். பின்னர் இவர்கள் தாந்தியா தோபே படைகளுடன் புரட்சி வீரர்களுடன் இணைந்து குவாலியர் சென்று ஆங்கிலேயருக்கு அடிவருடியான குவாலியரின் மஹாராஜா ஜயாஜிராவ் சிந்தியாவின் படைகளை தோற்கடித்து குவாலியரை கைப்பற்றினார்கள். குவாலியர் கோட்டையின் பாதுகாப்பையும் பலப்படுத்தினார்கள். குவாலியரை தாந்தியா தோபே தலைமையிலான புரட்சிவீரர்கள் கைப்பற்றியதை அறிந்த ஆங்கிலேயர்கள் கி.பி.1858 ஜூன் மாதத்தில் குவாலியரை தாக்க ஆண் வேடமிட்டு தொடர்ந்து சண்டையிட்டு போராடி ஜூன் 18ம் தேதி வீர மரணமடைந்தார். படுகாயமுற்று மரணமடையும் தருவாயில் தன் உடல் கூட ஆங்கிலேயருக்கு கிடைக்ககூடாது என்று தன்னை உடனடியாக எரிக்கவும் கட்டளையிட்டார். அதன்படியே அவர் மரணமடைந்தவுடன் அவரின் உடல் உடனடியாக தகனம் செய்யப்பட்டது. அவர் மறைந்து இரண்டு நாட்கள் கழித்தே குவாலியரை கைப்பற்றி உள்ளே நுழைந்த ஆங்கிலேய படைகள் ஜான்ஸி ராணியின் எரிந்த சாம்பலை தான் காண முடிந்தது. இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் தன்னகரில்லாத தியாகத்துடன் தாய் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டவர்களில் ஜான்ஸியின் ராணியான லெட்சுமி பாய்யின் பங்கும் மகத்தானது.
நாட்டின் பல பகுதிகளிலும் இவரது சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. குவாலியரிலும் திருவனந்தபுரத்திலும் கல்லூரிகளில் இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஜான்ஸியில் மருத்துவ கல்லூரிக்கு இவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. கி.பி.2013ல் ஜான்ஸியில் உள்ள விவசாய பல்கலைக்கழகத்திற்கு ஜான்ஸி ராணியின் பெயர் சூட்டப்பட்டது. அந்தமான் நிக்கோபார் தீவுகளில் கடல்சார் பூங்காவிற்கு ஜான்ஸி ராணியின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. நேதாஜி ஆரம்பித்த இந்திய தேசிய படையில் மகளிர் பிரிவுக்கு ஜான்ஸி ராணி படை என்று பெயர் சூட்டினார். கி.பி.1957ல் மத்திய அரசு இவரது தியாகத்தை போற்றி நினைவு தபால்தலை வெளியிட்டது. இந்திய கடலோர காவற்படையின் கப்பல்களில் ஒன்றிற்கு ஜான்ஸி ராணியின் பெயர் சூட்டப்பட்டது.

Comments
Post a Comment