93) கடலூர் அஞ்சலையம்மாள்

கடலூர் அஞ்சலையம்மாள் (கி.பி.1890-1961) :


இந்திய சுதந்திர போராட்டம் கண்ட வீர பெண்மணிகளுள் ஒருவர். தான் மட்டுமல்லாது தனது 9 வயது மகளுடன் போராட்டம் நடத்தி சிறை சென்றவர். அடுத்த முறை ஒத்துழையாமை போராட்டத்தின் போது கர்ப்பிணியாக இருந்தாலும் சிறை சென்று குழந்தை பிறப்பிற்காக பரோலில் வந்தாலும் குழந்தை பிறந்த 2 வாரத்தில் குழந்தையோடு சிறை தண்டனையை அனுபவித்த வீர பெண்மணி. காந்தியடிகளால் "தென்னிந்தியாவின் ஜான்ஸி ராணி" என்று அழைக்கப்பட்டவர்.

இவர் கி.பி.1890 ஜூன் 1ல் கடலூரில் முத்துமணி படையாச்சி - அம்மாகண்ணு தம்பதியருக்கு மகளாக பிறந்தார். இவரது பள்ளிப்படிப்பு 5ம் வகுப்புடன் நின்று போனது. இவர் முருகப்பா என்ற பத்திரிக்கை முகவரை திருமணம் செய்தார். கணவர் விடுதலை போராட்ட களத்தில் இவர் சேர தூண்டுகோலாக இருந்தார். கி.பி.1921ல் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டார். விடுதலை போராட்டத்திற்காக தனது குடும்ப நகைகளையும் நிலங்களையும் விற்று செலவு செய்தார். இவரது தைரிய குணம் கண்டு வியந்த பாரதியார் புதுச்சேரியில் இருந்த போது கடலூருக்கு வந்து இவரை சந்தித்தார். கி.பி.1927ல் நீல் சிலை அகற்றும் போராட்டத்தில் தனது கணவர் முருகப்பா மற்றும் 12 வயது மகள் அம்மாகண்ணு (பின்னர் இவரது பெயர் லீலாவதி என்று காந்தி பெயர் மாற்றினார்) சகிதம் சிறை சென்றார். இந்த நீல் தான் கி.பி.1857 சுதந்திர போராட்ட களத்தில் ஆயிரக்கணக்கான சுதந்திர போராட்ட வீரர்களை கொன்று குவித்தவர். சென்னையில் இருந்த நீல் சிலையை அகற்றும் போராட்டம் சோமையாஜூலு தலைமையில் நடந்தது. அதில் கலந்து கொண்டு சிறைக்கு சென்ற இவரை வந்து சந்தித்த காந்தியடிகள் இவரின் போராட்ட குணத்தை கண்டு வியந்தார். இவரது மகளான அம்மாகண்ணுவுக்கு லீலாவதி என்று பெயர் மாற்றம் செய்தார். விடுதலைக்கு பின்னர் அவரை தனது வார்தா ஆஸ்ரமத்திற்கு அழைத்து சென்றார். 

கி.பி.1930ல் உப்பு சத்தியாகிரகத்தின் போது போலீஸாரின் தாக்குதலில் பலத்த காயமடைந்தார். கி.பி.1931ல் அகில இந்திய மகளிர் காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை தாங்கினார். கி.பி. 1932 ல் இவர் கர்ப்பமாக இருந்த போதும் அதை பற்றி கவலைப்படாமல் போராட்ட களத்தில் இறங்கி சிறை சென்றார. பிணையில் ஒரு மாதம் வெளியே வந்து மகனை பெற்றெடுத்த பின்னர் மகன் பிறந்த 2 வாரத்தில் மகனுடன் சென்று சிறை தண்டனை அனுபவித்தார். கி.பி.1934ல் காந்தியடிகள் இவரை சந்திக்க கடலூர் வந்த போது இவருக்கு அவரை சந்திக்க தடை போலீஸாரால் விதிக்கப்பட்டது. தடையை மீறி பர்தா அணிந்து முஸ்லீம் பெண் போல காந்தியடிகளை சந்தித்து திரும்பினார். பின்னர் இவரது வீட்டுக்கு காந்தியடிகளை அழைத்து வந்து உபசரித்தார். இந்த நிகழ்வினால் காந்தியடிகள் இவரை "தென்னிந்தியாவின் ஜான்ஸி ராணி" என்று அழைத்தார். இவரது மகளான லீலாவதி கடலூர் சிறையில் தாய் தந்தை அடைக்கப்பட்ட போது அவரை பார்க்க வந்த போது கார்ல் மார்க்ஸின் "டாஸ் கேப்பிடல் " என்ற நூலை "மூலதனம்" என்ற பெயரில் மொழிமாற்றம் செய்த ஜமத்கனியை காதலித்தார். தாய் தந்தை ஒப்புதல் அளித்தாலும் நாடு சுதந்திரம் பெற்ற பின்னரே இவரது மகளான லீலாவதி ஜமத்கனியை மணந்தார். விடுதலை போராட்ட களத்தில் தனிநபர் சத்தியாகிரகம், ஒத்துழையாமை இயக்கம், உப்பு சத்தியாக்கிரகம், மது ஒழிப்பு, வெள்ளையனே வெளியேறு, நீல் சிலை அகற்றும் போராட்டம் என 9 போராட்டங்களில் கலந்து கொண்டு  மொத்தம் 4 1/2 வருடங்கள் சிறை தண்டனை அனுபவித்தார். கி.பி.1937, 1946ல் என்று இரண்டு முறை கடலூரில் இருந்து சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் சுதந்திரம் அடைந்தவுடன் 3 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவரது வீடு எப்போதும் தொண்டர்களால் நிறைந்து காணப்படும். அவர்களுக்கு வேண்டிய உணவை இவர் எப்போதும் தயாரித்து கொடுத்து உபசரித்தார். தனது தொகுதி மக்களுக்கு இயன்றவரை நல்ல திட்டங்களை செயல்படுத்தினார். குடிநீர் பிரச்சினை சமயத்தில் வீராணம் ஏரியிலிருந்து புவனகிரி செல்லும் கால்வாயிலிருந்து  தீர்த்தாம்பாளையத்திற்கு கால்வாய் வெட்டி குடிநீர் பிரச்சினையை தீர்த்தார். அதனால் இன்றும் அந்த கால்வாய் "அஞ்சலை கால்வாய்" என்றே அழைக்கப்படுகிறது.  இவர் கி.பி.1961 பிப்ரவரி 20ல் சிதம்பரத்தை அடுத்துள்ள சி.முட்லூர் என்னும் கிராமத்தில் காலமானார். விடுதலை போராட்ட களத்தில் இறங்கிய முதல் தென்னிந்திய பெண்மணியாக ஒத்துழையாமை இயக்க போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைக்கு பலமுறை சென்றும் துணிச்சலுடன் தடையை மீறியும் சுதந்திரத்திற்கு பிறகும் சட்டமன்ற உறுப்பினராகி மக்கள் நலன் ஒன்றே என்று பாடுபட்ட உத்தம பெண்மணி தான் இந்த கடலூரின் அஞ்சலையம்மாள் என்ற வீர தாய். தமிழக அரசு இவருக்கு கடலூரில் சிலை வைத்து கெளரவப்படுத்தியது.

Comments

Popular posts from this blog

145) குந்தள குமாரி சபத்

146) அம்மு சுவாமிநாதன்

137) காளி பாய்