80) பீமா பாய் ஹோல்கர்
பீமா பாய் ஹோல்கர் (கி.பி.1795-1858) :
வரலாற்றில் எத்தனையோ பெண்கள் தங்களது தாய்நாட்டை அன்னியரிடமிருந்து காக்க போர்க்களம் புகுந்துள்ளனர். மத்திய பிரதேசத்தின் இந்தூர் பகுதியை ஆண்ட யஷ்வந்த் ராவ் ஹோல்கரின் மகளான இவரும் அவர்களுள் ஒருவர். இளமையிலையே கணவரை இழந்து விதவையானாலும் தாய்நாட்டை அபகரிக்க முயன்ற ஆங்கிலேயர்களுக்கு எதிராக தனது 22வது வயதில் கொரில்லா போர்முனையில் அவர்களை விரட்டியடித்தவர். பின்னர் அடுத்த நடந்த போரில் படைத்தளபதியின் சூழ்ச்சியினால் தோற்று போனாலும் இவரது வீரமே பின்னாளில் இவருக்கு பின்னர் வந்த ராணி சென்னம்மா மற்றும் ஜான்சி ராணி லட்சுமி பாய் போன்றவர்களுக்கு உரமாக மாறி அவர்களும் இவரையே முன்னுதாரணமாக கொண்டு ஆங்கிலேயர்களை நாட்டிலிருந்து விரட்டும் முயற்சியில் வலுவுடன் ஈடுபட்டனர்.
இவர் கி.பி.1795ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி இந்தூரில் அதன் மன்னரான யஷ்வந்த் ராவ் ஹோல்கர் - கிருஷ்ணா பாய் ஹோல்கர் தம்பதியருக்கு மகளாக பிறந்தார். இவருக்கு இன்னொரு இளைய சகோதரர் உண்டு. அவர் தான் தந்தைக்கு பின்னர் பட்டத்திற்கு ஏறிய மூன்றாம் மால்ஹர் ராவ் ஹோல்கர். இவர் இந்தூரின் புகழ்பெற்ற நாடு முழுவதும் எண்ணற்ற கோயில்களை புணர்நிர்மானம் செய்தவரும் கோயில்களை கட்டி கொடுத்துவரும் அன்ன சத்திரங்கள் அமைத்தவருமான புண்ணிய தாய் அஹில்யா பாய் ஹோல்கரின் பேத்தி. இவருக்கு இளமையிலையே திருமணம் முடிந்து கணவர் இறந்து விடவே இளம் வயதிலையே விதவை கோலம் பூண்டார். அதன் பின்னர் இவரது தந்தையும் கி.பி.1811ல் மறைந்தார். அந்த நேரத்தில் இவருக்கு 16 வயதும் இவரது சகோதரர் மூன்றாம் மால்ஹர் ராவ் ஹோல்கருக்கு 4 வயதும் நிரம்பியிருந்தது. இதனால் இவரது சகோதரருக்கு பாதுகாப்பளராக தந்தையின் இன்னொரு மனைவியான துளசி பாய் ஹோல்கர் ரீஜெண்ட் ராணியாக இருந்தார். அந்த நேரத்தில் மராத்திய அரசு வலுவிழக்க ஆரம்பித்த நேரத்தில் இந்தூரின் மீது ஆங்கிலேயர்கள் கண்கள் படர்ந்தது.
