87) ஜானகிதேவி பஜாஜ்

ஜானகிதேவி பஜாஜ் (கி.பி.1893-1979) :


இந்திய வரலாற்றில் எண்ணற்ற தியாகங்களை பெண்கள் செய்துள்ளனர். அப்படிப்பட்ட பெண்களில் இவரும் ஒருவர். பெரிய தொழிலதிபர் மனைவியாக இருந்தாலும் அதை உதறிவிட்டு நாட்டின் விடுதலைக்காக போராட்டங்களில் கலந்து கொண்டு சிறையில் வாடியவர். இன்றைய பஜாஜ் குழுமங்களின் நிறுவன தலைவரான ஜம்னாலால் பஜாஜ் அவர்களின் மனைவி இவர்.

இவர் கி.பி.1893ல் மத்திய பிரதேசத்திலுள்ள ஜோராவில் ஒரு மார்வாரி குடும்பத்தில் பிறந்தார். இவர் மைனாதேவி - தம்பதியருக்கு மகளாக பிறந்தார். இவருக்கு சிரஞ்சி லால்ஜி என்ற அண்ணனும் புருஷோத்தம் தாஸ் என்ற தம்பியும் இருந்தனர். இவரது 9வது வயதில் கி.பி.1902ல் ‌ஜம்னாலால் பஜாஜ்ஜை திருமணம் செய்து கொண்டு மகாராஷ்டிராவில் உள்ள வார்தா நகருக்கு வந்தார். இவரது கணவரான ஜம்னாலால் பஜாஜ் ஒரு தொழிலதிபராக பஜாஜ் குழுமங்களை உருவாக்கிய நிறுவனர்‌. தம்பதியருக்கு மொத்தம் 5 குழந்தைகள். இவரது கணவர் மகாத்மா காந்தியடிகளுக்கு மிகவும் நெருக்கமானவர். காந்தியடிகள் இவரது கணவரை தனது 5வது மகன் என்று அழைக்கும் அளவுக்கு அவருக்கு பிரியமானவராக இருந்தார். ஜானகிதேவி பஜாஜ் கி.பி.1919ல் காந்தியின் கொள்கையினால் ஈர்க்கப்பட்டு தன் வீட்டில் இருந்த அன்னிய நாட்டு துணிகளை எரித்தார். தனது விலையுயர்ந்த பட்டு சேலைகளை துறந்தார். தங்கத்தை துறந்து எளிய கதர் ஆடைக்கு மாறினார். அதன் பின்னர் தன் வாழ்நாள் முழுவதும் தங்கத்தை அணியவில்லை மேலும் கதர் ஆடையை தவிர வேறு எந்த ஆடையையும் அணியவில்லை. பின்னர் வீட்டில் அனைவரையும் கதர் உடை அணிய செய்தார். கதர் ராட்டை சுற்ற கற்றுக்கொண்டு மற்றவர்களுக்கும் கதர் ஆடையின் மகிமையும் அதன் முக்கியத்துவத்தையும் எடுத்து கூறி கதர் இயக்கத்திற்கு வலிமை சேர்த்தார். வெளிநாட்டு துணிகளை சேகரித்துக் கொண்டு வார்தாவில் உள்ள "காந்தி செளக்"கில் 7 நாட்கள் துணிகளை எரித்து ஹோலி பண்டிகை கொண்டாடினார். பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக கி.பி.1928ல் வார்தாவில் உள்ள லக்ஷ்மி நாராயணன் கோயிலில் தாழ்த்தபட்ட மக்களை  ஆலய பிரவேசம் செய்வது முதலிய சீர்திருத்தங்களுக்கு துணை நின்றார். பின்னர் கி.பி.1932ல் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை தண்டனை அனுபவித்தார். பலமுறை போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை தண்டனைகளை அனுபவித்தார். அதன் பின்னரும் கதர் இயக்கம், கோ சேவா இயக்கங்களிலும் பங்கு கொண்டார். கி.பி.1942 முதல் பல ஆண்டுகள் கோ சேவா சங்கத்தின் தலைவராக இருந்தார். 

ஆச்சார்ய வினோபாவே இவரது குடும்பத்தினருக்கு ஆன்மீக குருவாக இருந்தார். அதனால் அவருடன் இணைந்து கிராம சேவா, கோ சேவா மற்றும் பூதான் இயக்கங்களில் பங்கு கொண்டார். சுதந்திரத்திற்கு பின்னர் ஆச்சார்ய வினோபாவேயுடன் இணைந்து பூதான் இயக்கத்தில் பாடுபட்டார். இவருக்கு கி.பி.1956ல் இந்தியாவின் இரண்டாவது உயர்ந்த விருதான "பத்ம விபூசண்" விருது வழங்கப்பட்டது. இவரது சுய சரிதை "மேரி ஜீவன் யாத்ரா" என்ற பெயரில் கி.பி. 1965ல் வெளியிடப்பட்டது. கி.பி.1979ல் இவர் மறைந்தார். இவரது நினைவாக "ஜானகி தேவி பஜாஜ் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ்" மற்றும் "ஜானகி தேவி பஜாஜ் கிராம் விகாஸ் சன்ஸ்தா"  முதலிய கல்வி நிறுவனங்களும் விருதுகளும் நிறுவப்பட்டது.  பெரும் பணக்காரராக இருந்தாலும் கொண்ட கொள்கைகாகவும் ஆடம்பரங்களை துறந்து கதர் ராட்டை சுற்றி பெண்களின் முன்னேற்றத்திற்கும் நாட்டின் விடுதலைக்கும் பாடுபட்டு சிறை தண்டனை பெற்று கடைசி வரை காந்தியவாதியாக அவர் வழிகாட்டிய பாதையில் நடந்து மற்றவர்களுக்கு உதாரணமாக வாழ்ந்து காட்டினார்.

Comments

Popular posts from this blog

145) குந்தள குமாரி சபத்

146) அம்மு சுவாமிநாதன்

137) காளி பாய்