83) இராணி சுகதேய்
இராணி சுகதேய் (கி.பி.1686-1726) :
இந்திய வரலாறு கண்ட வீர பெணமணிகளுள் ஒருவர். இவர் வீரமும் கருணையும் ஒருங்கே கொண்டவர். தன் கணவரை போரில் கொன்றவரை நேர் போரில் வென்றும் அவரை கொல்லாமல் மன்னித்து அனுப்பிய பெண் குல மாணிக்கம் இவர்.
ராணி சுகதேய் கி.பி.1686ல் படாம்பா இராஜ்யத்தின் மஹாராஜாவான பாலபத்ர பீரா பாரா மங்ராஜ்க்கும் அவரது மனைவியான ஜெயந்தா தேபி ஆகியோருக்கும் பிறந்தவர். இவர் சிறுவயதிலையே விளையாட்டுகளில் ஆர்வமாகவும் சுறுசுறுப்பாகவும் இருந்துள்ளார். இவரது சகோதரர் ராஜ்குமார் ஃபகிர் சந்திரா வாள்பயிற்சி எடுப்பதை கண்டு தானும் அவ்வாறே பயிற்சி பெற வேண்டும் என்று தந்தையிடம் கேட்க அவரும் இவருக்கு தகுந்த ஆசிரியர்களை நியமித்து போர்க்கலைகளை பயிற்றுவித்தார். பின்னர் இவர் பாங்கி இராஜ்யத்தின் மன்னரான மகாராஜா தனஞ்செய் திரிலோகநாத் ஹரிசந்தன் என்பவரை மணந்தார். இதனால் படாம்பா மற்றும் பாங்கி இராஜ்ஜியங்களுக்கிடையே நல்ல நட்புறவு ஏற்பட்டது. திருமணத்திற்கு பின்னர் ராஜாவும் ராணியும் பூரியில் உள்ள ஜெகந்நாதர் ஆலயத்தை தரிசிக்க சென்றனர். தரிசனத்தை முடித்து விட்டு பாங்கி இராஜ்யத்திற்க்கு திரும்பும் வழியில் குர்தாவின் அரசரான கஜபதி வம்சத்து கோபிநாத் தேவா இவர்களை தங்கள் அரசவைக்கு விருந்தினராக அழைத்தார். அவரின் அழைப்பை ஏற்று விருந்தினராக சென்றனர். சுகதேயின் அழகினால் கஜபதி கோபிநாத் தேவா ஈர்க்கப்பட்டார். அவரை அடைய முடிவு செய்தார். அதற்காக பாங்கி மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டார்.
பாங்கி அரசை குர்தா அரசுடன் இணைக்க கஜபதி கோபிநாத் தேவா விட்ட கோரிக்கையை ராஜா தனஞ்செய் ஏற்க மறுத்துவிட்டார். இதனால் கஜபதி அரசருடன் போரிட முடிவு செய்தார். ரகாதிகிராம் என்ற இடத்தில் நடந்த போரில் பாங்கி மற்றும் படாம்பா படைகள் குர்தாவின் படைகளை எதிர்த்து மோதியது. குர்தாவின் கஜபதி படைகள் இவர்களை விட எண்ணிக்கை அதிகமாக இருந்தது. போரின் முடிவில் ராஜா தனஞ்செய் தோற்று போய் போரில் கொல்லப்பட்டார். கணவர் மறைந்த செய்தியை ராணி சுகதேய் கேள்விப்பட்டவுடன் தனது பாங்கி இராஜ்ய மக்களை காக்க உறுதி பூண்டார். ஆனால் பாங்கியின் தளபதிகள் தோல்வியை ஏற்றுக்கொண்டனர். இந்த நேரத்தில் ராணி சுகதேய் வீரர்களிடையே வந்து போர் இன்னும் முடிவடையவில்லை என்றும் நம்பிக்கையை இழக்காமல் இருக்குமாறும் தானே போர்க்களத்திற்கு தலைமை ஏற்று செல்வதாகவும் கூறி 700 வீரர்கள் கொண்ட படையை அழைத்துக்கொண்டு கஜபதி அரசரின் முகாமை நோக்கி சென்றார். எதிர்த்த கஜபதியின் படைகளை கொன்று குவித்து கஜபதி அரசருக்கு சவால் விடுத்தார். ராணியின் திறமையை குறைத்து மதிப்பிட்டு கஜபதி கோபிநாத் தேவா நேர் போருக்கு ஒப்புக்கொண்டு குதிரையில் இருந்து இறங்கி ராணியிடம் போரிட துவங்கினார். நேர் போரில் கஜபதி அரசரை படுகாயப்படுத்தி ராணி அவரை தோற்கடித்தார். கஜபதி அரசர் கைது செய்யப்பட்டு பாங்கி அரசவைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அடுத்த நாள் அரசவையில் கஜபதி அரசருக்கு ராணி அவரது கணவரது மரணத்திற்கு பழிவாங்கும் விதமாக மரண தண்டனை அளிப்பார் என்று எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் ராணி சுகதேய் "விதவையாக இருக்கும் நான் விதவையின் வாழ்வில் படும் துன்பங்களை அறிவேன். அதனால் இன்னொரு பெண்ணை அந்த கொடுமைக்கு ஆளாக்க மாட்டேன் " என்று கூறி கஜபதி அரசரை மன்னித்து விடுதலை செய்தார். இதன் மூலம் தனக்கு தீங்கு செய்த அரசரை மன்னித்து விடுவித்ததன் மூலம் இரு இராஜ்யத்தற்கும் இடையே ஏற்பட இருந்த தொடர் மோதல்கள் தவிர்க்கப்பட்டது. தனது இராஜ்யத்தின் மக்களின் அமைதியான வாழ்விற்காக எதிரி நாட்டு அரசரை மன்னித்து விடுதலை செய்தார் ராணி சுகதேய். இன்றைய ஒரிசாவின் கட்டாக் மாவட்டத்தின் மேற்கு பகுதியில் உள்ளது தான் பாங்கி அரசு. இந்திய வரலாற்றில் தோற்கடிக்கப்படாத ஒரே ராணியாக இவரே கருதப்படுகிறார். தைரியம் மற்றும் துணிச்சலை இளமையிலிருந்து கொண்ட இந்த ராணி மக்களின் அமைதியான வாழ்விற்கும் மக்களின் முன்னேற்றத்திற்கும் தனது இறுதி காலம் வரை பாடுபட்டார்.

Comments
Post a Comment