ஆங்கிலேயர்கள் இந்தூரை அபகரிக்க நினைத்தனர். அந்த நேரத்தில் 11 வயது நிரம்பிய மூன்றாம் மால்ஹர் ராவ் ஹோல்கரே அதன் மன்னராக இருந்தார். அவருக்கு ரீஜெண்ட்டாக இருந்த அவரின் சிறிய தாயாரான துளசி பாய் ஹோல்கர் ஆங்கிலேயர்களை பகைத்து கொள்ள வேண்டாம் என்று கூறினார். ஆனால் அந்த நேரத்தில் கி.பி.1817ல் 22 வயதே நிரம்பிய பீமா பாய் ஹோல்கர் "அஹில்யா பாய் ஹோல்கர் மற்றும் எனது தந்தை மற்றும் புகழ்பெற்ற மூதாதையர்களின் இரத்தத்தினாலும் விய்ரவையினாலும் உருவாகிய தேசம் இது. இதை அன்னியர்களின் பிடியிலிருந்து காப்பாற்ற பட வேண்டும் " என்று வீர உரை உரைத்து தானே தலைமை தாங்கி ஆங்கிலேய கர்னல் மால்கம்மை எதிர்த்து கொரில்லா போர் முறையில் எதிர்த்து போராடி அவர்களை விரட்டியடித்தார். பின்னர் ஆங்கிலேயர்கள் சர் தாமஸ் ஹிஸ்லாப் தலைமையில் வந்து இறங்கியது. சமாதானம் பேச முயன்ற ரீஜெண்ட் ராணி துளசி பாய் ஹோல்கர் துரோகியான கஃபார் கான் பண்டாரியால் கொல்லப்பட்டார். அடுத்த நாள் கி.பி.1817 டிசம்பர் 21ல் மஹத்பூர் போர்களத்தில் 2500 குதிரைப்படை வீரர்கள் அடங்கிய அணிக்கு பீமா பாய் ஹோல்கர் தலைமை தாங்கினார். ரோஷன் பெக் தலைமையிலான பீரங்கி படை அணி 63 பீரங்கிகள் முழங்க ஆங்கிலேய படைகளை துவம்சம் செய்தது. மஹத்பூர் போரில் ஆங்கிலேயர்கள் தோல்வியை தழுவும் நேரத்தில் இந்தூரின் படையில் இருந்த ஒரு துரோகி தளபதியான கஃபார் கான் தனது படைப்பிரிவு வீரர்களுடன் போர்க்களத்தை விட்டு போரிடாமல் வெளியேறினார். ஆங்கிலேயர்கள் தோல்வியை தழுவ இருந்த நேரத்தில் இது அவர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தது. முற்றிலும் வேகமாக தாக்கி பலமிழந்த இந்தூர் இராணுவத்தை தாக்கி வெற்றி பெற்றனர். முடிவில் ஆங்கிலேயர்களுடன் சமாதான ஒப்பந்தம் நடைபெற வேண்டிய கட்டாயத்திற்கு இந்தூர் இராஜ்யம் உள்ளானது. போர் முடிந்த இரண்டு வாரத்தில் கி.பி.1818 ஜனவரி 6ம் தேதி மாண்டூஸர் உடன்படிக்கை ஆங்கிலேயர்கள் மற்றும் இந்தூருக்கு இடையில் ஏற்பட்டது. அதன்படி சத்புதாஸூக்கு தெற்கே இருந்த இந்தூரின் கந்தேஷ் மாவட்டம் முழுவதும் ஆங்கிலேயர்கள் வசம் வந்தது. இந்தூர் பிரிட்டிஷ் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இணைக்கப்பட்டது. ஆனாலும் பீமா பாய் ஹோல்கர் இந்த ஒப்பந்தத்தை ஏற்காமல் தொடர்ச்சியான கொரில்லா யுத்தங்களை தொடர்ந்து கொண்டு இருந்ததாக தெரிகிறது. ஆனாலும் ஆள்பலம் குறைவாக இருந்ததால் இந்தூர் இராஜ்யம் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு மூன்றாம் மால்ஹர் ராவ் ஹோல்கர் தொடர்ந்து ஆண்டார். பீமா பாய் ஹோல்கரின் தொடர்ச்சியான போராட்டங்கள் அடுத்து ஜான்ஸியின் ராணியாக இலட்சுமி பாய்க்கு ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட உத்வேகம் அளித்தது. முடிவில் முதல் சுதந்திர போராட்டம் கி.பி.1857-58களில் தோல்வியில் முடிய ஒட்டுமொத்த இந்தியாவும் ஆங்கிலேயர்களின் பிடியில் சிக்கியது. கி.பி.1858 நவம்பர் 28ம் தேதி தனது 63வது வயதில் பீமா பாய் ஹோல்கர் இந்தூரில் மரணமடைந்தார். தாய்நாட்டை காக்க அன்னியரை எதிர்த்து விதவை கோலம் பூண்டு கொரில்லா முறையில் போரிட்டும் அவர்களை விரட்ட முனைந்த வீர பெண்மணி கடைசியில் துரோகத்தினால் தோற்று போனார். ஆங்கிலேயர்களின் சூழ்ச்சி வென்றது. தூய வீரம் தோல்வியை தழுவியது.

Comments
Post a Comment