82) இராணி ரூதா பாய்
இராணி ரூதா பாய் :
இந்திய வரலாற்றில் எத்தனையோ பெண்கள் தியாகங்களால் இன்றும் பேசப்பட்டு வருகிறார்கள். அத்தகைய தியாக உள்ளங்களுள் இவரும் ஒருவர். இன்றைய அகமதாபாத்தை ஆண்ட வகேலா வம்சத்து அரசரான ராணா வீர் சிங் என்பவரின் மனைவியான ராணி ரூதா பாய். வறண்ட பிரதேசமான இடத்தில் மக்களுக்கு பயன்படும் வகையில் இன்றும் நிலைத்து நிற்கும் அடலேவ் உறைகிணறை கட்டி மக்களின் தாகம் தீர்த்த மகாராணி இவர்.
இவர் இன்றைய குஜராத்தின் காந்திநகர் அகமதாபாத் பகுதியை ஆண்ட வகேலா வம்சத்து அரசரான ராணா வீர் சிங்கின் மனைவி. பேரழகு பெண் மட்டுமல்ல இராஜ்யத்தின் மக்கள் மீது அளவற்ற அன்பும் கொண்டவர். இவர்களது இராஜ்ஜியம் வறண்ட பிரதேசமாக இருந்தது. இதனால் இவரது கணவரான ராணா வீர் சிங் அவரது நாட்டில் நிலவும் தண்ணீர் பஞ்சத்தை போக்க உறைகிணறை வெட்ட முடிவு செய்து கி.பி.1498ல் உறைகிணறை ஆரம்பித்தார். பாதியளவு வேலைகள் நடந்து முடிந்த சமயத்தில் அண்டை நாட்டு மன்னர் மஹ்மூத் பெக்டா (சம்பனீர் பகுதியை ஆண்ட குஜராத் சுல்தான்கள் வம்சத்தில் வந்தவர்) இவரது நாட்டின் மீது படையெடுத்தார். போரின் தனது இராணுவத்தின் பெரும்பகுதியை இழந்தாலும் வீரமாக போராடினார். ஆனால் போரின் முடிவு அவருக்கு தோல்வியையும் மரணத்தையும் பரிசளித்தது. மஹ்மூத் பெக்டா வகேலா வம்சத்து ஆட்சியை கைப்பற்றினார். கணவரின் மரணத்தை அறிந்தவுடன் ராணி ரூதா பாய் உடன்கட்டை ஏறி உயிர் துறக்க முடிவு செய்தார். ஆனால் இராஜ்யத்தின் மக்கள் படும் அவதியினை நினைத்து உறைகிணறை வெற்றிகரமாக முடிக்க உறுதிபூண்டு உடன்கட்டை ஏறும் முடிவை மாற்றி கொண்டார். இராஜ்யத்தை கைப்பற்றிய மஹ்மூத் பெக்டா ராணி ரூதா பாயின் அழகை கண்டு மயங்கி அவரை திருமணம் செய்ய ஆசைப்பட்டார். ஆனால் ராணி ரூதா பாய் தனது ஆசையான உறைகிணற்றை கட்டி முடித்தால் தான் தங்களை திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியதால் உறைகிணற்றை கட்டும் வேலைகள் வேகமாக ஆரம்பித்தது.
அடுத்த வருடத்தில் உறை கிணறு கட்டி முடிக்கப்பட்டது. இஸ்லாமிய கட்டிட கலையுடன் சோலாங்கி கட்டிடகலையுடன் இணைந்து 5 மாடி அடுக்கில் எண்ணற்ற சிற்பங்களுடன் அடலேவ் உறைகிணறு அந்த நேரத்தில் 5 லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டது. வெளியே உள்ள வெப்பநிலையை விட உறை கிணற்றிக்குள் 5 டிகிரி வெப்பநிலை குறைவாக இருந்ததால் வெயில் காலங்களில் மக்கள் தங்கும் இடமாகவும் ஆயிற்று. கட்டி முடித்தவுடன் ராணி ரூதா பாய் கணவரின் கனவு திட்டம் நிறைவேறிய மகிழ்ச்சியில் இராஜ்யத்தின் மக்களுக்கு என்றும் தண்ணீர் கிடைக்கும் என்று மகிழ்ந்தார். மக்கள் மறைந்த ராணாவிற்கு அஞ்சலி செலுத்தினர். அதன் பிறகு ராணி ரூதா பாய் மஹ்மூத் பெக்டா மன்னரை மணக்க விருப்பப்படாமல் தனது கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் கிணற்றை சுற்றி வந்து வணங்கி உறைகிணற்றில் விழுந்து உயிர் விட்டார். ராணி ரூதா பாயின் செயலால் மனம் நெகிழ்ந்தார் மஹ்மூத் பெக்டா. இதே மாதிரிமான இன்னொரு கலைப்படைப்பு இதே கட்டிடக்கலைஞர்களால் உருவாக்கப்படக்கூடாது என்ற எண்ணத்தினால் அந்த கட்டிடக்கலைஞர்களை கொன்று அங்கேயே அவர்களுக்கு சமாதி எழுப்பினார். தனது மானத்தையும் காத்து தனது கணவரின் ஆசைப்படியும் இராஜ்ய மக்களின் தண்ணீர் பிரச்சினையையும் தீர்த்து தனது இன்னுயிரை எந்தவித சலனமின்றி நீத்தார் மகாராணி ரூதா பாய்.


Comments
Post a Comment