85) அக்கம்மா செரியன்
அக்கம்மா செரியன் (கி.பி.1909-1982) :
வரலாற்றில் எத்தனையோ பெண்களும் தங்களது வீரத்தாலும் தைரியத்தாலும் கருணையாலும் தியாகத்தாலும் இடம் பெற்றுள்ளனர். அவர்களுள் காந்தியடிகளால் "திருவாங்கூரின் ஜான்ஸி ராணி" என்று அழைக்கப்பட்ட அக்கம்மா செரியனும் ஒருவர். நாட்டின் விடுதலைக்காக போராடி நாடு சுதந்திரம் பெற்ற பின்னரே தனது 42 வயதில் தான் திருமணம் முடித்தார். குடும்ப வாழ்வை விட பொது வாழ்வையும் மக்களின் நலனையும் நாட்டின் மீதும் அதிக பற்று கொண்டவர்.
இவர் கி.பி.1909 பிப்ரவரி 14ல் கேரள மாநிலத்தில் கொச்சினுக்கு அருகிலுள்ள காஞ்சிரப்பள்ளி என்னும் ஊரில் தொம்மன் செரியன் - அன்னம்மா கரிப்பாபரம்பில் தம்பதியருக்கு இரண்டாவது மகளாக பிறந்தார். இவர் காஞ்சிரப்பள்ளி பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் பின்னர் சங்கனாச்சேரியிலுள்ள செயிண்ட் ஜோசப் உயர்நிலைப்பள்ளியிலும் படித்தார். பின்னர் எர்ணாகுளத்திலுள்ள செயிண்ட் தெரசா கல்லூரியில் பி.ஏ. வரலாறு பாடத்தில் தேர்ச்சி பெற்றார். கி.பி.1931ல் எடக்கரையில் உள்ள செயிண்ட் மேரீஸ் ஆங்கில மீடியம் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். பின்னர் அந்த பள்ளிக்கு தலைமை ஆசிரியரானார். இந்த பள்ளியில் 6 ஆண்டுகள் பணிபுரிந்தார். இந்த காலகட்டத்தில் டிரை கல்லூரியில் எல்டி பட்டமும் பெற்றார். பின்னர் கி.பி.1938 பிப்ரவரி மாதத்தில் திருவாங்கூரில் மாநில காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. இதனால் நாட்டு விடுதலை போராட்டத்தில் கலந்து கொள்ளுவதற்காக தம் ஆசிரியப்பணியை விட்டு விலகினார்.
திருவாங்கூர் மாநில காங்கிரஸ் கட்சியின் இணைந்து பொறுப்பான அரசாங்கத்திற்கான மக்கள் போராட்டத்தை ஆரம்பித்தார். இதை திருவாங்கூர் திவான் இராமசாமி ஐயர் ஒடுக்க முடிவு செய்தார். இதனால் ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்தனர். மாநில காங்கிரஸ் தலைவர் பட்டம் காணும் பிள்ளை முதலிய முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட போராட்டத்தை அடுத்து நடந்த ஒவ்வொரு தலைவராக அறிவிக்க அறிவிக்க அவர்களையும் கைது செய்தது. இப்படியாக போராட்டத்தை தலைமை ஏற்று நடத்த இருந்த 11 தலைவர்களையும் திருவாங்கூர் அரசு கைது செய்யவே இவர் 12 தலைவராக அறிவிக்கப்பட்டார். இவர் மாநில காங்கிரஸின் மீதான தடையை விலக்க கோரி மகாராஜா சித்திரை திருநாள் அரண்மணை வரை போராட்டம் நடத்த முடிவு செய்து 20000 மக்களுடன் பேரணியாக சென்றார். பிரிட்டிஷ் அதிகாரிகள் துப்பாக்கி சூடு நடத்த முடிவு செய்தனர். பிரிட்டிஷ் காவல்துறை தலைவனின் முன் அழுத குரலில் "இவர்களுக்கு தலைவன் நானே. இவர்களை சுடும் முன் என்னை சுட்டுவிடுங்கள்" என்று நெஞ்சை நிமிர்த்தி நின்றதால் காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தும் முடிவை கைவிட்டனர். ஆனாலும் தடையுத்தரவை மீறியதற்காக இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிகழ்வை அறிந்த மகாத்மா காந்தி இவரை "திருவாங்கூரின் ஜான்ஸி ராணி" என்று புகழ்ந்துரைத்தார். சிறையிலிருந்து வெளியே வந்த இவர் முழுநேர காங்கிரஸ் கட்சியின் ஊஜியரானார். பின்னர் கி.பி.1939ல் இவர் தலைமையில் தேசசேவிகா சங்கம் (பெண்கள் குழு) காங்கிரஸில் அமைக்கப்பட்டு பெண்களும் சுதந்திர போராட்ட களத்தில் இணைய வேண்டுகோள் விடுத்தார். பின்னர் கி.பி.1942 ஆகஸ்ட்டில் "வெள்ளையனே வெளியேறு" இயக்கத்தை தொடர்ந்து இவர் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் கி.பி.1946ல் தடையுத்தரவை மீறிய குற்றத்திற்காக 6 மாதம் சிறை தண்டனை அனுபவித்தார். கி.பி.1947ல் திவான் இராமசாமி ஐயரின் சுதந்திர திருவாங்கூர் தோஷத்திற்கு எதிராக குரல் எழுப்பியதற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.
சுதந்திரத்திற்கு பிறகு கி.பி.1947ல் காஞ்சிரப்பள்ளியிலிருந்து திருவாங்கூர் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் கி.பி.1951ல் சுதந்திர போராட்ட வீரரும் கொச்சி சட்டமன்ற உறுப்பினருமான வி.வி.வர்கி மன்னம்பிளாக்கலை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன் உண்டு. பின்னர் கி.பி.1952ல் இவருக்கு லோக்சபா சீட் மறுக்கப்பட்டதால் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி சுயேச்சையாக மூவாட்டுபுழா லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். பின்னர் அரசியலை விட்டு விலகினார். இவர் கி.பி.1982 மே 5ல் திருவனந்தபுரத்தில் இறந்தார். திருவனந்தபுரம் வெள்ளயம்பலத்தில் இவருக்கு உருவ சிலை அமைக்கப்பட்டது. இவரை பற்றி நூல்களும் ஆவண படமும் எடுக்கப்பட்டுள்ளது.


Comments
Post a Comment