9) சுல்தான் ரஸியா பேகம்
சுல்தான் ரஸியா பேகம் (கி.பி.1205-1240) :
டெல்லியை ஆண்ட முதல் முஸ்லீம் பெண் சுல்தான் இவரே. முதலும் கடைசியுமாக டெல்லியை ஆண்ட பெண் இவர் ஒருவரே. இவர் மாமுல்க் (அடிமை) வம்சத்தை சேர்ந்தவர். கோரி முகமது டெல்லியை தன் நம்பிக்கையுரிய தளபதியான குத்புதீன் ஐ-பெக்கிடம் கொடுத்து விட்டு கஜினி நாட்டிற்கு செல்லும் வழியில் இன்றைய ராவல்பிண்டி அருகிலுள்ள தாமியான் என்னுமிடத்தில் மாலை நேர தொழுகையின் போது கொல்லப்பட அவருக்கு ஆண் வாரிசு இல்லாததால் அவரின் இராஜ்யத்தின் தளபதிகள் தங்களது பகுதிகளை தாங்களே சுயாட்சியாக அறிவித்து விட்டு ஆள ஆரம்பித்தனர். அப்படி டெல்லியை ஆண்ட முதல் அடிமை வம்ச சுல்தானான குத்புதீன் ஐ-பெக்கிற்கு பின்னர் வந்த அவரின் மகனை வீழ்த்திவிட்டு அவரது மருமகனான இல்டூமிஷ் ஆட்சிக்கு வந்தார். இவரே குத்புதீன் ஐ-பெக் ஆரம்பித்து வைத்த குதுப்மினாரை முழுமையாக கட்டி முடித்தவர். இந்த இல்டூமிஷ்ஷின் மகள் தான் சுல்தான் ரஸியா பேகம். ரஸியா பேகம் இன்றைய உத்திர பிரதேசத்திலுள்ள பதாவுன் (Badaun) நகரில் கி.பி.1205ல் இல்டூமிஷ்-குதுப் பேகம் ஆகியோருக்கு மகளாக பிறந்தார். இளமையிலையே குதிரை சவாரியிலும் வாள் வித்தையிலும் தனது சகோதரர்களை விட சிறந்து விளங்கினார். அதனால் இல்டூமிஷ் தான் இராஜபுத்ரர்களுக்கு எதிராக படையெடுத்து செல்லும் சமயத்தில் ரஸியா பேகத்தையே தற்காலிக சுல்தானாக நியமித்து விட்டு சென்றார். தந்தை திரும்பியதும் அவரிடம் ஆட்சியை ஒப்படைத்தார். தான் இல்லாத சமயத்தில் ஆட்சியை மகள் திறம்பட நடத்தியதாலும் தனது கடைசி காலத்தில் மகன்கள் ஒருவரும் சரியில்லை என்பதால் இல்டுமிஷ் மகளான ரஸியா பேகத்திடம் ஆட்சியை ஒப்படைக்க கூற துருக்கிய பிரபுக்கள் சபை முஸ்லீம் பெண் ஆட்சி புரிவதா? முகத்து முக்காட்டை துறந்து அரசு புரிவது அதுவும் பெண்ணின் கீழ் தாங்கள் பணிபுரிவது மிகவும் அவமானம் என்று இல்டுமிஷ்க்கும் துருக்கியை சேர்ந்த வேலைக்கார பெண்ணாக இருந்து அவரை மணந்த ஷா துர்கானுக்கும் பிறந்த மகனான ஆராம் ஷா என்பவரை ஆட்சியில் அமர்த்தினார்கள். ஆராம்ஷா இல்ட்டுமிஷ்ஷின் ஆட்சியில் பாதூன் மற்றும் லாகூர் பகுதிகளை நிர்வகித்த இளவரசாக இருந்தார். இவரது அம்மாவான ஷா துர்கான் என்ற பெண்மணி இவரது ஆட்சியில் தன்னை எதிர்த்த அமைச்சர்கள் அனைவரையும் தீர்த்து கட்டினார். அரண்மனையிலுள்ள மற்ற ராணிகளின் அதிகாரத்தையும் அடக்கி தனது கீழ் அனைவரையும் வைத்திருந்தார். இல்ட்டுமிஷ்ஷின் கடைசி காலத்தில் அவருக்கு பிறந்த குழந்தையை பின்னால் வாரிசு பிரச்சினை வரக்கூடாது என்று மற்ற ராணிக்களின் முன்னையே குழந்தையின் கண்களை தோண்டியெடுக்க உத்தரவிட்டு நிறைவேற்றினார். மகன் எப்போதுமே மதுவும் மாதுவுமாக இருக்க இவரே நிர்வாகத்தை தனது பிடியில் வைத்திருந்தார். வெறும் 7 மாதங்களே ஆட்சியில் இருந்த இவரது ஆட்சியை எதிர்த்த புரட்சி படையை எதிர்க்க முடியாமல் கோட்டையின் நிலவறையில் போய் ஒளிந்து கொண்டிருந்த ஆராம் ஷாவையும் அவரது அம்மா ஷா துர்க்கானையும் புரட்சி படை கொன்று இல்ட்டுமிஷ்ஷின் மகளான ரஸியா பேகத்தை டெல்லியின் சுல்தானாக முடிசூட்டினார்கள். ஆட்சி புரிந்தது 4 ஆண்டுகளே ஆனாலும் தனது ஆட்சியை காப்பாற்ற