91) இராஜ்குமாரி குப்தா

இராஜ்குமாரி குப்தா (கி.பி.1902- ???)


சரித்திரத்தில் எத்தனையோ பெண்கள் தங்கள் குடும்பத்தை துறந்து வாழ்க்கையை துறந்து நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டுள்ளனர். அவர்களின் பெயர்கள் வரலாற்றில் பதிவு செய்யப்படாமல் போயிருக்கிறது. அத்தகைய பெண்களில் இவரும் ஒருவர். துப்பாக்கியுடன் சென்ற போது பிடிபட்டதால் கணவரின் குடும்பத்திலிருந்து விலக்கப்பட்டார்.

இவர் கி.பி.1902ல் கான்பூரில் பண்டா ஜில்லாவில் ஒரு மளிகைகாரரின் மகளாக பிறந்தார். இவர் தனது 13வது வயதில் புரட்சியாளர் மதன் மோகன் குப்தாவை திருமணம் செய்து கொண்டார். இவரின் கணவர் காந்திய வழியில் பின்பற்றியதால் இவரும் கணவருடன் இயல்பாகவே சுதந்திர போராட்ட களங்களில் ஈடுபாடு கொண்டிருந்தார். செளரிசெளரா சம்பவத்திற்கு பிறகு காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தியது இவருக்கு பிடிக்கவில்லை. இந்த நேரத்தில் இவருக்கு சந்திரசேகர் ஆஸாத் தலைமையிலான ஆயுதமேந்திய புரட்சிகர விடுதலை இயக்கத்தினருடன் இணைந்து சுதந்திர போராட்டத்தை தொடர்ந்து நடத்த முடிவு செய்தார். இதனால் ஹிந்துஸ்தான் சோஷியஸிஸ்ட் குடியரசு கட்சியில் இணைந்து சந்திரசேகர் ஆசாத்தின் கூட்டாளிகளுக்கு ரகசிய செய்திகளையும் ஆயுதங்களையும் எடுத்து சென்று உதவினார். இந்த நேரத்தில் கி.பி.1925ல் லக்னோவுக்கு கொண்டு செல்லப்பட இருந்த அரசாங்க கருவூல பணத்தை கொள்ளையடிக்க புரட்சியாளர்கள் திட்டமிட்டனர்.  ராம் பிரசாத் பிஸ்மில் ஆகியோருடன் இணைந்து புரட்சியாளர்களுக்கு தனது ஆடையில் துப்பாக்கிகளை மறைத்து சென்று கொடுத்தார். அதன் பிறகும் புரட்சிகர இயக்கத்தினருக்கு தனது வீட்டிற்கு தெரியாமல் ஆயுதங்களை மறைத்து சென்று எடுத்து கொடுத்து உதவி வந்தார். ஒரு நாள் தனது 3 வயது மகனுடன் வயல்வெளியில் நடந்து சென்றபோது துப்பாக்கி வைத்திருந்ததாக இவர் கைது செய்யப்பட்ட போது இவரின் குடும்பம் அதிர்ந்தது. இவரின் மாமியார் உள்ளூர் பத்திரிக்கையில் இவருக்கும் தங்கள் குடும்பத்திற்கும் எந்த தொடர்பும் இனியில்லை என்று அறிவிப்பு கொடுத்தார். சிறையில் வாடிய பின்னர் விடுதலை செய்யப்பட்ட பின்னரும் இவரது குடும்பத்தினர் இவரை ஏற்கவில்லை. அதன் பிறகும் சுதந்திர போராட்ட களத்தில் தீவிரமாக ஈடுபட்டதாக தெரிகிறது. கி.பி.1930,1932,1942 களில் நடந்த போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றார். சுதந்திர போராட்ட களத்தில் எழுத்தாளர் சாகரி சாப்ராவுடனான சந்திப்பில் " நாம் அனைவரும் சேர்ந்து செய்யவேண்டியதை நாங்கள் செய்தோம். மேலிருந்து பார்த்தால் நாங்கள் காந்தியவாதிகள். கீழே நாங்கள் புரட்சியாளர்கள்" என்று பதிவு செய்துள்ளார். நாட்டின் விடுதலைக்கு பின்னர் இவரது இருப்பு விவரம் தெரியவில்லை. நாட்டின் விடுதலைக்காக தனது சொந்தங்களை இழந்து மகனை விட்டு பிரிந்தும் சிறையில் அடைப்பட்டு கொடுமைகள் அனுபவித்தும் நாட்டின் விடுதலையையே பெரிதாக நினைத்த  தியாக பெண்மணி தான் ராஜ்குமாரி குப்தா. இவர் போன்ற தன்னலமற்ற சேவை உள்ளங்களால் பெற்ற விடுதலையை இவர்களின் ஞாபகத்தில் போற்றுவோம்.

Comments

Popular posts from this blog

145) குந்தள குமாரி சபத்

146) அம்மு சுவாமிநாதன்

137) காளி பாய்