92) தில்லையடி வள்ளியம்மா

தில்லையடி வள்ளியம்மா (கி.பி.1898-1914) :


வீரத்திலும் தியாகத்திலும் தன்னலமற்ற உள்ளத்திலும் தமிழ் பெண்கள் மற்றவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்று உலகுக்கு நிரூபித்த தமிழ் பெண்மணி. காந்தியின் தென்னாப்பிரிக்கா போராட்டத்தின் போது தனது 16 வது வயதில் வீரமாக போராட்ட களத்தில் நின்று அடிபட்டாலும் தனது உயிர் களத்தில் போனாலும் பரவாயில்லை என்று கலங்காது நின்று உயிர்விட்ட 16 வயது பெண் தான் இந்த தில்லையடி வள்ளியம்மை.

தமிழ்நாட்டிலுள்ள மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள தில்லையாடி என்னும் கிராமத்தை சேர்ந்த மங்களம் - முனுசாமி முதலியார் தம்பதிகளுக்கு மகளாக தென்னாப்பிரிக்காவிலுள்ள ஜோஹன்ஸ்பெர்க் நகரில் கி.பி.1898 பிப்ரவரி 22ம் தேதி பிறந்தார். இவரது தந்தையும் தாயும் பிழைப்பிற்காக தென்னாப்பிரிக்கா சென்ற போது பிறந்ததால் பிறப்பிலிருந்து இந்தியாவை கண்டதேயில்லை. ஆனாலும் இந்தியா மண்ணையும் இந்திய கலாச்சாரத்தின் படியுமே வாழ்ந்து வந்தார். இவரது தந்தை ஜோஹன்ஸ்பெர்க் நகரில் பழம், காய்கறிகடைகள் மற்றும் மிட்டாய்கடை வைத்திருந்த வியாபாரி. 

இந்த நேரத்தில் தென்னாப்பிரிக்காவில் நிறவெறி பிரச்சினை ஆரம்பித்தது. சர்ச் அல்லது சர்ச் ஒப்புதல் பெறாத திருமணங்கள் செல்லாது என்றும் அத்தகைய திருமணங்களின் மூலம் பிறந்தவர்களின் பிறப்பை கொச்சைப்படுத்தியது போன்றும் சட்டம் வந்தது. இந்த நேரத்தில் தென்னாப்பிரிக்காவில் இருந்த காந்தியடிகள் நிறவெறி அரசுக்கு எதிராக தனது எதிர்ப்புணர்வை ஆரம்பித்தார்.  தில்லையாடி வள்ளியம்மாளின் தந்தையார் காந்தியடிகளின் சத்தியாகிரக வழியை பின்பற்றியவர். அவருக்கு அந்த நேரத்தில் அறுவை சிகிச்சை முடிந்த காரணத்தால் டிரான்ஸ்வாலிருந்து நடால் வரையிலான பெண்கள் அணிவகுப்பில் வள்ளியம்மை மற்றும் அவரது தாயாரும் இணைந்தனர். பொதுக்கூட்டங்களில்  மூன்று பவுன் வரியின் விளைவை எதிர்த்து பேசினார்கள். நிறவெறியை கண்டித்து தொழிலாளர்களை வேலைநிறுத்த போராட்டத்திற்கு தூண்டினார்கள். பல்வேறு இடங்களில் கூட்டங்களுக்கு சென்று உரையாடியதால் இவரும் இவர் தாயாரும் கி.பி.1913 டிசம்பரில் கைது செய்யப்பட்டு மாரிட்ஸ்பர்க் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்ட காலத்தில் இவர் உடல்நலம் குன்றினார். அதனால் சிறை அதிகாரிகள் இவர் சிறுவயது பெண் என்பதால் சிறையிலிருந்து விடுவிக்க கூறியும் சிறை தண்டனையை தொடர்ந்தார். 

காந்தியடிகள் இவரை சிறையில் சந்திக்க வந்தார். இவரிடம் வள்ளியம்மா நீ ஜெயிலுக்கு சென்றதால் வருத்தப்படவில்லையா? என்று கேட்க வருத்தமா? மீண்டும் கைது செயய்ப்பட்டால் சிறைக்கு செல்ல தயாராக இருக்கிறேன் என்று கூறினார். சிறை தண்டனை உனக்கு மரணத்தை விளைவித்தால் என்ன செய்வது? என்று கேட்க " தாய்நாட்டிற்காக இறக்க விரும்பாதவர் யார்? எனக்கு கவலையில்லை" என்று அந்த 16 வயது இளம்சிறுமி காந்திக்கு பதிலுரைத்தார். காந்தி வள்ளியம்மாவின் நெஞ்சுரதுணிவை கண்டு வியந்தார். இந்த சந்திப்பு நடந்த சில நாட்களுக்கு பிறகு கி.பி.1914 பிப்ரவரி 22ம் தேதி மூன்று மாத சிறை தண்டனை முடிந்து வெளியே வந்த சில மணி நேரத்திலையே இறந்து போனார். தனது 16வது பிறந்த நாள் அன்றே அவர் மறைந்து போனது தான் பெரும் சோகம்.

கி.பி.1914 ஜூலை 12ம் தேதி ஜோஹன்பெர்க்கிலுள்ள ஃபிராம்பேன்டைய்ன் கல்லறையில் நாகப்பன் மற்றும் தில்லையாடி வள்ளியம்மா கல்லறை திறப்பு நிகழ்வில் காந்தியடிகள் கலந்து கொண்டு அடுத்த மூன்று நாட்களில் இந்தியா திரும்பினார். இந்திய திரும்பியதும் தமிழகம் வந்த போது காந்தியடிகள் இவரது தில்லையாடி கிராமத்திற்கு சென்று அங்குள்ள இவரது உறவினர்களின் மத்தியில் இவரது நெஞ்சுரதுணிவையும் தியாகத்தையும் போற்றி புகழ்ந்தார். நாகப்பட்டினம் தரங்கம்பாடி தாலுகாவில் இந்திய அரசால் கி.பி.1971ல் இவருக்கு நினைவு தூண் மற்றும் நினைவு கட்டிடம் கட்டப்பட்டது. அவரது பெயரில் தில்லையாடி வள்ளியம்மை நகர் என்றும் உயர்நிலை பள்ளியும் அவரது நினைவு சின்ன கட்டிடங்களில் இயங்கிவருகிறது. கி.பி.2008 டிசம்பர் 31ம் தேதி இந்திய அரசு இவருக்கு நினைவு தபால்தலை வெளியிட்டு சிறப்பித்தது. நாட்டிற்காக கொண்ட கொள்கைக்காக 16வயது கூட நிரம்பாத இளம் பெண்ணாக இருந்தாலும் தைரியமாகவும் துணிச்சலாகவும் போராட்டத்தை தொடர்ந்து சிறைசென்று மாண்டாலும் அது தனக்கு பெருமையே என்று கூறியது போல புகழுடன் மறைந்தார்.

Comments

Popular posts from this blog

145) குந்தள குமாரி சபத்

146) அம்மு சுவாமிநாதன்

137) காளி பாய்