சகோதரர்களின் சூழ்ச்சியையும் மற்றும் துருக்கிய பிரபுகளுக்கும் இடையே போராட வேண்டியிருந்தது. இல்ட்டுமிஷ்ஷின் ஆட்சியில் செல்வாக்கு பெற்றிருந்த "நாற்பதின்மர் (சாகல்கனி)" என்ற கூறப்பட்ட துருக்கிய பிரபுக்கள் தங்களது மேலாண்மையை ரஸியாவிடமும் ஏற்படுத்தினார்கள். ஆனால் ரஸியா பேகம் அவர்களுக்கு கட்டுப்பட்டு பொம்மை ஆட்சியாக நடத்த இஷ்டப்படவில்லை. ரஸியா பெண்ணுக்குரிய ஆபரணங்களை துறந்து முகத்து முக்காட்டை நீக்கி அரசு புரிய தொடங்கினார். வேட்டையாடவும் போர்களில் படை நடத்தவும் செய்தார். முஸ்லீம் பெண்ணான இவர் தங்களுக்கு அடங்கி அரண்மனையை விட்டு வெளியே வராமல் தங்கள் சொற்கேட்டு ஆட்சி புரிவார் என்று எதிர்பார்த்த துருக்கி பிரபுக்களின் சபைக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது. தன்னை எதிர்த்த நிஜாம்-உல்-ஜீனாய்தியை தோற்கடித்து விரட்டியடித்தார். ரன்தம்பூரில் இராஜபுத்ரர்களை அடக்குவதற்கு படைகளை அனுப்பினார். தனக்கு விசுவாசமானவர்களை உயர் பதவிகளில் அமர்த்தினார். துருக்கிய பிரபுக்கள் ரஸியா பேகத்திற்கும் அவரது உதவியாளர் என்று சிலரும் அபிசீனியப் பிரபு என்று சிலராலும் சொல்லப்பட்ட எத்தியோப்பியா நாட்டை சேர்ந்த ஜலாலுதீன் யாகூத்கானிடம் தொடர்பு கொண்டதாக குற்றம் சாட்டினார். குதிரையிலிருந்து யாகூத்கான் ரஸியா இறங்குவதற்கு உதவினார் என்பதே குற்றச்சாட்டு. ஆனால் பொதுவிடங்களில் ரஸியா குதிரை சவாரி செய்வதில்லை. யானை மீது ஏறியே சவாரி செய்வது தான் வழக்கம் என்று இக்குற்றச்சாட்டு அபத்தமானது என்று சமகால வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். இவரின் ஆட்சிக்கு எதிராக லாகூரிலும் சிர்கண்ட்டிலும் புரட்சி வெடித்தது. அதை இவர் படையெடுத்து சென்று முறியடித்தார். திரும்பும் வழியில் யாகூத்கான் கலகக்காரர்களால் என்று சொல்லப்பட்டாலும் ரஸியாவின் பிரபுக்களின் உட்சதியால் கொல்லப்பட ரஸியா பேகம் "தாபர்ஹிண்டா"வில் சிறை வைக்கப்பட்டார். இவரை சிறை வைத்த "அல்துனியா" என்பவர் இவரின் காதற் சிறையில் விழுந்து இவரை மணம்புரிந்து கொண்டார். அரண்மனையில் தனக்கு எதிராக பின்னப்பட்ட சதி வலைகளை பற்றி அவரிடம் எடுத்து கூறினார். பின்னர் தம்பதிகள் இருவரும் டெல்லியை கைப்பற்ற விரைந்தனர். இந்த போரில் இருவரும் வீரத்துடன் போர் புரிந்தாலும் தோற்கடிக்கப்பட்டனர். தப்பித்து சென்ற போது ரஸியா பேகம் குண்டர்களால் காட்டினில் சுற்றி வளைத்து படுகொலை செய்யப்பட்டார். இவரது கல்லறையை இவருக்கு பின்னர் வந்த இவரது இன்னொரு சகோதரனான பஹ்ராம் இன்றைய பழைய டெல்லியிலுள்ள துர்க்மேன் வாசல் அருகிலுள்ள புல்புலி கானா என்னுமிடத்தில் கட்டினார். இவரது கல்லறைக்கு பக்கத்திலுள்ள இன்னொரு கல்லறை இவரது இன்னொரு சகோதரியான ஷாஸியா என்பவரது கல்லறை. இந்த கல்லறை சுற்றி நிறைய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதால் இதை பராமரிக்க தொல்பொருள் துறையினரால் முடியவில்லை. அதனால் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மட்டுமே செய்கிறார்கள். கி.பி.14ம் நூற்றாண்டு பயணியான இபின் பதூதா மக்கள் இவரது கல்லறையை புனித ஸ்தலமாக வழிபட்டனர் என்று குறிப்பிட்டுள்ளார்.


Comments
Post a Comment