89) பிரிதிலதா வதேதார்
பிரிதிலதா வதேதார் (கி.பி.1911-1932) :
இந்திய வரலாறு கண்ட தற்கொலைபடை பெண்மணியாக அறியப்படுகிறார் இவர். புரட்சிகர விட்டதைப் படையில் இணைந்து தாக்குதல் நடத்திய பின்னர் போலீசாரின் கைகளில் சிக்காமல் இருப்பதற்காக தன் உயிரை பற்றி கவலைப்படாமல் இயக்கத்தின் மற்ற உறுப்பினர்களின் விவரம் தன்னால் வெளியாகிவிடக்கூடாது என்று சயனைடு அருந்தி தற்கொலை செய்து கொண்டவர் இவர்.
பிரிதிலதா இன்றைய வங்காள தேசத்திலுள்ள சிட்டகாங் மாகாணத்திலுள்ள தால்காட் என்ற கிராமத்தில் பிராமண குடும்பத்தில் கி.பி.1911 மே 5ல் பிறந்தார். இவரது தந்தையான ஜகபந்து வதேதார் சிட்டகாங் நகராட்சியில் எழுத்தராக பணிபுரிந்தார். இவருடன் மதுசூதனன், கனகலதா, சாந்தி லதா, ஆஷா லதா மற்றும் சந்தோஷ் என்று சகோதர சகோதரிகளுடன் சேர்த்து குடும்பத்தில் மொத்தம் 6 குழந்தைகள். பிரிதிலதா சிட்டகாங்கிலுள்ள டாக்டர் கஸ்தகீர் அரசு பெண்கள் படித்தார். பின்னர் கி.பி.1928ல் டாக்கா ஈடன் கல்லூரியில் சேர்ந்து படித்தார். பள்ளி கல்லூரிகளில் சிறந்த மதிப்பெண்களை பெறும் மாணவியாக இருந்தார். பின்னர் கி.பி.1929ல் மேற்படிப்புக்காக கொல்கத்தா பெதுன் கல்லூரியில் இணைந்து தத்துவ பாடத்தில் பட்டம் பெற்றார். கொல்கத்தாவில் பட்டம் பெற்ற பின்னர் சிட்டகாங் திரும்பி உள்ளூர் ஆங்கில பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்தார்.
இந்த நேரத்தில் வங்காள தேசத்தில் புரட்சிகர நடவடிக்கைகள் மூலம் சுதந்திரத்திற்காக பாடுபட்ட சூர்யா சென் என்பவரை பற்றி கேள்விப்பட்டு கி.பி.1932 ஜூன் 15ல் அவரை தால்காட் முகாமில் சந்தித்தார். சக புரட்சியாளர் வினோத் பீஹாரி செளத்ரி பெண்கள் தங்கள் குழுவில் சேருவதை எதிர்க்க பெண்கள் ஆயுதங்களை எடுத்து சென்றால் ஆங்கிலேயர்கள் ஆண்களை போல சந்தேகப்பட மாட்டார்கள் என்ற எண்ணத்தினால் இவர் குழுவில் சேர அனுமதிக்கப்பட்டார். கி.பி.1932ல் சிட்டகாங் பகர்தாலி ஐரோப்பிய விடுதியில் "இங்கு நாய்களுக்கும் இந்தியர்களுக்கும் அனுமதியில்லை" என்று போர்டு வைத்திருந்தனர். இதனால் கோபப்பட்ட சூர்யா சென் இந்த விடுதியை தாக்க திட்டமிட்டார். இந்த தாக்குதலுக்கு முதலில் கல்பனா தத்தா என்ற பெண் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் தாக்குதலுக்கு 7 நாட்களுக்கு முன்பு அவர் கைது செய்யப்பட பிரிதிலதா தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிடிபட்டால் பொட்டாசியம் சயனைடு அருந்தி உயிர்விடுவது என்று முடிவு எடுக்கப்பட்டது. இவர் பஞ்சாபி ஆண் போல வேடமிட்டும் மற்றவர்கள் வேட்டியும் சட்டையும் அணிந்து விடுதிக்குள் மொத்தமாக 40 பேர் நுழைந்தனர். ஆங்கிலேயர்கள் இவர்கள் இவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்த இவர் மீதும் ஒரு குண்டு பாய்ந்தது. காயமடைந்த இவர் தப்பி செல்ல போலீசார் துரத்தினர். அவர்களிடமிருந்து தப்பிக்க பொட்டாசியம் சயனைடு அருந்தி உயிர்விட்டார். உடற்கூராய்வில் இவரது மரணத்திற்கு காரணம் துப்பாக்கி குண்டு அல்ல சயனைடு தான் காரணம் என்று போலீசார்கள் கூறினர்.
ஓவ்வொரு ஆண்டும் வங்க தேசத்திலும் இந்தியாவிலும் இவரது பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சிட்டகாங்கில் தெருவுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டது. கி.பி.2016ல் பகர்தாலி விடுதிக்கு எதிரில் இரயில்வே பள்ளி முன்பு இவரது உருவச்சிலை வைக்கப்பட்டுள்ளது. தைரியமான துணிச்சலான நடவடிக்கைகளால் இந்திய பெண்களில் இவர் வேறுபட்டு நிற்கிறார்.


Comments
Post a Comment