86) மூல்மதி

மூல்மதி :


இந்திய சரித்திரம் எண்ணற்ற வீர தாய்களை கண்டுள்ளது. புறநானாற்று பாடலில் முதல் நாள் போரில் தந்தை மறைந்தார் அடுத்த நாள் போரில் கணவர் மறைந்தார் ஆனாலும் மூன்றாவது நாள் போரில் தன் பச்சிளம் பாலகனை போருக்கு அனுப்பி வைத்த வீர தாயின் நவீன வடிவம் தான் இந்த மூல்மதி என்ற வீர தாய். இவர் சுதந்திர போராட்ட வீரர் ராம் பிரசாத் பிஸ்மியின் தாயார்.

இவர் இன்றைய உத்திரபிரதேசத்திலுள்ள ஷாஜஹான்பூரை சேர்ந்தவர். எளிய பெண்மணி இவர். பெரிய அளவில் பின்புலம் எதுவுமில்லை. இவருக்கு 2 மகன்கள். அதில் மூத்தவர் தான் ராம் பிரசாத் பிஸ்மி. மூத்த மகனான ராம் பிரஸாத் பிஸ்மி பகத்சிங், ராஜகுரு, சந்திரசேகர் ஆசாத் மற்றும் அஷ்பகுல்லா கான் ஆகியோருடன் இணைந்து புரட்சிகர "ஹிந்துஸ்தான் சோஷியலிஸ்ட் குடியரசு கட்சி"யை தொடங்கினார். இவர்கள் ஆயுதங்கள் வழியே சுதந்திர போராட்டத்தை நடத்த முடிவு செய்தனர். ராம் பிரஸாத் நல்ல கவிஞர் மற்றும் எழுத்தாளர். இவர் ஹிந்தி மற்றும் உருது மொழிகளில் புலமை பெற்றவர். அவர் ராம், அகாயத் மற்றும் பிஸ்மில் என்ற புனைபெயர்களில் ஹிந்தி மற்றும் உருதுவில் கவிதை எழுதி சுதந்திர தாகத்தை மக்கள் மனதில் ஏற்படுத்தினார். கி.பி.1918ல் மைன்புரி சதி வழக்கிலும் கி.பி.1925ல் லக்னோவிற்கு அனுப்பப்பட்ட கருவூல பணத்தை ககோரி இரயில் நிலையத்தில் கொள்ளையடிக்க முயன்ற சதி வழக்கிலும் தொடர்புடையவர். ஆங்கிலேயரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கோரக்பூர் சிறையில் இருந்த இவரை இவரது தாயாரான மூல்மதி சென்று பார்த்தார். தாயாரை கண்டவுடன் ராம் பிரஸாத் பிஸ்மிலின் கண்களில் கண்ணீர் ஆறாக ஓடியது. மூல்மதி இப்படி ஒரு மகனை பெற்றெடுத்ததற்காக நான் பெருமைப்படுகிறேன். நீ எதற்கு அழுகிறாய் என்று கேட்க பிஸ்மில் இனி என் தாயாரான உங்களை பார்க்க முடியாதே என்று நினைத்து அழுகிறேன் என்று கூறினார். மகனை தேற்றிய இவர் உன்னால் நான் பெருமைப்படுகிறேன். உனது இலட்சியங்களுக்காக உன் தியாகத்தை நினைத்து பெருமையடைகிறேன் என்று கூறினார். பின்னர் சில நாட்களில் கி.பி.1927 டிசம்பர் 19ல் தூக்கிலிடப்பட்டார். மூத்த மகன் பிஸ்மில் இறந்த சில நாட்களில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய இவர் தனது மூத்த மகன் இடத்தை இளைய மகன் நிரப்புவான். அவனையும் இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக அர்ப்பணிக்கிறேன் என்று பெருமிதத்தோடு கூறினார். புறநானூற்று பாடலில் கூறப்பட்ட வீர தாயின் செயலை ஒத்துள்ளது மூல்மதியின் தியாகம். இப்படிப்பட்ட தன்னலமற்ற வீர தாயான மூல்மதி தியாகத்தாலும் நாட்டுபற்றாலும் மக்களின் மனதில் உயர்ந்து நின்றார். இப்படிப்பட்ட வீர பெண்மணிகளின் தியாகத்தால் தான் இந்த பாரத நாடு அன்னியரின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு சுதந்திர காற்றை சுவாசித்தது.

Comments

Popular posts from this blog

145) குந்தள குமாரி சபத்

146) அம்மு சுவாமிநாதன்

137) காளி பாய்